Siva Sakthi Andhathi in Tamil:
சிவசக்தி அந்தாதி:
நற்றவம் செய்தே நங்கையாய்ப் பிறந்தேன்
கற்றவர் பலருள் கருவியாய் இயங்கியே
பற்றற்று இருந்து (சிவ) சக்தியைப் பாடிட
நற்றுணையாய் வா நர்த்தன கணபதி
மனமெலாம் உந்தன் நினைவிலே இருந்தவென்
கனவிலே தோன்றி நீ பாடவே பணித்தாய்
இனமிலா இன்பமே அடைந்த என் உள்ளத்தில்
நனவிலும் நின்றிடு அருள் சிவ கலையே
கலைமகள் அலைமகள் சாமரம் வீசிட
மலைமகள் லலிதை நீ நளினமாய் அமர்ந்திட
மலையுறை ஈசனும் மலருறை அயனும்
அலைகடல் அரங்கனும் களிப்பினில் மூழ்கவே ॥ 1 ॥
மூழ்கிய மலைதனை முதுகினில் தாங்கிய
ஆழ்கடல் அனந்தனின் அழகிய சோதரி
ஏழ்கடல் நடுங்கிடச்செய்திட்ட அசுரரை
வீழ்ந்திடச்செய்த ஸ்ரீ லலிதா தேவியே ॥ 2 ॥
தேவி நின் திருவடி அடைந்தே இப்பார்
மேவிய தேவரும் நலம் பல பெற்றனர்
காவியத்தளைவியாம் காமாட்சி அம்மையே
ஓவியந்தனிலே உமையே படைத்தேன் ॥ 3 ॥
படைக்கும் பிரமனுக்கும் காக்கும் மாலுக்கும்
கிடைக்காச்சோதியாய் மலைதனில் ஒளிர்ந்து
விடைக்கண் மேவிய விமலன் தேவி நின்
கடைக்கண் அருளை அடைந்தனர் பலரே ॥ 4 ॥
பலவாகி ஒன்றாகி ஒன்றுக்குள் அணுவாகி
அலகிலா அழகுடை அபிராமி வல்லியே
நிலமிசை வாழ்ந்திட்ட அபிராமி பட்டர்க்கு
நிலவிலா நாளிலே நிலவினைக்காட்டினாய் ॥ 5 ॥
காட்டிய மதியினை ஒத்த முகத்தினள்
தீட்டிடும் மையினை ஒத்த குழலினள்
ஊட்டிய அமுதை உண்ட சம்பந்தர்
ஈட்டினர் இறையருள் இசைந்து பாடவே ॥ 6 ॥
பாடல் வல்லவர் கூடும் மூதூர்
கூடல் மாநகர் கோவின் பாவாய்
கோடல் முத்தினைக் குருபரர்க்கு அளித்த
ஆடல் அழகியே அங்கயர்க் கண்ணியே ॥ 7 ॥
கண்ணின் மணியே மணியின் ஒளியே
விண்ணில் பறந்த வீரமாகாளியே
மண்ணை உண்ட கண்ணனின் சோதரி
எண்ணும்போதே என்னுள் உறைவாய் ॥ 8 ॥
உறைபனி நிறைந்திடும் மலைதனில் உறையும்
பிறைமதி அணிந்த பெம்மான் தேவியே
நிறைமணி விழாவினை விரும்பிடும் அன்னையே
குறைதனைத்தீர்த்திடும் குமரி நங்கையே ॥ 9 ॥
நங்கையின் நயனங்கள் நல்கும் அன்பினால்
பொங்கிடும் மங்களம் எங்கும் திண்ணமே
கங்கையைத்தரித்திடும் ஈசனின் சிவையே
பங்கயச்செல்வி நின் பதமலர் பணிந்தேன் ॥ 10 ॥
பணிந்தே பெற்றனன் மந்திர உபதேசம்
துணிந்தே உண்டனன் ஆலால விடந்தனை
