சிவார்ச்சனா சந்திரிகை – ஆவாஹன முறை:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
ஆவாஹன முறை
இன்னவிதமாயிருப்பவரென்று மனத்தால் அநுமானஞ் செய்வதற்கு முடியாதவராயும், இன்னவிதமா யிருப்பவரென்று நிச்சயிக்க முடியாதவராயும், சமானமில்லாதவராயும், நோயற்றவராயும், சூக்குமராயும், எல்லாவற்றிலும், நிறைந்தவராயும், நித்தியராயும்சலனமற்றவராயும், குறைவற்றவராயும், பிரபுவாயுமிருக்கும் உம்மை, உம்மால் ஆணை செய்யப்பட்டவனாய் மந்திரத்தால் நமஸ்கரிக்கிறேனென்று தெரிவித்துக்கொண்டு, சரீரத்தை நிமிர்ந்ததாகவைத்து, மனம் கண் என்னுமிவற்றின் வியாபாரத்தைத் தடுத்து, இடையென்னும் நாடியால் வாயுவைப் பூரகஞ் செய்து கும்பித்து, இருதயத்தில் புஷ்பங்களால் நிரம்பப்பெற்ற கைகளால் அஞ்சலிசெய்து, திடமாக ஆவாகனமுத்திரை செய்து, தன்னுடைய சரீரத்துள் மூலாதாரத்திலிருக்கும் மந்திரமயமான பரமசிவனுடைய சோதியை ஆகர்ஷணஞ் செய்து, மூலாதாரம் முதற்கொண்டு விளங்கும் ஹகாரத்தைக் கடந்து, இருதயம் வரை கொண்டுபோய், இருதயம் கழுத்து காலு முதலிய தானங்களிலிருக்கும் பிருதுவி முதலிய பாசக் கூட்டங்களையும் பிரமன் முதலிய காரணேச்வரர்களுடன் கூடின ஒளகாரம் முதலிய பன்னிருகலைகளையும், முறையே அவ்வவற்றின் அநுசந்தாநத்தால் கடந்து, துவாதசாந்தம் வரையுச்சரித்துக்கொண்டு புஷ்பாஞ்சலியையும் துவாதசாந்தம் வரை கொண்டுபோய், மந்திரரூபமான சோதியை துவாதசாந்தத்திலிருக்கும் பரமசிவனுடன் சேர்த்து, இடைவிடாது அமிர்தத்தைப் பெருக்கும் விந்து ரூபமான சோதியை அங்கிருந்துங் கொண்டு வந்து புருவமத்தியிலிருக்கும் சிவ மண்டபத்தில் சிரமபரிகாரஞ் செய்ததாகப் பாவித்து, ஆயிரஞ்சரற்கால சந்திரன்போலும் பாவித்து, இருதயத்தில் அஞ்சலியைத் தரித்துக் கொண்டு, பிங்கலை நாடியால் வாயுவை ரேசகஞ் செய்து, வாயுவுடன் பரமசிவனுடைய சோதியை புஷ்பாஞ்சலியின் நடுவேயடைந்ததாகப் பாவனை செய்து, ஹாம் ஹெளம் சிவாய நம: என்று சொல்லிக்கொண்டு சதாசிவருடைய சிரமரந்திரத்தில் அந்தப் புஷ்பாஞ்சலியைச் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்ட விடயங்களை நன்கு விளக்கும் பொருட்டு மூலமந்திரங்களையும் அவற்றின் பீஜமாகிய ஹகாரத்தையும் அவற்றின் கலைகளையும், பன்னிருதானங்களையும் காட்டுகின்றார்.
சரீரத்தின் நடுத்தானமான மூலாதாரமுதற்கொண்டு பிரமரந்திரம் வ¬ நான்கு சாண் பிரமாணமுள்ள ஒருதானம் உள்ளிருக்கும். அதன் மேல் ஒரு சாண் அளவுள்ளது சிகையின்றானம் மூலாதாரம் பிரமரந்திரம் கிகையென்னும் அம்மூன்றனுள், மூலாதாரத்திலிருக்கும நான்குதளமுள்ள தாமரையின் கர்ணிகையில் பிராசாத மந்திரம் உண்டாகின்றது. அது முதற்கொண்டு நாபி வரை தாமரை நூல்போல் சூக்குமமாயும் மின்னல்போல் காந்தியையுடையதாயும் ஹகாரமிருக்கும். நாபிக்கு மேல் பன்னிரண்டங்குலம் வரை மின்னல் போல் காந்தியையுடையதான ஒளகாரத்துடன் கூடிய ஹகாரமிருக்கும். அதற்குமேல் ஐந்து அல்லது நான்கு அங்குல அளவில் இருதயகமலமிருக்கின்றது. அந்த இருதயகமல முதல் சிகையின் நுனிவரை பன்னிரண்டு கலைகளின் தானங்களிருக்கின்றன.
