11.010 கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
அ௫ளியவர் : நக்கீரதேவ நாயனார்
திருமுறை : பதினொன்றாம் திருமுறை
நாடு : வடநாடு
தலம் : கயிலாயம் (நொடித்தான்மலை)
திருச்சிற்றம்பலம்:
சொல்லும் பொருளுமே
தூத்திரியும் நெய்யுமா
நல்லிடிஞ்சல் என்னுடைய
நாவாகச் -சொல்லரிய
வெண்பா விளக்கா
வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று. 1
பெற்ற பயனிதுவே
அன்றே பிறந்தியான்
கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க்
காளத்திக் – கொற்றவர்க்குத்
தோளாகத் தாடவரம்
சூழ்ந்தணிந்த அம்மானுக்
காளாகப் பெற்றேன் அடைந்து. 2
அடைந்துய்ம்மின் அம்மானை
உம்ஆவி தன்னைக்
குடைந்துண்ண எண்ணியவெங்
கூற்றம் – குடைந்துநும்
கண்ணுளே பார்க்கும்
பொழுது கயிலாயத்
தண்ணலே கண்டீர் அரண். 3
அரணம் ஒருமூன்றும்
ஆரழலாய் வீழ
முரணம்பு கோத்த
முதல்வன் சரணமே
காணுமால் உற்றவன்றன்
காளத்தி கைதொழுது
பேணுமால் உள்ளம் பெரிது. 4
பெரியவர்கா ணீர்என்
உள்ளத்தின் பெற்றி
தெரிவரிய தேவாதி
தேவன் – பெரிதும்
திருத்தக்கோர் ஏத்துந்
திருக்கயிலைக் கோனை
இருத்தத்தான் போந்த திடம். 5
இடப்பாகம் நீள்கோட்
டிமவான் பயந்த
மடப்பாவை தன்வடிவே
ஆனால் – விடப்பாற்
கருவடிசேர் கண்டத்தெங்
காளத்தி ஆள்வார்க்
கொருவடிவே அன்றால் உரு. 6
உருவு பலகொண்
டுணர்வரிதாய் நிற்கும்
ஒருவன் ஒருபால்
இருக்கை – மருவினிய
பூக்கையிற் கொண் டெப்பொழுதும்
புத்தேளிர் வந்திறைஞ்சு
மாக்கயிலை என்னும் மலை. 7
மலைவரும்போல் வானவருந்
தானவரும் எல்லாம்
அலைகடல்வாய் நஞ்செழல்கண்
டஞ்சி -நிலைதளரக்
கண்டமையால் நண்சாரல்
காளத்தி ஆள்வார்நஞ்
சுண்டமையால் உண்டிவ் வுலகு. 8
உலகம் அனைத்தினுக்கும்
ஒண்ணுதல்மேல் இட்ட
திலகம் எனப்பெறினுஞ்
சீசீ – இலகியசீர்
ஈசா திருக்கயிலை
எம்பெருமான் என்றென்றே
பேசா திருப்பார் பிறப்பு. 9
பிறப்புடையர் கற்றோர்
பெருஞ்செல்வர் மற்றும்
சிறப்புடையர் ஆனாலுஞ்
சீசீ – இறப்பில்
கடியார் நறுஞ்சோலைக்
காளத்தி யாள்வார்
அடியாரைப் பேணா தவர். 10
அவரும் பிறந்தவராய்ப்
போவார்கொல் ஆவி
எவரும் தொழுதேத்தும்
எந்தை – சிவமன்னு
தேக்குவார் சோலைத்
திருக்கயிலை ஏத்தாதே
போக்குவார் வாளா பொழது. 11
வாளா பொழுது
கழிக்கின்றார் மானுடவர்
கேளார்கொல் அந்தோ
கிறிபட்டார் – கீளாடை