தணிந்தே நிறுத்தினை விடந்தனைக்கண்டத்தில்
பணிந்தே ஏத்துவர் பலரும் நின் அடியினை ॥ 11 ॥
அடியேன் துயருறும் நேரத்தில் எல்லாம்
கடிதினில் வந்தெமைக்காத்திடும் ஈஸ்வரி
இடியென இன்னல்கள் வந்திடும் போழ்திலும்
வடிவுடை நாயகி காத்தே அருள்வாய் ॥ 12 ॥
அருள்மழை பொழிந்திடும் அகிலாண்ட நாயகி
கருணைமழை பொழிந்திடும் காமாட்சி தேவியே
ஞானமழை பொழிந்திடும் சரஸ்வதி தேவியே
கனகமழை பொழிந்திடும் லட்சுமியும் நீயே ॥ 13 ॥
நீயே கதியென நினைத்திடும்போதே
தாயே வந்து நீ தயைபுரிந்திடுவாய்
சேயேன் எனை நீ மறந்தே விடினும்
ஓயேன் உந்தன் மலரடி துதிப்பதை ॥ 14 ॥
துதி செய்திடவே (குரு) சங்கரர் அமைத்த
பதியாம் கொல்லூர் அதனில் பாயும்
நதியாம் சௌபர்ணிகைக் கரையில்
மதியென ஒளிர் மூகாம்பிகைத்தாயே ॥ 15 ॥
தாயாய் வந்தே தரிசனம் தந்தாய்
மாயாப்பிறவியை மாய்த்திடச்ச்செய்வாய்
சேயாய்ப்பிறந்தாய் இமயமலையிலே
பேயாய்த்திரிவோரை அடக்கிடவேன்றே ॥ 16 ॥
வென்றிடும் எண்ணத்தில் வந்த அசுரரைக்
கொன்றே குவித்தாய் குவலயந்தனிலே
நன்றியாய் தேவரும் பூமாரி பொழிந்திட
குன்றினில் அமர்ந்தாய் சாமுண்டி அன்னையே ॥ 17 ॥
அன்னை பராசக்தி அருளுள்ளம் கொண்டுநீ
தென்னைகமுகு நிறை தஞ்சை நகரிலே
புன்னை நல்லுரிலே பொலிவுடன் அமர்ந்தே
என்னை ரட்சிப்பாய் முத்து மாரியே ॥ 18 ॥
மாரியே பொய்ப்பினும் தான் என்றும் பொய்யாது
வாரியே வழங்கிடும் வண்டார் குழலியே
காரிருள் தன்னிலும் காத்திடும் நீயே
தேரினில் வருவாய் கருமாரி அம்மையே ॥ 19 ॥
அம்மையே என்று அழைத்திடும் போதிலே
வெம்மை நோயையும் தணிந்திடச்செய்வாய்
செம்மை நிறம் தனை விரும்பிடும் தேவியே
உம்மை என்றுமே உறுதியாய்ப் பற்றினேன் ॥ 20 ॥
பற்றிடும் வேளையில் பகலவனாய் வந்து
சுற்றமும் சுகமாய் வாழ்ந்த்திடச்செய்வாய்
கற்றிடும் யாவர்க்கும் கல்வியைக்கொடுத்திடு
நற்றமிழ் வாணியே லலித கலா மயிலே ॥ 21 ॥
மயிலாய்த் தோன்றி பூஜைகள் செய்தே
கயிலாயம் உறை ஈசனை மணந்து
மயிலாபுரியுறை மங்கயர்க்கரசியே
ஒயிலாய் வருவாய் கற்பகவல்லியே ॥ 22 ॥
வல்வினை நல்வினை ஆக்கிடும் தேவியே
மெல்லிடை மங்கையே தண்மதி அணிந்தே
கல்லினுட் தேரைக்கும் கனிவாய் அமுதூட்டும்
