நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க!
குழந்தைகள் நோயின்றி நலமுடன் வாழ.
‘திருப்பாச்சிலாசிரமத்துறை எந்தையே! வைத்தியநாதனான நின்னை மறந்து
நாயேன் எங்கெங்கோ என் மகவின் பிணிதீர வேண்டி மருத்துவரைத் தேடி
அலைந்து கொண்டிருந்தேனே!
இதோ என் மகளை உன் முன்னே கிடத்தியுள்ளேன். அவள் நலம் பெற்றெழும்வரை
நாங்கள் இனித் திரும்பப் போவதில்லை! இனி நீயே கதி எம்பெருமானே!’
குழந்தையை எதிரில் கிடத்திவிட்டுக் கதறி அழுது கொண்டிருந்தார் கொல்லி
மழவனார். ‘முயலகன்’ என்னும் ஒருவகை வலிப்புநோய் (பாலாரிஷ்டம் என்றும்
சொல்வர்) தாக்கி இனி ஏதும் செய்வதற்கில்லை என்று மருத்துவர் யாவரும்
கைவிரித்துவிட திருவாசிப் பெருமானிடம் சரண்புகுந்து அழுதிருந்தார்
அம்மன்னர்.
அதே நேரம் காவிரியின் வடகரைத் தலங்களைத் தரிசிக்கும் ஆவலில்
இறைத்தூதாய் அப்பதி நோக்கி வந்து கொண்டிருந்தார் ஞானசம்பந்தப்பெருமான்.
பதிஞானப் பாலுண்ட ஆளுடைப்பிள்ளை திருஞானசம்பந்தர் வருகிறார் என்னும்
செய்தி தீப்போல் பரவ ஊரே உவகையில் திரண்டெழுந்தது. தம் துயரத்தை
மறைத்த மன்னரும் ‘மாநகரம் அலங்கரிமின், மகரதோரணம் நாட்டும்,
பூரணகும்பம் சோதி மணிவிளக்கினொடு தூபம் ஏந்தும்!’ என்று வரிசையாக
ஏவித் தாமும் பிள்ளையாரை எதிர் கொண்டு காத்து நின்றார்.
ஞானசம்பந்தப்பெருமான் வந்திறங்கப் பணிந்து வரவேற்று ஆலயத்துள் அழைத்துச்
சென்றார். வலம்வந்து திருமுன்னர் வணங்கச் சாருங்காலை, உணர்வின்றிக்
கிடக்கும் குழந்தையைக் கண்ட சம்பந்தர் மன்னரை நோக்கி ‘என் இது!’ என்று
வினவ மழவனார் எதிர்இறைஞ்சி ‘அடியேன் பெற்ற பொன் இவளை முயலகன்
என்னும் மீளாப்பிணி சூழ புனிதர்கோயில் முன்அணையக் கொணர்வித்தேன்’ என்று
தம்
மகளின் நிலை விரித்தார்.
பொறுக்குமா அருளாளருக்கு!
தம்பெருந்துயர் மறைத்து என்னை வரவேற்ற இம்மன்னரின் மாண்பென்னே! உன்னைச்
சரண்புகுந்தபின் அறியாச் சிறுமியிவள் இனியும் பிணியில் உழலத் தகுமோ!
ஆலாலவிடத்
தகிப்பில் தம்மில் ஒடுங்கியோர் நிலைகண்டு தாளாது அதைத் தாமருந்திய
தியாகேசர் மணிவளர்கண்டர் எம் எந்தை, இனியிவள் வாடப் பொறுப்பரோ!
பொங்கிய கருணையில் அங்கே கசிவான தண்டமிழ்ப் பதிகம் எழுந்தது.
சேக்கிழார் பெருமான் பாடக் கேட்போம்:
அணிகிளர்தாரவன் சொன்ன மாற்றம்
அருளொடுங் கேட்டந் நிலையின் நின்றே
பணிவளர் செஞ்சடைப் பாச்சின்மேய
பரம்பொருளாயினாரைப் பணிந்து
‘மணிவளர் கண்டரோ மங்கைவாட
மயல்செய்வதோ இவர் மாண்ப’தென்று
தணிவில் பிணிதவிர்க்கும் பதிகத்
தண்டமிழ் பாடினார் சண்பைநாதர்.
பன்னு தமிழ்மறையாம் பதிகம் பாடித்
திருக்கடைக் காப்புச் சாத்தி
மன்னுங் கவுணியர் போற்றி நிற்க
மழவன் பயந்த மழலைமென்சொல்
கன்னியுறு பிணி விட்டு நீங்கக்
கதுமெனப் பார்மிசை நின்றெழுந்து
பொன்னின் கொடி என ஒல்தி வந்து
பொருவலித் தாதை புடையணைந்தாள்.