இருதயகமலத்தில் நான்கு அங்குல அளவாயும், மூன்று மாத்திரையை யுடையதாயும், சொலிக்கின்ற அக்கினித்தணல்களின் காந்தியையுடையதாயும் ஒளகாரமிருக்கும். அது நிவிருத்தி கலையுடனும் பிருதிவிதத்துவ முதல் பிரகிருதிதத்துவம் ஈறாகவுள்ள இருபத்துநான்கு தத்துவங்களுடனும் கூடின பிரமனால் அதிட்டிக்கப்பட்டது.
அதற்குமேல் கழுத்தில் எட்டங்குல அளவாயும், பதினாறு தளங்களையுடைய பத்மத்தை வியாபிக்கிறதாயுமிருக்கிற ஊகாரம், இரண்டு மாத்திரையை யுடையதாயும், ஒரே காலத்திலுதயமான சந்திர சூரியர்களின் காந்தியை யுடையதாயுமிருக்கும் அது பிரதிட்டா கலையுடனும் புருடன்முதல் காலமீறாகவுள்ள ஆறுதத்துவங்களுடனுங் கூடினவிட்டுணு வாலதிட்டிக்கப்பட்டது.
அதற்குமேல் நாக்கினடியில் நான்கு அங்குல அளவான நான்து தளங்களையுடைய பத்மத்தை வியாபிக்கிறதாயுள்ள மகாரம், ஒரு மாத்திரையையும் மின்னலின் பிரபையையும் உடையதாயிருக்கும். அது வித்யாகலையுடனும் மாயாதத்துவத்துடனுங் கூடின ருத்திர ராலதிட்டிக்கப்பட்டது.
அதற்கு மேல் புருவமத்தியில் இரண்டங்குல அளவுள்ள இரண்டுதளமுடைய பத்மத்தை வியாபிக்கிறதாயும் வட்டமாயுமிருக்கும் விந்து, அரைமாத்திரையையும் மின்னல் வர்ணம்போல் வர்ணத்தையும் உடையது. அது சாந்திகலையுடனும் சுத்தவித்தை ஈச்வரமென்னும் தத்துவங்களுடனுங் கூடின மகேஸ்வரராலதிட்டிக்கப்பட்டது.
அதற்குமேல் நெற்றியின் நடுவில் பாதிவடிவை யுடையதாயும், உயரே நுனியையுடையதாயும், கால் மாத்திரையை யுடையதாயும், சந்திரன்போல் வர்ணத்தை யுடையதாயும் அர்த்த சந்திரனிருக்கும்.
அதற்குமேல் லலாடத்தில் உயரே நுனியையுடையதாயும், திரிகோணம் போல் வடிவையுடையதாயும், எட்டில் ஒரு பாகமுள்ள மாத்திரையையுடையதாயும், புகை நிறமுடையதாயும் நிரோதியிருக்கும்.
அதற்கு மேல் சிரசில் தண்டவடிவாயும், இருபக்கங்களிலும் இரண்டு விந்துக்களுடன் கூடிக்கொண்டும், பதினாறிலொருபாகமுள்ள மாத்திரையை யுடையதாயும், இரத்தினம் போல் வர்ணத்தையுடையதாயும் நாதமிருக்கும்.
அதற்குமேல் பிரமரந்திரத்தில் நாதாந்திமிருக்கின்றது. அது தென்பக்கத்தில் கலப்பையின் வடிவுபோல் வடிவையுடையதாயும், தென்பக்கத்திலிருக்கும் விந்துவுடன் கூடினதாயும், முப்பத்திரண்டிலொரு பாகமுள்ள மாத்திரையை யுடையதாயும், மின்னல் வர்ணமுடையதாயுமிருக்கும்.
