சிவார்ச்சனா சந்திரிகை – துவாரபாலர் பூஜை:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
துவாரபாலர் பூஜை
பின்னர் தன்னை அஸ்திரங்களாற் செய்யப்பட்ட கூட்டின் மத்தியில் இருக்கிறவனாகப் பாவனைசெய்து பிருதிவிமுதல் மாயையீறாகவுள்ள முப்பத்தொரு தத்துவங்களையும் கடந்தவனாகப் பாவித்து சிவபூஜைக்குரிய விடத்தை நான்கு கோணமுடைய சதுரமாகவும், சிவந்தவர்ணமான சுத்தவித்தியா சொரூபமாகவும், பாவனை செய்து போக மோக்ஷங்களில் விருப்பமுள்ளவன் கிழக்கு வாசலில் துவாரபாலர்களை அருச்சிக்க வேண்டும். கீர்த்தி, விஜயம், சௌபாக்கியம் என்னுமிவைகளில் இச்சையுள்ளவன் தெற்கு வாயிலிலும், மோக்ஷத்தில் மாத்திரம் இச்சையுள்ளவன் மேற்கு வாயிலிலும் துவாரபாலரை அருச்சிக்கவேண்டும். வடக்கு வாயிலில் துவாரபாலரை அருச்சிக்கக் கூடாது. சாமான்னியார்க்கிய ஜலத்தால் அஸ்திரமந்திரத்தை உச்சரித்து வாயிலைப் புரோக்ஷித்து வாயிலுக்கு வெளியிலிருக்கும் துவாரபாலரை அருச்சிக்க வேண்டும்.
துவாரபாலராவர், கணபதி முதலியோர்கள். துவாரத்தின் மேலிருக்கும் உதும்பரத்தின் மகத்திலுள்ள வலது இடது பக்கங்களிலும் நடுவிலும், கணபதி, சரஸ்வதி, மகாலக்ஷிமியாகிய இவர்கள் இருப்பார்கள். இடது பக்கம் வலது பக்கமென்பது ஈசுவரனை நோக்கியாவது ஈசுவரனைப் பூசிப்பதற்காக துவாரத்திற் செல்லும் பூசகரை நோக்கியாவது கொள்ளல் வேண்டும். துவாரத்திற்கு வெளியில் தென்பக்கத்தில் நந்தியும் தென்பக்கத்திலேயே நந்திக்கு வலதுபக்கத்தில் கங்கையும், இடது பக்கத்தில் மகா காளரும் மகாகாளருக்கு இடது பக்கமான தென்பக்கத்தில் யமுனையும் இருக்கின்றனர்.
ஹாம் கணபதயே நம: கருமைவர்ணமும், தந்தம், அக்ஷமாலை, பாசம், அங்குசம் என்னுமிவைகளும், துதிக்கையில் மாதுளம்பழமும் உடைய கணபதியைப் பூசிக்கிறேன்.
ஹாம் சரஸ்வத்யை நம: வெண்மை வர்ணமும், அக்ஷமாலை, புஸ்தகம் என்னுமிவைகளும், வீணாகானஞ்செய்து கொண்டிருத்தலும் உடைய சரஸ்வதியைப் பூசிக்கிறேன்.
ஹாம் மகாலக்ஷிமியை நம: வில்வப்பழம், தாமரை, அபயம், வரம் என்னுமிவைகளைத் தரிக்கிறவளாயும், இருபக்கங்களிலுமுள்ள இரண்டுயானைகளின் துதிக்கைகளால் தாங்கப்பட்ட சுவர்ணகும்பத்திலுள்ள அமிர்ததாரைகளால் அபிஷேகஞ் செய்யப்படுகிறவளாயுமிருக்கும் மகாலக்ஷிமியைப் பூஜிக்கின்றேன்.
ஹாம் நந்திகே நம: சிவந்த ஜடாமகுடத்தையும், திரிசூலம், அக்ஷமாலை, அச்சமுறுத்தும் முத்திரை மழு என்னுமிவைகளையும் தரித்துக்கொண்டிருப்பவராயும், பெரிதான தேகத்தையுடையவராயுள்ள நந்தியைப் பூஜிக்கின்றேன்.
ஹாம் கங்காயை நம: வெண்மை வர்ணமும் மீன்வாகனமும் உடையவளாயும், அமிருதகலசம், சாமாமென்னு மிவைகளைத் தரிக்கிறவளாயுமிருக்கும் கங்கையைப் பூசிக்கின்றேன்.