அண்ணற் கணுக்கராய்க்
காளத்தி யுள்நின்ற
கண்ணப்ப ராவார் கதை. 12
கதையிலே கேளீர்
கயிலாயம் நோக்கிப்
புதையிருட்கண் மாலோடும்
போகிச் – சிதையாச்சீர்த்
தீர்த்தன்பால் பாசுபதம்
பெற்றுச் செருக்களத்தில்
பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு. 13
பண்டு தொடங்கியும்
பாவித்தும் நின்கழற்கே
தொண்டு படுவான்
தொடர்வேனைக் – கண்டுகொண்டு
ஆளத் தயாவுண்டோ
இல்லையோ சொல்லாயே
காளத்தி யாய்உன் கருத்து. 14
கருத்துக்குச் சேயையாய்க்
காண்தக்கோர் காண
இருத்தி திருக்கயிலை
என்றால் – ஒருத்தர்
அறிவான் உறுவார்க்
கறியுமா றுண்டோ
நெறிவார் சடையாய் நிலை. 15
நிலையிற் பிறவி
நெடுஞ்சுழியிற் பட்டுத்
தலைவ தடுமாறு
கின்றேன் – தொலைவின்றிப்
போந்தேறக் கைதாராய்
காளத்திப் புத்தேளிர்
வேந்தேஇப் பாசத்தை விட்டு. 16
பாசத்தை விட்டுநின்
பாதத்தின் கீழேஎன்
நேசத்தை வைக்க
நினைகண்டாய் – பாசத்தை
நீக்குமா வல்ல
கயிலாயா நீஎன்னைக்
காக்குமா றித்தனையே காண். 17
காணா தலக்கின்றார்
வானோர்கள் காளத்திப்
பூணார மார்பன்தன்
பொற்பாதம் – நாணாதே
கண்டிடுவான் யானிருந்தேன்
காணீர் கடல்நஞ்சை
உண்டிடுவான் தன்னை ஒருங்கு. 18
ஒருங்கா துடனேநின்
றோரைவர் எம்மை
நெருங்காமல் நித்தம்
ஒருகால் -நெருங்கிக்
கருங்கலோங் கும்பல்
கயிலாயம் மேயான்
வருங்கொலோ நம்பால் மதித்து. 19
நம்பால் மதித்துறையும்
காளத்தி நண்ணாதே
வம்பார் மலர்தூய்
வணங்காதே – நம்பாநின்
சீலங்கள் ஏத்தாதே
தீவினையேன் யானிருந்தேன்
காலங்கள் போன கழிந்து. 20
கழிந்த கழிகிலாய்
நெஞ்சே கழியா
தொழிந்தநாள் மேற்பட்
டுயர்ந்தோர் – மொழிந்தசீர்க்
கண்ணுதலான் எந்தை
கயிலாய மால்வரையை
நண்ணுதலாம் நன்மை நமக்கு. 21
நமக்கிசைந்த வாநாமும்
ஏத்தினால் நம்பர்
தமக்கழகு தாமே
அறிவர் -அமைப்பொதும்பிற்
கல்லவா நீடருவிக்
காளத்தி ஆள்வாரை
வல்லவா நெஞ்சமே வாழ்த்து. 22
வாழ்த்துவாய் வாழ்த்தா
தொழிவாய் மறுசுழியிட்
டாழ்த்துவாய் அ.•.தறிவாய்
நீயன்றே – யாழ்த்தகைய
வண்டார் பொழிற்கயிலை
வாழ்கென் றிருப்பதே
கண்டாய் அடியேன் கடன். 23
கடநாகம் ஊடாடுங்
காளத்திக் கோனைக்
கடனாகக் கைதொழுவார்க்
கில்லை – இடம்நாடி
இந்நாட்டிற் கேவந்திங்
கீண்டிற்றுக் கொண்டுபோய்
அந்நாட்டில் உண்டுழலு மாறு. 24
மாறிப் பிறந்து
வழியிடை ஆற்றிடை
ஏறி இழியும்