இவ்வாறு விந்துத்தானமான புருவமத்தியிலிருந்து பதினொரு அங்குல அளவிலிருக்கும் பிரமரந்திரம் வரையுள்ள தானங்களிலிருக்கும் அர்த்தசநதிரன், நிரோதி, நாதம், நாதாந்தமென்னும் இந்நான்கிற்கும் சாந்தியதீதைகலையுடனும் சதாசிவ தத்துவத்துடனுங் கூடின சதாசிவனே அதிஷ்டாதாவாகும்.
பிரமரந்திரத்துக்கு மேல் ஒரு அங்குல அளவில் சத்தியிருக்கும். அது எவ்விடத்தும் கலப்பைபோல் வடிவையுடையதாயும், இடது பக்கத்திலிருக்கும் விந்துவுடன் கூடினதாயும், அறுபத்து நான்கில் ஒரு பாகமுள்ள மாத்திரையையுடையதாயும் இருக்கும்.
அதற்குமேல் மூன்றங்குல அளவில் வியாபினியிருக்கும். அது திரிசூலம் போல் வடிவையுடையதாயும், தென்பக்கத்திலிருக்கும் விந்துவுடன் கூடினதாயும், நூற்றிருபத்தெட்டிலொரு பாகமுள்ள மாத்திரையையுடையதாயுமிருக்கும்.
அதற்கு மேல் நான்கு அங்குல அளவில் சமனையிருக்கும். அது இரண்டு விந்துக்களின் மத்தியிலிருக்கின்ற இரண்டு குறுகிய ரேகைகளின் நடுவிலிருக்கும். ஒரு அழகிய ரேகையையுடையதாயும், இருநூற்றைம்பத்தாறி லொருபாகமுள்ள மாத்திரையை யுடையதாயுமிருக்கும்.
அதற்கு மேல் நான்கு அங்குல அளவில் உன்மனியிருக்கும். அது விந்துவை யதிஷ்டிப்பதாயும், அந்த விந்துவுக்கு மேல நீண்டதாயும், தண்ட சொரூபம் போல் ரேகையையுடையதாயும், மனம் போலணுவளவான மாத்திரையுடன் கூடினதாயுமிருக்கும்.
பிரமரந்திரத்துக்கு மேல் ஒன்று, மூன்று, நான்கு ஆகிய அங்குலங்களின் முறையால் பன்னிரண்டங்குலம் வரை சிகையில் மேல் மேலிருக்கின்ற சத்தி, வியாபினி, சமனை, உன்மனியாகி இவை நூறுகோடி சூரியனுடைய காந்திபோல் காந்தியை யுடையனவாயும், அனாகதசிவனால் அதிட்டிக்கப்பட்டவையாயுமிருக்கும். அந்த நாக்கும் சேர்ந்து பரமாகாசமெனக் கூறப்படும்.
இவ்வாறு ஒளகாரம் நான்கு அங்குலமுடையதாயும், ஊகாரம் எட்டங்குல முடையதாயும், மகாரம் நான்கு அங்குலமுடையதாயும், விந்து இரண்டங்குலமுடையதாயும், அர்த்தசந்திரன், நிரோதி, நாதம், நாதாந்தமாகிய இவைகள் பதினொரு அங்குலமுடையனவாயும், சத்தி வியாபினி சமனை உன்மனையாகிய இவை பன்னிரண்டங்குலமுடையனவாயும் இருக்கின்றன.