ஹாம் மகாகாளாய நம: கருமை வர்ணமுடையவராயும், கோரமான பல்லும், மேடுபள்ளமான புருவ நெறிசல்களால் பயங்கரமான ரூபமும் பெரிதான தேகமும் உடையவராயும், சூலம், கபாலம், பரசு, சுட்டுவிரலால் அச்சமுறுத்தும் முத்திரை என்னுமிவைகளைத் தரித்துக்கொண்டிருக்கிறவராயுமுள்ள மகாகாளரைப் பூசிக்கின்றேன்.
ஹாம் யமுனாயை நம: கருமை வர்ணமும், ஆமை வாகனமும் உடையவளாயும், சாமரம், அமிருதகலசம் என்னுமிவைகளைத் தரிக்கிறவளாயுமிருக்கும் யமுனையைப் பூசிக்கின்றேன்.
இவ்வாறு சொல்லிக்கொண்டு அந்தந்தத் தானங்களில் பூசிக்கவேண்டும்.
கங்கை யமுனையல்லாத ஏனைய துவாரபாலரனைவரும் மூன்று நேத்திரங்களையுடையவராவர். எல்லாத் துவாரபாலர்களும், துவாரத்திற்குச் சமானமான முகத்தையுடையவராவர்.
கதவு திறப்பதற்குரிய பிரார்த்தனைச் சுலேகங்களைச் சொல்லிக்கொண்டு அஸ்திரமந்திரத்தால் கதவைத்திறந்து ஹெளம் சிவாய நம: என்று நேத்திரங்களில் நியாசங் செய்து, திவ்விய மான தியானதிருஷ்டியால் தேவலோகத்திலிருக்கும் விக்கினங்கள் நடுங்கினவாகவும், சுட்டுவிரல் கட்டைவிரல்களால் போடப்பட்ட புஷ்பத்தால் ஆகாயத்திலிருக்கும் விக்கினங்கள் நடுங்கினவாகவும், வலதுகால் பின்பக்கத்தால் தட்டுதலால் பூமியிலிருக்கும் விக்கினங்கள் நடுங்கினவாகவுஞ் செய்து அஸ்திராயஹும்பட்என்னும் மந்திரத்தால் மூன்றுவிதமான விக்கினங்களையும் தரத்தல் வேண்டும்.
பின்னர் துவாரத்தின் வலது கொடுங்கையைத் தொடாமல் இடது கொடுங்கையைச் சார்ந்து வலது காலால் சிவபூஜாகிருகத்தில் பிரவேசித்து ஹாம் அஸ்திராய நம: அக்கினியின் வர்ணம் போன்ற வர்ணமுடையவரும், நான்குமுகமும், சத்தி, சூலம், அபயம், வரம் என்னுமிவற்றுடன் கூடிய நான்குகைகளும் உடையவரும், ஜடாமகுடத்தால் அலங்கரிக்கப்பட்டவரும், பாதிச்சந்திரனைச் சிரோபூஷணமாகவுடையவரும், எல்லா விக்கினங்களையும் நீக்குகின்றவருமான அஸ்திரதேவரைப் பூஜிக்கின்றேனென்று சொல்லிக்கொண்டு கொடுங்கைக்கு நடுவே சிவபூஜாகிருகத்திற்கு எதிர்முகமாகவிருக்கும் அஸ்திரராஜனை அவருக்கு எதிர்முகமாகத் திரும்பியிருந்துகொண்டு சந்தோஷத்துடன் பூஜிக்கவேண்டும்.
வாஸ்து அதிபனான பிரமாவை அவருக்கு எதிர்முகமாகத் திரும்பியிருந்துகொண்டு பூசிக்க வேண்டும்.
பிரமாவை பூசிக்கும் முறையாவது – ஹாம் பிரம்மணே நம: சுவர்ண வர்ண முடையவவரும், மீசையுடன் கூடிய நான்குமுகமுடையவரும், தொந்தியுடையவரும், தண்டம், அக்ஷமாலை, சுருக்கு, கமண்டலம் என்னுமிவைகளைத் தரித்திருப்பவருமான வாஸ்து பிரமாவைப் பூஜிக்கிறேனென்று சொல்லிக்கொண்டு கொடுங்கையின் நடுவிலேயே பிரமாவைப் பூசிக்க வேண்டும்.
பின்னர் துவாரத்தின் மத்தியில் வலதுபக்கதில் ஹாம் நந்தி கேசுவராய நம: சிவந்த வர்ணமும், மூன்றுகண்களும், சந்திரகலையாலலங்கரிப்பட்ட ஜடாமகுடமும், மான், பரசு, நமஸ்காரமுத்திரை என்னுமிவற்றுடன் கூடிய நான்கு கைகளும், கையினடியிற் பிரம்பும், இடுப்பில் கத்தியும் உடையவராயும், விபூதி ருத்திராக்ஷங்கள் தரித்திருப்பவராயும், குரங்கின் முகம்போன்ற முகமுடையவராயிருக்கும் நந்திகேசுவரரைப் பூசிக்கிறேனென்று சொல்லிக்கொண்டு துவாரத்தின் மத்தியில் தெற்குப் பக்கத்தில் நந்திகேசுவரரைப் பூசிக்க வேண்டும்.