இதுவல்லால் -தேறித்
திருக்கயிலை ஏத்தீரேல்
சேமத்தால் யார்க்கும்
இருக்கையிலை கண்டீர் இனிது. 25
இனிதே பிறவி
இனமரங்கள் ஏறிக்
கனிதேர் கடுவன்கள்
தம்மில் -முனிவாய்ப்
பிணங்கிவருந் தண்சாரற்
காளத்தி பேணி
வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து. 26
மகிழந்தலரும் வன்கொன்றை
மேலே மனமாய்
நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே
நெக்குத் – திகழ்ந்திலங்கும்
விண்ணிறங்கா ஓங்கும்
வியன்கயிலை மேயாய்என்
பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு. 27
பேசும் பரிசறியாள்
பேதை பிறர்க்கெல்லாம்
ஏசும் பரிசானாள்
ஏபாவம் – மாசுனைநீர்க்
காம்பையலைத் தாலிக்குங்
காளத்தி என்றென்று
பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து. 28
போர்த்த களிற்றுரியும்
பூண்ட பொறியரவும்
தீர்த்த மகளிருந்த
செஞ்சடையும் – மூர்த்தி
குயிலாய மென்மொழியாள்
கூறாய வாறும்
கயிலாயா யான்காணக் காட்டு. 29
காட்டில் நடமாடிக்
கங்காள ராகிப்போய்
நாட்டிற் பலிதிரிந்து
நாடோறும் – ஓட்டுண்பார்
ஆனாலும் என்கொலோ
காளத்தி ஆள்வாரை
வானோர் வணங்குமா வந்து. 30
வந்தமரர் ஏத்தும்
மடைக்கூழும் வார்சடைமேல்
கொந்தவிழும் மாலை
கொடுத்தார்கொல் – வந்தித்து
வாலுகுத்த வண்கயிலைக்
கோனார்தம் மாமுடிமேல்
பாலுகுத்த மாணிக்குப் பண்டு. 31
பண்டிதுவே அன்றாயிற்
கேளீர்கொல் பல்சருகு
கொண்டிலங்கத் தும்பிநூற்
கூடிழைப்பக் – கண்டு
நலந்திக் கெலாம்ஏத்தும்
காளத்தி நாதர்
சிலந்திக்குச் செய்த சிறப்பு. 32
செய்த சிறப்பெண்ணில்
எங்குலக்குஞ் சென்றடைந்து
கைதொழுவார்க் கெங்கள்
கயிலாயர் -நொய்தளவிற்
காலற்காய்ந் தார்அன்றே
காணீர் கழல்தொழுத
பாலற்காய் அன்று பரிந்து. 33
பரிந்துரைப்பார் சொற்கேளாள்
எம்பெருமான் பாதம்
பிரிந்திருக்க கில்லாமை
பேசும் – புரிந்தமரர்
நாதாவா காளத்தி
நம்பாவா என்றென்று
மாதாவா உற்ற மயல். 34
மயலைத் தவிர்க்கநீ
வாராய் ஒருமூன்
றெயிலைப் பொடியாக
எய்தாய் – கயிலைப்
பருப்பதவா நின்னுடைய
பாதத்தின் கீழே
இருப்பதவா உற்றாள் இவள். 35
இவளுக்கு நல்லவா
றெண்ணுதிரேல் இன்றே
தவளப் பொடிஇவள்மேற்
சாத்தி – இவளுக்குக்
காட்டுமின்கள் காளத்தி
காட்டிக் கமழ்கொன்றை
சூட்டுமின்கள் தீரும் துயர். 36
துயர்க்கெலாம் கூடாய
தோற்குரம்பை புக்கு