பன்னிரு கலைகளும் வியாபித்திருக்குந் தானமானது நாற்பத்தொரு அங்குலமுடையது. ஆகையால் மூலாதாரமுதல் துவாதசாந்தம் வரை கூறப்பட்ட அளவையுடைய அந்த அந்தத் தானங்களில் ஹகாரத்தையும், ஒளகாரத்துடன் கூடிய ஹகாரத்தையும், ஒளகாரத்தையும், ஊகாரத்தையும், மகாரத்தையும், வட்டமான வடிவத்தையுடைய விந்துவையும், உயரே நுனியையுடையதாயும், பாதிவட்டமாயுமிருக்கும் வடிவையுடைய அர்த்தசந்திரனையும், உயரே திரிகோணத்தின் வடிவம் போல் வடிவத்தையுடைய நிரோதியையும், இரண்டு விந்துக்களின் நடுவையடைந்த தண்டாகாரமாயிருக்கும் நாதத்தையும், தென்பக்கத்திலிருக்கும் விந்துவுடன் கூடியதாயும், உயரே நுனியையுடையதாயும், தென்முகத்தில் கலப்பையின் வடிவுபோல் வடிவையுடையதாயும் இருக்கும் நாதாந்தத்தையும், இடது பக்கத்திலிருக்கும் விந்துவுடன் கூடியதாயும், உயரே நுனியையும், எல்லா முகத்திலும் கலப்பையின் வடிவு போல் வடிவத்தையும் உடையதாயும், சத்தியையும், தென்பக்கத்திலிருக்கிறதாயும், விந்துவுடன் உயரே நுனியையுடைய திரிசூலத்தின் வடிவுபோல் வடிவையுடையதாயும் வியாபினியையும், இரண்டு விந்துக்களின் நடுவையடைந்த குறுகிய இரண்டு ரேகைகளின் நடுவிலிருக்கும் அழகான ரேகையின் வடிவுபோல் வடிவையுடையதாய்ச் சமனையையும், விந்துவை அதிட்டித்து உயரே நுனியையுடைத்தான அழகான ரேகையின் வடிவுபோல் வடிவையுடையதாய் உன்மனையையும், இருதயம் முதலிய தானங்களிலிருக்கும் கலைகள் தத்துவங்கள் காரணேசுவரர்களுடன் கூட முறையே தியானித்ததை நீக்கிக்கொண்டும், தியானிக்க வேண்டியதைத் தியானித்துக் கொண்டும், பின்னர் பரமாகாசமாகிய நதியினின்றும் முண்டானதாயும், கோடி சூரியனுக்குச் சமானமான பிரபையுடன் கூடினதாயும், கோடி சந்திரன்போல் குளிர்ச்சியையுடையதாயும், முப்பத்தெட்டுக் கலைகளின் சொரூபமான கேசரங்களால் பிரகாசிக்கிறதாயும், பிரணமாகிய கர்ணிகையையுடையதாயும், பஞ்சாக்கரங்களென்னும் வித்துக்களால் நிரம்பப் பெற்றதாயும், பரமாந்தமென்னுந் தேனையுடையதாயும், முத்தர்களென்னும் வண்டுகளால் மொய்க்கப்பட்டதாயும், ஆயிரந்தளங்களையுடையதாயுமுள்ள சிற்சத்தி ரூபமான தாமரையின் நடுவையடைந்தவராயும், சரற்காலத்திலுதித்த அநேககோடி சந்திரர்களுடைய காந்தியையுடையவராயும், ஆநந்தக் கடலாயும், நிஷ்களராயுமிருக்கும் பரமசிவனை மனதில் இருத்த வேண்டும்.
இந்தப் பாவனையைச் செய்து மனதில் இருக்கும் பரமசிவனை மூலமந்திரத்தால் கொண்டுவந்து, இருதய மந்திரத்தாலாவாகன முத்திரை செய்து சதாசிவருடைய இருதய பத்மத்தில் சேர்த்து ஸ்தாபனமுத்திரையால் அவ்விருதய பத்மத்தில் ஸ்தாபனஞ்செய்து சன்னிதான முத்திரையால் தனக்கெதிர் முகமாகச் செய்து, ஓ மகாதேவ! ளும்முடைய வரவு நல்வரவாகுக எனத் தெரிவித்து, குழந்தாய்! நல்வரவென்று சுவாமி திருவுள்ளம் பற்றினதாகப் பாவித்து, சுவாகதார்க்கியங்கொடுத்து சன்னிரோத முத்திரையால் சன்னிரோதஞ் செய்து, எல்லா உலகங்களையுங் காத்தருளுகின்ற சுவாமின்! பூசை முடியும் வரை தேவரீர் கருணையுடன் இந்த லிங்கத்தில் சான்னித்தியம் செய்யவேண்டுமென்று இருதயத்தில் அஞ்சலிபந்தனத்துடன் பிராத்தித்து, சிவபெருமான் அவ்வாறே யங்கீகரித்ததாகவும் பாவித்து, நிரோதாக்கியங் கொடுத்து, காலகண்டி முத்திரை செய்து, ஹும்பட்என்னும் பதத்தை யிறுதியிலுடைய அஸ்திர மந்திரத்தால் விக்கினங்களை விலக்கி, கவசமந்திரத்தால் சிவபெருமானை யவகுண்டனஞ் செய்து, இருதயம், சிரசு, சிகை, கவசமென்னுமிவற்றை இருதய முதலிய மந்திரங்களால் ஈசுவரனுடைய இருதய முதலிய தானங்களில் நியாசஞ்செய்து, இருதய முதலியவற்றில் செய்யப்படும் அங்கநியாச ரூபமான சகளீகரணஞ் செய்த பின்னர், புஷ்பத்தைத் திருமுடியிலேற்றி மூலமந்திரத்தால் பரமீகரணஞ் செய்து தேனு முத்திரையால் அமிருதீகரணஞ் செய்யவேண்டும்.