செல்வி நின் கருணைக்கு எல்லை இல்லையே ॥ 23 ॥
எல்லை இல்லாத எழில் மிகு ஈஸ்வரி
வில்லையொத்த புருவமுள்ளவள்
தில்லைக்கூத்தனின் சிவகாம சுந்தரி
நெல்லையில் வாழ் காந்திமதியே ॥ 24 ॥
மதியணி பிரானின் மனங்குளிர் நாயகி
பதியுடன் ரிடபத்தில் பவனி வரும் உனை
கதியென நினைக்கும் மானிடர் பலரின்
விதியினை வென்றிட வேகமாய் வருவாய் ॥ 25 ॥
வருவதை அறியாது வாடிடும் போது
கருவியாய் வந்தே அதனைக்களைவாய்
குருவாய் விளங்கும் குகனின் தாயே
திருவாய் மலர்ந்தே திறனை அளிப்பாய் ॥ 26 ॥
அளித்திடு எந்தனுக்கு ஆன்ம சக்தியை
களித்திடச்செய்திடும் நீயே நிலமாய்
வெளியாய் காற்றாய் நீராய் நெருப்பாய்
ஒளிர்வாய் ஒளியினைத் தந்திடுவாயே ॥ 27 ॥
தந்தேன் அபயம் என்றே உரைத்து
வந்தே அருகினில் அமர்ந்து விடம்மா
கந்தன் கணபதி அன்புத்தாயே
உந்தன் புகழை இயம்புதல் இயலுமோ ॥ 28 ॥
இயலாச்செயலையும் இயக்கிடச்செய்து உன்
தயவால் தருமமே தழைத்திடச்செய்தாய்
அயலார் வந்தெமை எதிர்த்திடும்போதே
புயலாய் அவர் தமை விரட்டியே விடுவாய் ॥ 29 ॥
விடு விடு விடுவென விரட்டிடுவோரையும்
சிடு சிடு சிடுவேனச்சீரிடுவோரையும்
கடு கடு கடுவென கர்ஜிப்போரையும்
நடு நடு நடுங்காமல் காத்திடு காளியே ॥ 30 ॥
காளியின் ரூபமாய் ஆதிபராசக்திநீ
யாளியின் மீதே அமர்ந்தே வருவாய்
கோளிலி எம்பெருமான் தேவியே
தாளினைப்பற்றினேன் தயாபரியே ॥ 31 ॥
பரிதனை நரியாக்கி நரிதனை பரியாக்கிய
விரிசடையோனின் வியன்மிகு நாயகி
திரிபுர சுந்தரி திவ்யஸ்வரூபிணி
கரிமுகத்தோனின் அன்னை பராசக்தி ॥ 32 ॥
சக்தியின் மலரடி சத்தியமாய்ப்பணிய
பக்தியும் பெருகிடும் பாவமும் விலகிடும்
முக்தியே கிடைத்திடும் மும்மலம் அகன்றிடும்
யுக்தியே வேண்டாம் சத்தியம் நம்பினேன் ॥ 33 ॥
நம்புவோர் அனைவரும் நற்கதி பெறுவர்
தும்புரு நாரதர் தேவரும் பணிந்ததால்
கொம்புடை மகிஷனைக் கொன்றே அழித்தனை
சம்புவின் சிவை மகிஷாசுர மர்த்தினி ॥ 34 ॥
மர்த்தினி மாதங்கி மாலினி சூலினி
வர்த்தினி வாராஹி வித்யாஸ்வரூபிணி
நர்த்தினி நந்தினி நாராயணி என
அர்ச்சிக்க நாமங்கள் பலப்பல கொண்டாய் ॥ 35 ॥
கொண்ட நாயகனின் உயிரைக்காக்கவே
கண்டந்தனிலே விடந்தனை நிறுத்தினாய்
கொண்டல் போன்ற கண்கள் பெற்றவளே