மயக்கில் வழிகாண
மாட்டேன் – வியற்கொடும்போர்
ஏற்றானே வண்கயிலை
எம்மானே என்கொலோ
மேற்றான் இதற்கு விளைவு. 37
விளையும் வினையரவின்
வெய்ய விடத்தைக்
களைமினோ காளத்தி
ஆள்வார்- வளைவில்
திருந்தியசீர் ஈசன்
திருநாமம் என்னும்
மருந்தினைநீர் வாயிலே வைத்து. 38
வாயிலே வைக்கும்
அளவில் மருந்தாகித்
தீய பிறவிநோய்
தீர்க்குமே – தூயவே
கம்பெருமா தேவியொடு
மன்னு கயிலாயத்
தெம்பெருமான் ஓரஞ் செழுத்து. 39
அஞ்செழுத்துங் கண்டீர்
அருமறைகள் ஆவனவும்
அஞ்செழுத்துங் கற்க
அணித்தாகும் – நஞ்சவித்த
காளத்தி யார்யார்க்குங்
காண்டற் கரிதாய்ப்போய்
நீளத்தே நின்ற நெறி. 40
நெறிவார் சடையாய்
நிலையின்மை நீயொன்
றறியாய் கொல் அந்தோ
அயர்ந்தாள் – நெறியிற்
கனைத்தருவி தூங்குங்
கயிலாயா நின்னை
நினைத்தருவி கண்சோர நின்று. 41
நின்றும் இருந்தும்
கிடந்தும் நடந்தும்யாம்
என்றும் நினைந்தாலும்
என்கொலோ -சென்றுதன்
தாள்வா னவர்இறைஞ்சுந்
தண்சாரற் காளத்தி
ஆள்வான் அருளாத வாறு. 42
அருளாத வாறுண்டே
யார்க்கேனும் ஆக
இருளார் கறைமிடற்றெம்
ஈசன் -பொருளாய்ந்து
மெய்ம்மையே உன்னில்
வியன்கயிலை மேயான்வந்
திம்மையே தீர்க்கும் இடர். 43
இடரீர் உமக்கோர்
இடம்நாடிக் கொண்டு
நடவீரோ காலத்தால்
நாங்கள் – கடல்வாய்க்
கருப்பட்டோங் கொண்முகில்சேர்
காளத்தி காண
ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து. 44
உணருங்கால் ஒன்றை
உருத்தெரியக் காட்டாய்
புணருங்கால் ஆரமுதே
போலும் – இணரிற்
கனியவாஞ் சோலைக்
கயிலாயம் மேயாய்
இனியவா காண்நின் இயல்பு. 45
நின்னியல்பை யாரே
அறிவார் நினையுங்கால்
மன்னியசீர்க் காளத்தி
மன்னவனே – நின்னில்
வெளிப்படுவ தேழுலகும்
மீண்டே ஒருகால்
ஒளிப்பதுவும் ஆனால் உரை. 46
உரையும் பொருளும்
உடலும் உயிரும்
விரையும் மலரும்போல்
விம்மிப் -புரையின்றிச்
சென்றவா றோங்குந்
திருக்கயிலை எம்பெருமான்
நின்றவா றெங்கும் நிறைந்து. 47
நிறைந்தெங்கும் நீயேயாய்
நின்றாலும் ஒன்றன்
மறைந்தைம் புலன்காண
வாராய் – சிறந்த
கணியாருந் தண்சாரற்
காளத்தி ஆள்வாய்
பணியாயால் என்முன் பரிசு. 48
பரிசறியேன் பற்றிலேன்
கற்றிலேன் முற்றும்
கரியுரியாய் பாதமே
கண்டாய் – திரியும்
புரம்மாளச் செற்றவனே
பொற்கயிலை மன்னும்
பரமா அடியேற்குப் பற்று. 49
பற்றாவான் எவ்வுயிர்க்கும்