இவ்விடத்தில் ஆவாகனமாவது சிவபெருமானைச் சதாசிவ தேகத்தில் சேர்த்தல்.
ஸ்¢தாபனமாவது சதாசிவருடைய இருதய பத்மத்தில் சிவபெருமானையிருத்துதல்.
சன்னிதானமாவது:- சிவபெருமானைத் தனக்கெதிர் முகமாகச் செய்தல்.
சன்னிரோதனமாவது:- பூசை முடியும் வரை சாந்தித்தியஞ் செய்யும் வண்ணம் பிரார்த்தித்தல்.
அவகுண்டனமாவது:- பத்தர்களுக்கு அறிவிப்பதற்காகவும், விக்கினங்கள் அணுகாமையின் பொருட்டும், கவசத்தால் மூடுதல்.
சகளீகரணமாவது:- இருதய முதலிய ஐந்து அங்கங்களில் நியாசஞ் செய்தல்.
பரமீகரணமாவது:- வெண்மை பொன்மை செம்மை கருமை செம்மையென்னும் வர்ணங்களையுடைய இருதய முதலியவற்றைச் சிவனுடைய ஒரே வர்ணமாகப் பாவித்தல்.
அமிருதீகரணமாவது:- விக்கிரகத்தையும், சிவபெருமானையும் அபின்னமாகப் பாவித்தல்.
சிவபெருமானோ உலகத்தை வியாபித்திருப்பவர். அவ்வாறிருக்கவும் நமக்கு விருப்பமான இடத்தில் அவரைச் சேர்த்தல் ரூபமான ஆவாகனமெவ்வாறு கூடுமெனில், இந்தக் கேள்வி பொருந்தாது. நினைக்க முடியாததாயும், அற்புதமாயுமுள்ள அனேக சத்திகளையுடைய சிவபெருமானுக்கு * வியாபகத்துவமும் ++அவ்வியாபகத்துவமுமிருப்பது பற்றிப் பிறிதொரு இடத்தில் சேர்த்தல் ரூபமான ஆவாகனம் பொருந்துமென்க.
( * வியாபகத்துவம் – எல்லாப் பொருள்களோடும் கலந்திருக்குந் தன்மை. ++அவ்வியாபகத்துவம் – எல்லப்பொருகளையும் கடந்திருக்குந் தன்மை.)
அல்லது வியாபகமாயிருக்குஞ் சிவனுக்குச் சரீரத்தையுபாதியாகக் கொண்டு அவ்வியாபகத் தன்மை யிருக்கின்றவாறு போல, மந்திர தேசஸையுபாதியாகக் கொண்டு விருப்பமான இடத்தில் சேர்த்தல் ரூபமான ஆவாகனமானது ஈசுவரனுக்கு எப்பொழுதும் விரோதமாகாதென்க.
அன்றியும் கட்டையில் வியாபித்திருக்கும் அக்கியானது கடைதற்றொழிலால் ஓரிடத்தில் வெளிபட்டுத் தோன்றுமாறு போல எங்கும் வியாபகமாயிருக்குஞ் சிவபெருமான் விரப்பமான விடத்தில் சேர்க்கும் பாவனை ரூபமான கிரியையால் சிவலிங்கமாகக் கொள்ளப்பட்ட விடத்து வெளிப்பட்டுத் தோன்றுதலே ஆவாகனமாகும என்க.