வன்பிணி நீங்கு மகளைக் கண்ட
மழவன் பெருகு மகிழ்ச்சி பொங்கத்
தன்தனிப்பாவையுந் தானுங்கூடச்
சண்பையர் காவலர் தாளில் வீழ
நின்ற அருமறைப் பிள்ளையாரும்
நீரணி வேணி நிமலர்பாதம்
ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார்
உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார்.
தண்டமிழ்ப் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்திய மாத்திரத்தில் உணர்வு
பெற்றெழுந்த அச்சிறுமி தன் அருமைத் தந்தையிடம் ஓடிச்சென்று கட்டிக்கொள்ள,
அவர்கள் நன்றிப்பெருக்கில் கரைந்தழுது ஞானசம்பந்தப் பெருமானவர் அடிபணிய,
நிலவுலாவிய
நீர்மலி வேணியன் பாதம் ஒன்றிய சிந்தையுடன் பணிகிறார் அவர்.
அரன் நாமம் ஆர்த்தெழுந்தது.
இனி அதிசயம் நிகழ்த்திய அந்த அருட்பதிகத்தைப் பாடுவோம்:
துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடஞ்சூழ
வாரிடமும் பலி தேர்வர்
அணிவளர் கோலமெலாஞ் செய்து பாச்சி
லாச்சிராமத் துறைகின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல் செய்வதோ இவர் மாண்பே. || 1 ||
கலைபுனை மானுரி தோலுடையாடை
கனல்சுடரால் இவர் கண்கள்
தலையணி சென்னியர் தாரணி மார்பர்
தம்மடிகள் இவரென்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி
லாச்சிராமத் துறைகின்ற
இலைபுனை வேலரோ ஏழையை வாட
இடர் செய்வதோ இவரீணடே. || 2 ||
வெஞ்சுடராடுவர் துஞ்சிருள் மாலை
வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர் நெஞ்சிடமாக
நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி
லாச்சிராமத் துறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
சிதைசெய்வதோ இவர் சீரே. || 3 ||
கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
கனல்தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை அணிந்தழகாய
புனிதர் கொலாம் இவரென்ன
வனமலி வண்பொழில் சூழ்தருபாச்சி
லாச்சிராமத் துறைகின்ற
மனமலி மைந்தரோ மங்கையைவாட
மயல்செய்வதோ இவர் மாண்பே. || 4 ||
மாந்தர் தம்பால் நறுநெய் மகிழ்ந்தாடி
வளர்சடை மேற்புனல் வைத்து
மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை
முதிரவோர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி
லாச்சிராமத் துறைகின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச்
சதுர்செய்வதோ இவர் சார்வே. || 5 ||
நீறுமெய்பூசி நிறைசடை தாழ
நெற்றிக் கண்ணாலுற்று நோக்கி
ஆறது சூடி ஆடரவாட்டி
ஐவிரற் கோவண ஆடை
பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி
லாச்சிராமத் துறைகின்ற
ஏறது ஏறியர் ஏழையை வாட
இடர்செய்வதோ இவரீடே. || 6 ||
பொங்கிள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை
வெண்ணூல் புனைகொன்றை
கொங்கிள மாலை புனைந்தழகாய
குழகர்கொலாம் இவரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி
லாச்சிராமத் துறைகின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்
சதிர்செய்வதோ இவர் சார்வே. || 7 ||
ஏவலத்தால் விசயற்கருள் செய்து
இராவணனை யீடழித்து
மூவரிலும் முதலாய் நடுவாய
மூர்த்தியை யன்றி மொழியாள்
யாவர்களும் பரவும்மெழிற் பாச்சி
லாச்சிராமத் துறைகின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்
சிதைசெய்வதோ இவர் சேர்வே. || 8 ||
மேலது நான்முகன் எய்தியதில்லை
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்தியதில்லை
எனவிவர் நின்றதுமல்லால்
ஆலது மாமதி தோய் பொழிற் பாச்சி
லாச்சிராமத் துறைகின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்
பழிசெய்வதோ இவர் பண்பே. || 9 ||
நாணொடு கூடிய சாயினரேனும்
நகுவரவர் இரு போதும்
ஊணொடு கூடிய உட்குந் தகையார் உரை
களவை கொள வேண்டா
ஆணொடு பெண் வடிவாயினர் பாச்சி
லாச்சிராமத் துறைகின்ற
பூணெடு மார்பரோ பூங்கொடி வாடப்
புனைசெய்வதோ இவர் பொற்பே. || 10 ||
அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
ஆச்சிராமத் துறைகின்ற
புகைமலி மாலை புனைந்தழகாய
புனிதர்கொலாம் இவரென்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு
காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலி தண்டமிழ் கொண்டிவையேத்தச்
சாரகிலா வினை தானே. || 11 ||
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
தண்டமிழ்ப் பதிகமிதை ஓதுவோர்தமைவிட்டு முன்செய்த தீவினையால் வந்த
துன்பமெல்லாம் நீங்கும் என்பது ஆளுடைப்பிள்ளையார் அருள்வாக்கு.