எந்தை பசுபதியே
முற்றாவெண் திங்கள்
முளைசூடி -வற்றாவாங்
கங்கைசேர் செஞ்சடையான்
காளத்தி யுள்நின்ற
மங்கைசேர் பாகத்து மன். 50
மன்னா கயிலாயா
மாமுத்தம் மாணிக்கம்
பொன்னார மாக்கொண்டு
பூணாதே – எந்நாளும்
மின்செய்வார் செஞ்சடையாய்
வெள்ளெலும்பு பூண்கின்ற
தென்செய்வான் எந்தாய் இயல்பு. 51
இயம்பாய் மடநெஞ்சே
ஏனோர்பால் என்ன
பயம்பார்த்துப் பற்றுவான்
உற்றாய் – புயம்பாம்பால்
ஆர்த்தானே காளத்தி
அம்மானே என்றென்றே
ஏத்தாதே வாளா இருந்து. 52
இருந்தவா காணீர்
இதுவென்ன மாயம்
அருந்தண் கயிலாயத்
தண்ணல் – வருந்திப்போய்த்
தான்நாளும் பிச்சை
புகும்போலும் தன்னடியார்
வான்ஆள மண்ஆள வைத்து. 53
வைத்த இருநிதியே
என்னுடைய வாழ்முதலே
நித்திலமே காளத்தி
நீள்சுடரே – மொய்த்தொளிசேர்
அக்காலத் தாசை
அடிநாயேன் காணுங்கால்
எக்காலத் தெப்பிறவி யான். 54
யானென்று தானென்
றிரண்டில்லை என்பதனை
யானென்றுங் கொண்டிருப்பன்
ஆனாலும் – தேனுண்
டளிகள்தாம் பாடும்
அகன்கயிலை மேயான்
தெளிகொடான் மாயங்கள் செய்து. 55
மாயங்கள் செய்தைவர்
சொன்ன வழிநின்று
காயங்கொண் டாடல்
கணக்கன்று -காயமே
நிற்பதன் றாதலாற்
காளத்தி நின்மலன்சீர்
கற்பதே கண்டீர் கணக்கு. 56
கணக்கிட்டுக் கொண்டிருந்து
காலனார் நம்மை
வணக்கி வலைப்படா
முன்னம் – பிணக்கின்றிக்
காலத்தால் நெஞ்சே
கயிலாயம் மேவியநற்
சூலத்தான் பாதந் தொழு. 57
தொழுவாள் பெறாளேதன்
தோள்வளையுந் தோற்றாள்
மழுவாளன் காளத்தி
வாழ்த்தி – எழுவாள்
நறுமா மலர்க்கொன்றை
நம்முன்னே நாளைப்
பெறுமாறு காணீர்என் பெண். 58
பெண்ணின் றயலார்முன்
பேதை பிறைசூடி
கண்ணின்ற நெற்றிக்
கயிலைக்கோன் – உண்ணின்ற
காமந்தான் மீதூர
நைவாட்குன் கார்க்கொன்றைத்
தாமந்தா மற்றிவளைச் சார்ந்து. 59
சார்ந்தாரை எவ்விடத்துங்
காப்பனவுஞ் சார்ந்தன்பு
கூர்ந்தார்க்கு முத்தி
கொடுப்பனவும் -கூர்ந்துள்ளே
மூளத் தியானிப்பார்
முன்வந்து நிற்பனவும்
காளத்தி யார்தம் கழல். 60
தங்கழல்கள் ஆர்ப்ப
விளக்குச் சலன்சலனென்
றங்கழல்கள் ஆர்ப்ப
அனலேந்திப் – பொங்ககலத்
தார்த்தா டரவம்
அகன்கயிலை மேயாய்நீ
கூத்தாடல் மேவியவா கூறு. 61
கூறாய்நின் பொன்வாயால்
கோலச் சிறுகிளியே
வேறாக வந்திருந்து
மெல்லனவே – நீல் தாவு
மஞ்சடையும் நீள்குடுமி
வாளருவிக் காளத்திச்
செஞ்சடைஎம் ஈசன் திறம். 62