எவ்விடத்தும் அழிவற்ற சிதானந்த ரூபமாய்ப்பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஈசுவரனுக்கு வெளிப்படுத்துதல் என்பது எவ்வாறு பொருந்துமெனின், கூறுதும். தணல்கள் தானாகவே பிரகாசமுடையனவாயினும், சாம்பல் பூத்து இருப்பின் ஊதுதலாகிய செய்கையால் அந்தப் பிரகாசம் வெளிப்பட்டுத் தோன்றுமாறு போலச், சிவபெருமான் தானாகவே பிரகாசமுடையராயிருப்பினும் பூசிப்பவனுடைய மனம் வேறிடங்களில் வியாபித்திருத்தல் பற்றி அவனைக் குறித்து மறைந்திருக்கின்றார். ஆகையால் ஒரு வழிப்பட்ட மனதால் செய்யப்பட்ட ஆவாகனக் கிரியையால் விருப்பமான லிங்கமுதலியவற்றில் பூசை முடியும் வரை செய்யவேண்டிய உபசாரங்களைச் சமர்ப்பிக்கும் பொருட்டு அநுசந்தானத்தை யாரம்பஞ் செய்தலே வெளிப்படுத்தலாகும்.
அல்லது சிவபுராணத்திற் கூறிவாறு சதாசிவருடைய இருதய பத்மத்தில் பார்வதிதேவியாருடன் கூடினவராயும், சிதானந்த மயராயுமிருக்கும் பரமசிவனுடைய திவ்வியவிக்கிரகத்தின் தோற்றத்தைப் பாவித்தலே ஆவாகனமாகும். சிவபுராணத்துக் கூறியமுறை வருமாறு:-
இலிங்கத்தில் சதாசிவரைத் தியானித்து சலனமற்ற மனதுடன் தன்னுடைய சரீரத்திற் செய்தவாறு போல முப்பத்தெட்டுக் கலைகளின் நியாசத்தைச் செய்து, கந்தம் புஷ்பங்களாலருச்சித்து, இலிங்கமென்னும் புத்தியை விலக்கி, அந்தச் சதாசிவமூர்த்தியில், எல்லாவற்றிற்கும் முக்கிய காரணராயும், சதாசிவருடைய பிராணஸ்தானமாயும், சரீரத்துடன் கூடியவராயும், அம்பிகையுடன் கூடினவராயும், சிவபெருமானைத் தியானிக்கவேண்டும்.
தியானிக்கும் முறையாவது:- பிரமன், விட்டுணு, உருத்திரர் முதலிய தேவர்களும், அஞ்சத்தக்க தபசுகளைச் செய்து இப்பொழுதும் எவருடைய தெரிசனத்தை விரும்புகின்றார்களோ, எல்லாப் பூதங்களும் இந்திரியங்களும் பிரமன் உருத்திரன் இந்திரன் முதலியோரும் உலகமனைத்தும் எவரிடத்தினின்றும் தோன்றுகின்றனவோ, எல்லாக்கரணங்களையும் எவர் சிருட்டிக்கின்றாரோ, எல்லாக்காரணங்களுக்கும் மேலான காரணமான தன்னை எவர் சிந்திக்கிறாரோ, அத்தகைமையினை யுடையவராயும், எப்பொழுதும் ஒன்றிலிருந்தும் உண்டாகாதவராயும், எல்லாச் செல்வங்களானும் பூரணராயும், இயல்பாகவே யெல்லாவற்றிற்கும் ஈசுவரராயும், முத்தியில் விருப்பமுள்ள அனைவராலும் சிந்திக்கத் தக்கவராயும், மங்களத்திற்குக் காரணராயும், ஆகாசத்தின் நடுவையடைந்தவராயும், எல்லாவற்றிற்கும் மேலே இருக்கின்றவராயும், எல்லாவற்றிற்கும் இருப்பிடமானவராயும், எக்காலத்துமுள்ளவராயும், ஆறத்துவாக்கள் ரூபமாயிருக்கும் இவ்வுலகத்திற்கு நாயகராயும், மேலான கணங்களுக்கும் மேலானவராயும், தனக்குமே லொன்றில்லாதவராயும், சமுத்திரம்போல் அளவற்ற பெருமையையுடையவராயும், எல்லாவற்றையும் விடயங்களாகவுடையதாயும் பயனுடையதாயும் சுத்தமாயுமிருக்கும் அறிவை வியாபகமாகச் செய்கிறவராயும், ஆன்மசத்தியாகிய