தொண்டை மண்டலமுறை காமட்சித்தாயே ॥ 36 ॥
காமனை எரித்திட்ட ஈசனின் சிவையே
வாமனன் சோதரி வஜ்ரேச்வரி நீ
சோமானவன் சொல் கேளாமலேதான்
கோமகன் தக்கன் யாகம் சென்றனை ॥ 37 ॥
சென்றவள் தனையே தகப்பனும் வருவாய்
என்றழையாமலே கர்வம் கொண்டவன்
நின்றதைக் கண்டனள் தாட்சாயணியும்
குன்றிய மனதுடன் குதித்தனள் (யாக) குண்டத்தில் ॥ 38 ॥
குண்டத்தினின்று தோன்றிய தேவிதான்
கொண்ட ஈசனை அடைய எண்ணிப்பூ
மண்டலந்தன்னில் தவமியற்றிட நீல
கண்டனும் மகிழ்ந்தே மணந்தார் மங்கையை ॥ 39 ॥
மங்கை தாடகை (மலர்) சாத்திடும் வேளையில்
கங்கையணி ஈசன் தன சிரம்தனை சாயத்தனன்
குங்கிலியக்கலையர் அச்சிரம்தனை நிமிர்த்திய
எங்கள் செஞ்சடையோன் பெரிய நாயகியே ॥ 40 ॥
நாயகன் நாரணன் சோதரியே யான்
நேயமுடன் பல நன்மைகள் புரிந்திட்டு
தூய மனதுடன் நின்பதம் பணிந்திட
தீய வினைகள் அகற்றி அருளே ॥ 41 ॥
அருள் பெற்ற அடியவர் அனையோருக்கும்
பொருளினை ஈந்திடும் புவனேஸ்வரியே
இருளினை அகற்றிடும் இச்சா சக்தியே
மருள்வதை மாய்த்திடும் மாயா ரூபியே ॥ 42 ॥
ரூபமும் அரூபமும் ஆனவள் நீயே
கோப தாபங்களைத் தீர்த்திடுவாயே
சாப விமோசனம் பெற்றிடச்செய்தே
தாபம் விலக்கிடு பைரவித்தாயே ॥ 43 ॥
பைரவி ராகத்தை விரும்பியே கேட்பாய்
வைரம் வைடூரியம் முத்தும் அணிவாய்
வைரவி என்னும் பெயரும் கொண்டாய்
பைரவரும் உன் சந்நிதி காக்கவே ॥ 44 ॥
காக்கும் கரங்களால் கைகளைக்காத்திடு
நோக்கும் விழியினால் கண்களைக்காத்திடு
நீக்கமற நிற்கும் நீலாயதாட்சியே
ஏக்கம் மிகக்கொண்டேன் எதிரில் வந்திடு ॥ 45 ॥
வந்த நொடியிலே வறுமை அகற்றிடு
கந்தனின் தாயே கவலைகள் போக்கிடு
சொந்த பந்தமென்ற தளையை அகற்றிடு
எந்த நிலையிலும் (என்) அருகில் நின்றிடு ॥ 46 ॥
நின்ற கோலத்தில் நிம்மதி அளிப்பாய்
கன்று குணிலாய் எறிந்தவன் சோதரி
நன்று தீதென்று இல்லாதவளே நான்
என்றும் உந்தன் தாள் பணிந்திடுவேன் ॥ 47 ॥
வேத மெய்ப்பொருள் ஐந்தெழுத்தினை நீ
நாதனிடம் கற்க நினைத்தே ஈசனை
ஓதவே செய்தாய் காளத்தியிலே நின்
பாதமே (கதி) ஞானப்ப்ரசுன்னாம்பிகையே ॥ 48 ॥
அம்பிகை நீ அருள் பெற்ற தலந்தனில்
வெம்புலி பன்றி இவற்றினைக்கொன்றே
வெம்பசி ஆற்றிடும் வேடன் திண்ணனும்