ஈசன் திறமே
நினைந்துருகும் எம்மைப்போல்
மாசில் நிறத்த
மடக்குருகே – கூசி
இருத்தியால் நீயும்
இருங்கயிலை மேயாற்
கருத்தியாய்க் காமுற்றா யாம். 63
காமுற்றா யாம்அன்றே
காளத்தி யான்கழற்கே
யாமுற்ற துற்றாய்
இருங்கடலே – யாமத்து
ஞாலத் துயிரெல்லாங்
கண்துஞ்சும் நள்ளிருள்கூர்
காலத்துந் துஞ்சாதுன் கண். 64
கண்ணுங் கருத்துங்
கயிலாய ரேஎமக்கென்
றெண்ணி இருப்பன்யான்
எப்பொழுதும் – நண்ணும்
பொறியா டரவசைத்த
பூதப் படையார்
அறியார்கொல் நெஞ்சே அவர். 65
நெஞ்சே அவர்கண்டாய்
நேரே நினைவாரை
அஞ்சேல்என் றாட்கொண்
டருள் செய்வார் – நஞ்சேயும்
கண்டத்தார் காளத்தி
ஆள்வார் கழல்கண்டீர்
அண்டத்தார் சூடும் அலர். 66
அலரோன் நெடுமால்
அமரர்கோன் மற்றும்
பலராய்ப் படைத்துக் காத்
தாண்டு – புலர்காலத்
தொன்றாகி மீண்டு
பலவாகி நிற்கின்றான்
குன்றாத சீர்க்கயிலைக் கோ. 67
கோத்த மலர்வாளி கொண்
டநங்கன் காளத்திக்
கூத்தன்மேல் அன்று
குறித்தெய்யப் – பார்த்தலுமே
பண்பொழியாக் கோபத்தீச்
சுற்றுதலும் பற்றற்று
வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து. 68
வெந்திறல்வேல் பார்த்தற்
கருள்செய்வான் வேண்டிஓர்
செந்தறுகண் கேழல்
திறம்புரிந்து -வந்தருளும்
கானவனாம் கோலம்யான்
காணக் கயிலாயா
வானவர்தங் கோமானே வா. 69
வாமான்தேர் வல்ல வயப்போர்
விசயனைப் போல்
தாமார் உலகில்
தவமுடையார் – தாம்யார்க்குங்
காண்டற் கரியராய்க்
காளத்தி ஆள்வாரைத்
தீண்டத்தாம் பெற்றமையாற் சென்று. 70
சென்றிறைஞ்சும் வானோர்தம்
சிந்தைக்குஞ் சேயராய்
என்றும் அடியார்க்கு
முன்னிற்பர் – நன்று
கனியவாஞ் சோலைக்
கயிலாயம் மேயார்
இனியவா பத்தர்க் கிவர். 71
இவரே முதல்தேவர்
எல்லார்க்கும் மிக்கார்
இவரல்லர் என்றிருக்க
வேண்டா -கவராதே
காதலித்தின் றேத்துதிரேல்
காளத்தி ஆள்வார்நீர்
ஆதரித்த தெய்வமே ஆம். 72
ஆமென்று நாளை
உளஎன்று வாழ்விலே
தாமின்று வீழ்கை
தவமன்று – யாமென்றும்
இம்மாய வாழ்வினையே
பேணா திருங்கயிலை
அம்மானைச் சேர்வ தறிவு. 73
அறியாம லேனும்
அறிந்தேனுஞ் செய்து
செறிகின்ற தீவினைகள்
எல்லாம் – நெறிநின்று
நன்முகில்சேர் காளத்தி
நாதன் அடிபணிந்து
பொன்முகிலி ஆடுதலும் போம். 74
போகின்ற மாமுகிலே
பொற்கயிலை வெற்பளவும்
ஏகின் றெமக்காக
எம்பெருமான் – ஏகினால்
உண்ணப் படாநஞ்சம்