ஹாம் ஸ§ம் சுயசாயை நம: கருமைவர்ணமுடையவளாயும், நீலோத்பல புஷ்பத்தால்அலங்கரிக்கப்பட்ட வலது கையையுடையவளாயுமிருக்கும் சுயசாதேவியைப் பூசிக்கின்றேனென்று சொல்லிக்கொண்டு துவாரத்தின் மத்தியில் சுயசாதேவியைப் பூசிக்க வேண்டும்.
பின்னர் பரமசிவனைப் பிரதக்ஷிணஞ் செய்து நிருதிகோணத்தில் பிரமாவைப் பூசிக்க வேண்டும். துவாரபாலர் முதலியவருக்குப் பூஜையைச் செய்யுமிடத்தில் ஆசனங்கொடுத்தல், ஆவாகனஞ்செய்தல், ஸ்தாபனஞ்செய்தல், சன்னிதானஞ்செய்தல், சன்னிரோ தனஞ்செய்தல், பாத்தியம் ஆசமனம் அர்க்கியம் கந்தம், புஷ்பம், தூபம், தீபம், என்னுமிவைகளைக் கொடுத்தல் முடிவாகவாவது, அல்லது நைவேத்தியம், தாம்பூலம் சமர்ப்பித்தல் முடிவாகவாவது ஒவ்வொருவருக்கும் தனித்தனி செய்யவேண்டும். அவ்வாறு செய்யமுடியவில்லையாயின் எல்லாத் துவாரபாலரின் பொருட்டும் நமஸ்காரமென்று சொல்லிக்கொண்ட சந்தனம் புஷ்பங்களால் ஒருசேரப் பூசிக்கவேண்டும்.
பின்னர் ஓ துவாரபாலர்களே மிகுந்த முயற்சியுடன் விக்கினங்களின் சமூகத்தை விலக்கிச் சிவபெருமானுடைய வாயிலை இரக்ஷியுங்கள். இது பரமேசுவரனுடைய ஆக்ஞையென்று தெரிவிக்க வேண்டும்.
இந்தத் துவாரபால பூஜையானது ஆத்மார்த்த பூஜையில் செய்யவேண்டுமென்று சில ஆகமங்களும், செய்ய வேண்டாமென்று சில ஆகமங்களும் கூறுவதால் செய்தலும் கூடும். செய்யாதிருத்தலும் கூடும். செய்தல் செய்யாமைபற்றிக் குற்றமில்லை. செய்தால் குணமுண்டென்பது தாற்பரியம். எதுபோலுமெனில், சோடசிக்கிரகம் நியாயம் போலுமென்க.
சோடசிக்கிரக நியாயமாவது பூருவமீமாம்சையில் அதிராத்திரத்தில் சோடசிக்கிரகணஞ் செய்யக்கூடாதென்றும், செய்ய வேண்டுமென்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாக்கியங்கள் ஒரே விஷயத்தில் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படுவதால் சில சமயங்களில் செய்யலாமென்றும், சில சமயங்களில் செய்யாமலிருக்கலாமென்றும், செய்தமையால் குணமுண்டென்றும், செய்யாமையால் குற்றமில்லையென்றும் கொள்ளப்படுமாறுபோல, இவ்விடத்திலும் ஆத்மார்த்த பூஜையில் துவாரபாலர் பூஜைசெய்யின் குணமும், செய்யவில்லையாயின் குற்றமுமின்மையும் உண்டென அறிந்து கொள்க.
பின்னர் பூஜைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் பரமசிவனுடைய சன்னிதானத்தில் வைத்து அவருடைய வலதுபாகத்திலாவது, ஆக்கிநேயபாகத்திலாவது வடக்கு முகமாக இருந்துகொண்டு ருசிராஸனமாவது சுவஸ்திகாசமானமாவது, அல்லது தனக்குப் பழக்கமான எந்த ஆசனமாவது செய்து ஆன்ம சுத்தி, தான சுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி என்னும் ஐவகைச் சுத்திகளுள், முதலாவது ஆன்மசுத்தியைச் செய்ய வேண்டும்.
சுவஸ்திகாசனமானது துடைக்கும் முழங்காலுக்கும் நடுவே இரண்டுள்- ளங்காலையுஞ் செலுத்தி இறுமாந்திருப்பது.