நம்மையே ஆண்டிடும் ஈசனைக்கண்டனன் ॥ 49 ॥
கண்டதும் களிப்புடன் பன்றியைச்சமைத்து
துண்டங்களாக்கி சுவையும் பார்த்து
கண்டத்தில் நீரை நிரப்பிக்கொண்டு
அண்டினன் ஈசனின் இருப்பிடம் தனையே ॥ 50 ॥
இடபவாகனம் மேவிய ஈசர்க்கு
திடமுடன் அவ்வூனினைப் படைத்தனன்
கடவுளும் அதனை அன்புடன் ஏற்றனர்
கடமை மறந்தனன் வீடும் துறந்தனன் ॥ 51 ॥
துறந்த முனிபோல் ஒவ்வோர் தினமும்
பறந்து பறந்தே ஈசனை வணங்கினான்
சிறந்த பக்தனைசோதிக்க நீல
நிறமிடற்றோனும் மனதினில் கருதினார் ॥ 52 ॥
கருதிய செயலை முடித்திடக்கண்ணில்
குருதியை வடித்தார் காளத்தியப்பரும்
அருகிலே வந்து திண்ணனும் கண்டான்
பெருகும் குருதியை நிறுத்திடப் பார்த்தான் ॥ 53 ॥
பார்க்கும் வேளையில் குருதி நில்லாமையால்
யார்க்கும் தோன்றா மதியினால் தான்
பார்க்க இருக்கும் (தன) கண்கள் தனையே
வார்க்க அம்பினால் குத்தியே எடுத்தான் ॥ 54 ॥
எடுத்த கண்ணினை ஈசர்க்கு அப்பினான்
கொடுத்த கண்ணினால் குருதியும் நின்றது
அடுத்த கண்ணினில் குருதியைக்கண்ட தன
அடுத்த கண்ணையும் எடுக்க முயன்றான் ॥ 55 ॥
முயன்ற வேளையில் ஈசரும் அவனை
இயன்றதற்கு மேல் செய்தனை நீயென
வியந்தே நில்லு கண்ணப்ப என்றே
இயம்பிடத் திண்ணனும் கண்ணினைப்பெற்றான் ॥ 56 ॥
கண்ணினைப் பெற்ற திண்ணன் வேடனும்
கண்ணப்பர் ஆயினர் இத்தலந்தனிலே
விண்ணோர் கூறும் பஞ்சபூதங்களுள்
ஒண்ணாய் விளங்கிடும் வாயு இத்தலமே ॥ 57 ॥
இத்தலந்தனிலே முக்திபெற விழைந்த்திட்ட
அததியும் சிலந்தியும் காலமாம் பாம்பும்
எத்தினமும் ஈசனைக் காக்க எண்ணி
நித்தியப் பூசையால் முக்தியும் பெற்றன ॥ 58 ॥
முக்தி தந்திடும் பலப்பல தலங்களுள்
சக்தி பீடத்தில் ஒன்றாய் விளங்கிடும்
பக்தி மனதுடன் பலரும் வந்தே
சக்தியை வழிபடும் தலம் மாங்காடே ॥ 59 ॥
மாமரங்களடர்ந்த மாங்காட்டினிலே
காமனை அழித்த ஈசனின் நாயகி
வாமனன் நாரணன் நலம் மிகு சோதரி
சோமனை அடையவே தவமியற்றினளே ॥ 60 ॥
இயற்றிய தவத்தினை இயம்புதல் இயலுமோ
முயற்சியால் பஞ்சாக்னியை வளர்த்தே
புயலாய் வீசிடும் அக்னியில் காம
நயனங்கள் கொண்டவள் நின்றால் விரலினால் ॥ 61 ॥
விரலினால் நின்றே இயற்றிய தவத்தினை
அரவணி பிரானும் பார்த்தே மகிழ்ந்து
விரைவில் செல்வாய் காஞ்சி மாநகர்க்கென