உண்டாற்கென் உள்ளுறுநோய்
விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு. 75
வேறேயுங் காக்கத்
தகுவேனை மெல்லியலாள்
கூறேயும் காளத்திக்
கொற்றவனே – ஏறேறும்
அன்பா அடியேற்
கருளா தொழிகின்ற
தென்பாவ மேயன்றோ இன்று. 76
இன்று தொடங்கிப்
பணிசெய்வேன் யானுனக்
கென்றும் இளமதியே
எம்பெருமான் – என்றும்என்
உட்காதல் உண்மை
உயர்கயிலை மேயாற்குத்
திட்காதே விண்ணப்பஞ் செய். 77
செய்ய சடைமுடியென்
செல்வனையான் கண்டெனது
கையறவும் உள்மெலிவும்
யான்காட்டப் -பையவே
காரேறு பூஞ்சோலைக்
காளத்தி ஆள்வார்தம்
போரேறே இத்தெருவே போது. 78
போது நெறியனவே
பேசிநின் பொன்வாயால்
ஊதத் தருவன்
ஒளிவண்டே – காதலால்
கண்டார் வணங்குங்
கயிலாயத் தெம்பெருமான்
வண்தார்மோந் தென்குழற்கே வா. 79
வாவா மணிவாயால்
மாவின் தளிர்கோதிக்
கூவா திருந்த
குயிற்பிள்ளாய் – ஓவாதே
பூமாம் பொழிலுடுத்த பொன்மதில்
சூழ் காளத்திக்
கோமான் வரவொருகாற் கூவு. 80
கூவுதலும் பாற்கடலே
சென்றவனைக் கூடுகஎன்
றேவினான் பொற்கயிலை
எம்பெருமான் – மேவியசீர்
அன்பாற் புலிக்காலன்
பாலன்பால் ஆசையினால்
தன்பாற்பால் வேண்டுதலுந் தான். 81
தானே உலகாள்வான்
தான்கண்ட வாவழக்கம்
ஆனால்மற் றார்இதனை
அன்றென்பார்- வானோர்
களைகண்தா னாய்நின்ற
காளத்தி ஆள்வார்
வளைகொண்டார் மால்தந்தார் வந்து. 82
வந்தோர் அரக்கனார்
வண்கயிலை மால்வரையைத்
தந்தோள் வலியினையே
தாம்கருதி – அந்தோ
இடந்தார் இடந்திட்
டிடார்க்கீழ் எலிபோற்
கிடந்தார் வலியெலாங் கெட்டு. 83
கெட்ட அரக்கரே
வேதியரே கேளீர்கொல்
பட்டதுவும் ஓராது
பண்டொருநாள் – ஒட்டக்
கலந்தரனார் காளத்தி
ஆள்வார்மேற் சென்று
சலந்தரனார் பட்டதுவுந் தாம். 84
தாம்பட்ட தொன்றும்
அறியார்கொல் சார்வரே
காம்புற்ற செந்நெற்
கயிலைக் கோன் – பாம்புற்ற
ஆரத்தான் பத்தர்க்
கருகணையார் காலனார்
தூரத்தே போவார் தொழுது. 85
தொழுது நமனுந்தன்
தூதுவர்க்குச் சொல்லும்
வழுவில்சீர்க் காளத்தி
மன்னன் – பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால்
பணிந்தகலப் போமின்கள்
எத்தனையுஞ் சேய்த்தாக என்று. 86
வென்றைந்துங் காமாதி
வேரறுத்து மெல்லவே
ஒன்ற நினைதிரேல்
ஒன்றலாம் – சென்றங்கை
மானுடையான் என்னை
உடையான் வடகயிலை
தானுடையான் தன்னுடைய தாள். 87
தாளொன்றால் பாதாளம்