அமிர்தத்தைப் பருகுவதனால் உண்டாகும் மகிட்சியையுடையவராயும், அளவில்லாத ஆனந்தமென்னுந் தேனுக்கு வண்டாயிருப்பவராயும், எல்லா உலகத்தையும் ஒன்றாகச் செய்வதில் சமர்த்தராயும், உதாரத்தன்மை வீரத்தன்மை கெம்பீரத்தன்மை இனிமையென்னும் இவற்றிற்குச் சமுத்திரம் போன்றவராயும், ஒன்றோடும் உவமிக்கப்படாதவராயும், அரசர்களுக்கெல்லாம் அரசராயும், மகேசுவரராயும், மாயாகாரிய மானசரீரமில்லாதவராயும், மன்மதனுடைய அழகைவென்ற அழகினையுடையவராயும், உறைந்திருக்கும் நெய்போல் சச்சிதானந்த வடிவத்தை யுடையவராயும், எல்லா இலக்கணங்களுடன் கூடினவராயும், எல்லா அவயவங்காலும் அழகாயிருப்பவராயும், செம்மையான முகங் கைகால்களையுடையவராயும், முல்லை மலர்போல் வெளுப்பான புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடையவராயும், சுத்தமான படிகத்திற்கு ஒப்பானவராயும், மலர்ந்த தாமரை போலும் மூன்று கண்களையுடையவராயும், நான்கு கைகளையுடையவராயும், கெம்பீரமான அங்கங்களையுடையவராயும், அழகிய சந்திரகலையையும் வரதம் அபயம் மான் டங்கம் என்னுமிவற்றையுந் தரிப்பவராயும், பாவங்களையபகரிப்பவராயும், உவமான வருக்கங்களனைத்திற்கும் எட்டாதவராயு மிருப்பவராகச் சிவபெருமானைத் தியானிக்க வேண்டும்.
பின்னர் அவருடைய இடது பக்கத்தில் மகேசுவரியாயும், மலர்ந்த நீலோற்பலத்தின் இதழ்கள் போற் காந்தியும், அகலமும், நீட்சியுமுடைய கண்களையுடையவளாயும், பூரண சந்திரன்போல் காந்தியுள்ள முகத்தையுடையவளாயும், கருமையாயும், சுருளாயும் இருக்கும் கூந்தலையுடையவளாயும், நீலோற்பல தளத்தின் காந்திபோல் காந்தியை யுடையவளாயும், பாதிச் சந்திரனை சிரசில் ஆபரணமாகத் தரித்திருப்பவளாயும், மிகவும் வட்டமாயும், திண்ணியதாயும், நிமிர்ந்ததாயும், பளபளப்பாயும், பருமனாயுமுள்ள ஸ்தனங்களை யுடையவளாயும், சிறிய இடையையும், பெரிய பிருஷ்டபாகங்களையுமுடையவளாயும், பொன்னிறமும், மென்மையுமுடைய ஆடையையுடையவளாயும், எல்லா ஆபரணங்களையும் அணிந்திருப்பவளாயும், இரத்தின மயமான பொட்டிட்டிருப்பவளாயும், பலவிதவர்ணங்களுள்ள புட்பங்களை சிரசில் அணிந்திருக்கின்றமையால் அழகுடையவளாயும், உத்தமப் பெண்களுக்குரிய இலக்கணங்களையுடையவளாயும், சிறிது நாணத்தால் குனிந்த முகத்தையுடையவளாயும், மலர்ந்த சுவர்ணமயமான தாமரையை வலது கையில் தரித்திருப்பவளாயும், மற்றொரு கையைத் தண்டம் போல் வைத்துக் கொண்டு ஆசனத்திலிருப்பவளாயும், போக மோக்ஷங்களைத் தருபவளாயும், சச்சிதானந்த வடிவத்தையுடையவளாயும், சதாசிவன் ஈசுவரன் உருத்திரன் விட்டுணு பிரமன் ஆகிய இவர்கட்கு அன்னையாயும், பார்வதி இலக்குமி முதலிய எல்லா சத்திக் கூட்டங்கட்கும் நாயகியாயுமுள்ள தேவியையும் தியானிக்கவேண்டும். இவ்வாறு ஈசுவரனையும் ஈசுவரியையும் பதினாறு வயதுள்ளவர்களாகத் தியானித்து உபசார வகைகளால் அன்புடன் முறையே பூசிக்க வேண்டும்.