அரனும் பணித்திடச் சென்றனள் கஞ்சிக்கே ॥ 62 ॥
கஞ்சி மாநகர் கவின்மிகு மூதூர்
கொஞ்சும் அழகுடன் ஒளிர்ந்திடும் ஓரூர்
பஞ்ச பூதங்களுள் பூமித்தலமாம்
நெஞ்சையள்ளும் பழம்பெரு நகரே ॥ 63 ॥
நகரேஷு காஞ்சியென காளிதாசன் புகழ்ந்த
நகரினில் வந்தே மாமரத்தடியினில்
நிகரிலாத் தவந்தனை பின்னும் தொடர்ந்ததை
பகரவே விழைந்து நினைத்தேன் மனதினில் ॥ 64 ॥
மனதினில் திடமுடன் ஈசனை மணக்கவே
சினமது இன்றியே சிவபக்தியினால்
கனமிலா மணலால் லிங்கமே அமைத்து
தினமும் பூஜையை அன்புடன் செய்தனள் ॥ 65 ॥
செய்த பூஜையில் மகிழ்ந்த ஈசனும்
பொய்கை நீரையே வெள்ளமாக்கினார்
செய்வதறியாது தவித்திடும் வேளையில்
உய்விக்க வந்தார் ஏகாம்பரனார் ॥ 66 ॥
ஏகாம்பரனார் எழிலுடன் வந்தே
ஏகாந்தமாய் நின்ற காமாட்சி தேவியை
பாகாய்க் கரையும் பரிவுடன் அன்பாய்
லோகாம்பிகையை மணமே புரிந்தார் ॥ 67 ॥
புவிதனில் ஷண்மதம் அமைத்த சங்கரர்
கவிகள் பலருடன் வாதம் புரிந்தவர்
கவின்மிகு சங்கரமடம்தனை அமைத்ததை
நவிலுதல் இங்கே அவசியம் அன்றோ ॥ 68 ॥
அம்புலி அணிந்தவன் அப்புவாய் அமர்ந்த
ஜம்புகேஸ்வரரின் அகிலாண்டேஸ்வரி நின்
வெம்மை தீரவே ஆதி சங்கரரும்
அம்மை எதிரிலே கணபதி அமைத்தார் ॥ 69 ॥
கணபதி மீது நீ கொண்ட அன்பினால்
குணமதில் குளிர்ச்சியைப் பெற்றவளாகியே
கணமதில் கருணையைப் பொழிந்திடும் தாயே
ருணமதைத் தீர்த்தே வைத்திடுவாயே ॥ 70 ॥
வானமும் பஞ்ச பூதங்களுள் ஒன்றாம்
வானாய் நின்றான் சிதம்பரம் தனிலே
மானும் மழுவும் ஏந்திய ஈசன்
கானமுடன் தாளத்திற்கு நடனமாடியே ॥ 71 ॥
நடம் புரிந்திடும் நடராசன் திருக்கோயில்
புடம்போட்ட பொன் வேய்ந்த கூரைக்கீழ்
படம் எடுத்திடும் பாம்பை அணிந்தவன்
விடம் உண்டவன் ஆனந்தமாய் ஆடினார் ॥ 72 ॥
ஆடிய பாதனின் அன்புடை சிவகாமி
நாடியவர்க்கு நன்மையே புரிந்து நீ
வாடிய பயிரினைக்காத்த்டும் தாய் போல்
கூடிடும் பக்தரின் குறைதனைத் தீர்ப்பாய்
தீயாம் பஞ்ச பூதங்களுள் ஒன்றாம்
தீயாய் நின்றான் அண்ணாமலையில்
சேயாய் எண்ணியே மக்களைக்காத்திடும்
தாயாம் உண்ணாமலையம்மையுடன் ॥ 73 ॥
அம்மை அப்பனின் புகழ்தனைப் பாடியே
வெம்மை தணித்திடும் பௌர்ணமி நிலவிலே
உம்மைச்சுற்றியே கிரிவலம் வந்திடும்