ஊடுருவத் தண்விசும்பில்
தாளொன்றால் அண்டங்
கடந்துருவித் -தோளொன்றால்
திக்கனைத்தும் போர்க்குந்
திறற்காளி காளத்தி
நக்கனைத்தான் கண்ட நடம். 88
நடமாடுஞ் சங்கரன்தாள்
நான்முகனுங் காணான்
படமாடு பாம்பணையான்
காணான் – விடமேவும்
காரேறு கண்டன் கயிலாயன்
தன் உருவை
யாரே அறிவார் இசைந்து. 89
இசையுந்தன் கோலத்தை
யான்காண வேண்டி
வசையில்சீர்க் காளத்தி
மன்னன் – அசைவின்றிக்
காட்டுமேல் காட்டிக்
கலந்தென்னைத் தன்னோடும்
கூட்டுமேல் கூடலே கூடு. 90
கூடி யிருந்து
பிறர்செய்யுங் குற்றங்கள்
நாடித்தம் குற்றங்கள்
நாடாதே – வாடி
வடகயிலை யேத்தாதே
வாழ்ந்திடுவான் வேண்டில்
அடகயில ஆரமுதை விட்டு. 91
விட்டாவி போக
உடல்கிடந்து வெந்தீயில்
பட்டாங்கு வேமாறு
பார்த்திருந்தும் – ஒட்டாதாம்
கள்ளலைக்கும் பூஞ்சோலைக்
காளத்தி யுள்நின்ற
வள்ளலைச்சென் றேத்த மனம். 92
மனமுற்றும் மையலாய்
மாதரார் தங்கள்
கனமுற்றுங் காமத்தே
வீழ்வர் -புனமுற்
றினக்குறவர் ஏத்தும்
இருங்கயிலை மேயான்
தனக்குறவு செய்கலார் தாழ்ந்து. 93
தாழ்ந்த சடையுந்
தவளத் திருநீறும்
சூழ்ந்த புலியதளும்
சூழ்அரவும் – சேர்ந்து
நெருக்கிவா னோர்இறைஞ்சுங்
காளத்தி யாள்வார்க்
கிருக்குமா கோலங்கள் ஏற்று. 94
ஏற்றின் மணியே
அமையாதோ ஈர்ஞ்சடைமேல்
வீற்றிருந்த வெண்மதியும்
வேண்டுமோ – ஆற்றருவி
கன்மேற்பட் டார்க்குங்
கயிலாயத் தெம்பெருமான்
என்மேற் படைவிடுப்பாற் கீங்கு. 95
ஈங்கேவா என்றருளி
என்மனத்தில் எப்பொழுதும்
நீங்காமல் நீவந்து
நின்றாலும் – தீங்கை
அடுகின்ற காளத்தி
ஆள்வாய் நான்நல்ல
படுகின்ற வண்ணம் பணி. 96
பணியாது முன்னிவனைப்
பாவியேன் வாளா
கணியாது காலங்
கழித்தேன் – அணியும்
கருமா மிடற்றெங்
கயிலாயத் தெங்கள்
பெருமான தில்லை பிழை. 97
பிழைப்புவாய்ப் பொன்றறியேன்
பித்தேறி னாற்போல்
அழைப்பதே கண்டாய்
அடியேன் – அழைத்தாலும்
என்னா தரவேகொண்
டின்பொழில்சூழ் காளத்தி
மன்னா தருவாய் வரம். 98
வரமாவ தெல்லாம்
வடகயிலை மன்னும்
பரமாஉன் பாதார
விந்தம் – சிரமார
ஏத்திடும்போ தாகவந்
தென்மனத்தில் எப்பொழுதும்
வைத்திடுநீ வேண்டேன்யான் மற்று. 99
மற்றும் பலபிதற்ற
வேண்டாம் மடநெஞ்சே
கற்றைச் சடைஅண்ணல்
காளத்தி – நெற்றிக்கண்
ஆரா அமுதின்
திருநாமம் அஞ்செழுத்தும்
சோராமல் எப்பொழுதுஞ் சொல். 100
திருச்சிற்றம்பலம்