இவ்வாறு சதாசிவருடைய இருதய கமலத்தில் சாம்பசிவனுடைய சொரூபம் தோன்றுகிறதாகப் பாவிக்கும் பட்சத்தில் சாம்பசிவனை சதாசிவருடைய இருதய கமலத்தில் இருத்துதலானது தனக்கு எதிர்முகமாகச் செய்தலாகும். ஆகையால் இவையாவும் பொருத்தமாக ஆகின்றன. சரீரம் சரீரிகளுக்குள்ள அபேத ஞானரூபமான அமிர்தீகரணமானது சாம்பசிவனுடைய சொரூபம் சதாசிவருடைய இருதயகமலத்தில் தோன்றுகிறதென்னும் முறையிற்றான் பொருந்துகின்றது.
தனக்கு விருப்பமான லிங்கமுதலியவற்றில் சதாசிவசொரூபமானது ஆவாகனஞ் செய்யப்பட்டிருக்கும் பொழுது பூசைக்காகத் தோன்றவேண்டுமென்று பிரார்த்திக்கின்ற அர்ச்சகரை அநுக்கிரகஞ் செய்தற் பொருட்டுச் சிவனினும் வேறுபடாத சச்சிதானந்த சொரூபமே நினைக்க முடியாததாயும், அற்புதமாயுமிருக்கும் தன்னுடைய சத்திமகிமையினால், நீர்த்துளியானது ஆலங்கட்டி ரூபமாயும் நல்முத்துரூபமாயும் தோன்றுமாறு போல, எல்லா அவயவங்களாலும் பூரணரான சாம்பசிவனுடைய சொரூபமாகத் தோன்றுகிறதென்பது சிவபுராணம் முதலியவற்றின் கொள்கை.
இவ்வாறு சிதானந்த ரூபமான பரமசிவனுடைய சொரூபத்தின் காந்தியால் வெண்மையாயிருத்தல் பற்றியே பலவிதமான வர்ணங்களையுடைய முப்பத்தெட்டுக் கலைகளின் ரூபமாயிருக்கும் சதாசிவ வடிவத்திற்குப் படிக வர்ணத்தின் பாவனையானது பொருந்துகின்ற.
சதாசிவருடைய தற்புருட முதலிய முகங்களின் பொன்மை கருமை வெண்மை செம்மை முதலிய வர்ணங்களோவெனின், கிழக்கு முதலிய திக்குகட்கு நாயகர்களான இந்திரன் யமன் வருணன் குபேரன் முதலியோருடைய தத்தங்காரியங்கட்கு உபயோகங்களான பொன்மை கருமை வெண்மை செம்மை முதலிய வர்ணங்களை நிலைபேறுடையதாகச் செய்தற்பொருட்டு, அந்தந்த வர்ணங்களையொப்பாகச் செய்யப்பட்டன.
இவ்வாறு பரமசிவனை யாவாகனஞ் செய்யும்பொழுது ஊர்த்துவ முகமாயிருக்கிற சதாசிவருடைய ஈசான முகத்தைத் தற்புருஷ முகம்போலவே விசர்ஜன பரியந்தம் கிழக்கு முகமாகவே பாவனை செய்தல் வேண்டும்.
ஆவாகன முதற்கொண்டு அமிருதீகரண மீறான சம்ஸ்காரங்கள் சாம்பசிவ சொரூபம் விளங்கித் தோன்றுதலென்னும் பக்ஷத்தில் சதாசிவருடைய மூர்த்தியின் மத்தியிலேயே செய்ய வேண்டும். அவ்விடத்திலேயே பரமசிவனுக்கும் அம்பிகைக்கும் பாத்தியம் முதலிய உபசாரங்களும் பதார்த்தங்கள் கிட்டினதற்குத் தக்கவாறு தனித்தனி செய்ய வேண்டும். சதாசிவ மூர்த்தியில் பரமசிவனுடைய சைதன்னியத்தை மாத்திரம் ஆவாகனம் செய்யும் பக்ஷத்தில் ஆவாஹனம் செய்தபின்னர், பாத்தியம் முதலியன செய்ய வேண்டும்.
மனோன்மனி மூர்த்தியில் அம்பிகையையும் ஆவாகன முதலியவற்றால் சம்ஸ்காரஞ் செய்து பாத்தியம் முதலிய உபசாரங்களைச் செய்ய வேண்டும்.