எம்மையே நீர் ஏற்றருள்வீரே ॥ 74 ॥
அருவியாய்க் கருணை மழை பொழிந்திடும்
திருவுடைத் திருவண்ணாமலை தனிலே
மருவும் மலையில் உலவும் முனிவர்கள்
குருவாய் அமர்ந்தனர் பலரும் என்றுமே ॥ 75 ॥
என்றும் அழியாக் குருவருள் பெறவே
சென்றிடும் மலையாம் சோதியின் மலையில்
கன்றினைக்கண்ட தாயின் அன்பு போல்
சென்றவர்க்கருளும் ரமணாஸ்ரமமே ॥ 76 ॥
ஆஸ்ரமம் என்பது ஒன்றிலை இங்கே
ஈஸ்வரனின் அங்கமாய் அமைந்த
ஈஸ்வரியின் புதல்வாராய்ப் பிறந்தோர்
ஆஸ்ரம வாழ்க்கை வாழ்கின்றனரே ॥ 77 ॥
வாழ்வினில் பலவிதம் கண்ட அருணகிரி
பாழ்மனம் சஞ்சலம் அடைந்தபின் கீழே
வீழ்ந்திட இருந்தோனைக் காத்த முருகன்
ஆழ்ந்த ஞானத்தை அளித்தனன் அவர்க்கே ॥ 78 ॥
அளித்த ஞானத்தால் அருமையாய்ப் பாடினார்
தெளிந்த பக்தியால் பரவசமடைந்து
களித்து மகிழவே திருப்புகழ் தனையே
கிளியாய் அமர்ந்தார் கோபுர வாயிலில் ॥ 79 ॥
வாவென அழைத்திடும் போதே வந்து
காவெனக் கூப்பிடும் போதே காத்து
மாவேனக்கதரிடும் கன்றினையோத்த
சேய் எனக்கருவாய் திரிபுர சுந்தரி ॥ 80 ॥
திருவாரூர் வாழ் கமலாம்பிகையே
திருக்கருகாவூர் கர்ப்ப ரக்ஷாம்பிகையே
திருவையாற்றில் தர்மசம்வர்த்தினி
திருமீயச்சூரமை லலிதாம்பிகையே ॥ 81 ॥
அம்பிகை கௌரியும் கடுந்தவம் இயற்றிய
செம்மலை கொண்ட திருச்செங்கோட்டில்
நம்பிரான் நங்கையைப் பாகமாய்க் கொண்டே
உம்பரும் போற்றவே சைவச்க்தியானார் ॥ 82 ॥
சக்தியும் சிவனும் ஒன்றாய் இணைந்ததால்
சக்தியைப் பாடுங்கால் சிவனையும் பாடவே
சக்தியே தந்தது ஞானசக்தி அச்
சக்தியே நித்தமும் மக்களைக் காக்கும் ॥ 83 ॥
காக்கும் கடவுளர் அம்மையப்பனின்
நோக்கும் விழியினால் நோய்கள் அகன்றிடும்
தாக்கும் தாக்குதல் தன்மை நீங்கிடும்
வாக்கில் வளத்துடன் வன்மை அளித்திடும் ॥ 84 ॥
அருணன் இந்திரன் அம்புலி குபேரன்
வருணன் அனைவரும் வணங்கிடும் அன்னை
தருணம் வரும் வரை தயங்கி நிற்காமல்
கருணை உள்ளத்தால் காத்திடுவாயே ॥ 85 ॥
காத்திடும் கடவுளர் ஒன்றேயாயினும்
நேத்திரத்தாற்கண்டு பரவசமடைந்து
தோத்திரம் செய்து புண்ணியம் பெறவே
க்ஷேத்திரம் பலவும் தொன்றியதன்றோ ॥ 86 ॥
தோற்றம் அளித்திடும் ஈசனின் தலங்களில்
நாற்றம் மிகவுடை மலர்களால் அர்ச்சித்தே
மாற்றம் மனதினில் மிகுதியாய்ப் பெற்றே
ஏற்றம் பெறுவது மிகையிலை திண்ணமே ॥ 87 ॥
திண்ணமாய் இதனை நம்புவோர்க்கு முக்
கண்ணுடை ஈசனும் காமாட்சி அன்னையும்
எண்ணிலா நலன்களை இன்பமாய் நல்கியே
மண்ணினில் வாழவே செய்வர் வரத்தால் ॥ 88 ॥
வரமதால் புவிதனில் இறைவனின் புதல்வராய்
பரமதில் பரவிய அறுபத்து மூவரும்
சிரமதில் கங்கையைக் கொண்ட ஒருவனே
பரமென எண்ணியே அப்பனைப் பாடினர் ॥ 89 ॥
அப்பரும் பாடினார் அரனைப் போற்றியே
செப்பரும் தமிழிலே இசைநயத்துடன்
முப்புரம் எரித்த சிவனைப் பாடிட
அப்புரமமைந்த அம்மையும் அருளினள் ॥ 90 ॥
அன்று தடுத்தாட் கொளப்பட்ட சுந்தரர்
நின்று பாடினார் திருவொற்றியூர் தனில்
கொன்றை அணிந்த பிரானின் சந்நிதியில்
நன்று மணம் புரிந்தார் சங்கிலி தனையே ॥ 91 ॥
சங்காபிஷேகம் தனை விரும்பிடும் நாயகன்
கங்கையணிந்தவன் புகழைப் பாடினார்
மங்காப் புகழெய்திய மணிவாசகரும்
செங்கலும் உருகிடும் திருவாசகந்தனை ॥ 92 ॥
தனக்கமுதூட்டியதாரேன் தந்தை வினவ
எனக்கமுதூட்டியது தோடுடைய செவியன் என
மனக்களிப்புடன் பாடிய சம்பந்தர்
தினம் தினம் ஈசனைப் பாடியே மகிழ்ந்தார் ॥ 93 ॥
பாடுவர் ஆடுவர் பரமனை அடையவே
நாடுவர் அவனது இணையடி நீழலே
தேடுவர் அவனிடம் ஞானத்தைப் பெறவே
கூடுவர் கோயிலில் தம் வினை தீரவே ॥ 94 ॥
தீராப் பசியினைத்தீர்த்திடும் எண்ணத்தில்
தாராளமாய் அளித்திடும் அன்னத்தை
ஏராளமாய் கோயிலில் வழங்கியே
பேரானந்தம் அடைந்திடுவார்களே ॥ 95 ॥
வாழ்வினில் வளம்பெற எண்ணுவோர் கோயிலில்
தாழ்மையுடன் பல தொண்டுகள் செய்து
ஊழ்வினை தீர்ந்து உய்வும் பெற்று
ஏழ்மையும் நீங்கி எழிலுடன் விளங்குவர் ॥ 96 ॥
விளக்கினை எரித்திட எண்ணையும் நல்கி
விளக்கமாய் ஆன்மிக நல்லுரையாற்றி
குளத்தினை எப்போதும் தூய்மையாய் வைத்தே
வளத்துடன் நீடூழி வாழ்வார் வையத்துள் ॥ 97 ॥
வைகறை நீராடி நல்லாடை உடுத்தி
மெய்யில் முழுவதும் திருநீறு பூசி
கையில் கற்பூரம் பூ பழம் கொண்டு
ஐயன் இணையடி தொழுதிடச்செல்வோம் ॥ 98 ॥
செல்வம் நற்குணம் திருவருள் பெற்று
கல்வி கேள்விகளில் திறமையும் பெற்று
நல்லோர் பலரின் ஆசியும் பெற்றே
பல்லாண்டு பல்லாண்டு புவிதனில் வாழ்க ॥ 99 ॥