உயரே இருக்கும் உதும்பரத்தில் கணபதி முதலாயினாரைப் பூஜை செய்ய வேண்டுமென்ற இந்த முறையானது சொல்லப்பட்ட இலக்கணங்கள் வாய்ந்த சிவ பூஜாக்கிரகம் இருப்பின் அதில் ஆன்ம சுத்திக்கு முன்னரே செய்ய வேண்டும்.
சிவபூஜாக்கிரக இலக்கணங்கள் வருமாறு :- கிரகத்தினுடைய ஈசானத் திக்கில் கல், சுட்டசெங்கல், சுத்தமானகட்டை, மண் என்னுமிவற்றில் யாதாவதொன்றால், நான்கு சமசதுரமாகவாவது, நீண்டதாகவாவது, வட்டமாகவாவது எஜமானுடைய நடுவிரலில் மேலாக இருக்கும் ரேகைவரையுள்ள இருபத்து நாலங்குலம் உத்தமம். நடுரேகை வரையுள்ள இருபத்து நாலங்கும் மத்தியமம். அடிரேகை வரையுள்ள இருபத்து நாலங்குலம் மத்தியமம். அடிரேகை வரையுள்ள இருபத்து நாலங்குலம் அதமம். இவ்வாறு இருபத்து நாலங்குலங்கொண்ட கைமுழத்தில் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதின்மூன்று, பதினேழு, இருபது, இருபத்தொன்று, முப்பத்திரண்டு என்னுமிவற்றில் யாதானுமோரளவுகொண்டு இரண்டுமேடை அல்லது மூன்று மேடையுடையதாகப் பூஜாகிருகத்தைச் செய்து அதனை ஐந்தாகப் பிரித்து நடுவில் கல் சுண்ணாம்புகளால் செய்யப்படாது மண்ணினாலாவது, சுட்டசெங்கல்லினாலாவது, நான்கு மூலைகளிலும் தூண்களுடனாவது, தூண்களில்லாமலாவது, பதினாறு அல்லது பதினெட்டங்குலம் உயரமுடையதாக ஒரு திண்ணையைச் செய்து அத்திண்ணையின்மேல் மேற்குப்பாகத்தில் ஒரு சாண் அளவு அகலமுடையதாயும், ஐந்தங்குல உயரமுடையதாயும், கர்ப்பக்கிருத்தைச் செய்து, அதன் கிழக்குப் பாகத்தில் அதே அளவும் உயரமுடையதாக அர்த்தமண்டபத்தைச் செய்து, அதன் கிழக்குப் பாகத்தில் ஐந்துசாண் அளவு நீளமும், நான்குசாண் அளவு அகலமும், எட்டங்குல உயரமும் உடையதாக பேர மண்டபத்தைச் செய்ய வேண்டும். அவற்றுள் கர்ப்பக்கிருகத்தில் சுவர்ணம், வெள்ளி, செம்பு, மரம் என்னுமிவற்றுள் யாதாவதொன்றால் செய்யப்பட்ட சமசதுரமாய் நீண்டதாகவாவது வட்டமாகவாவதுள்ள பெட்டியைத் தாபிக்க வேண்டும்.
பேர மண்டபத்தில் இரண்டு கைமுழ அளவு நீண்டதாயும், ஒரு கைமுழ அளவு அகலமாயும், பன்னிரண்டங்குல உயரமாயும், அல்லது ஒரு கைமுழ அளவு உயரமாயும் உள்ள தாமரைப் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட பெட்டியை வைத்து, அப்பெட்டியின்மேல் அப்பெட்டிக்களவான ஆடையை விரித்து அதன் நடுவில், உயிருடன் கூடிய யானையின் தந்தத்தாற் செய்யப்பட்ட பீடத்தை வைத்து, அந்தப்பீடத்தின்மேல் சுவர்ணமுதலியவற்றால் செய்யப்பட்ட பத்மபீடத்தை மேற்கப்பாகத்தில் செய்யப்பட்ட பிரபாமண்டலத்துடன் கிழக்கு முகமாகத் தாபிக்க வேண்டும்.
பூஜாமண்டபமானது சிதறிய புஷ்பங்கள் தூபம், சந்தனம், மேல் கட்டி, முத்துமாலை, கொடி, விருதுக்கொடி, கண்ணாடி, உத்கிருஷ்டமான தீபங்கள், என்னுமிவைகளால் அலங்கரிக்கப்படல் வேண்டும். இத்தகைய பூஜாமண்டபம இல்லையாயின், சிவபூஜை செய்யக்கூடிய இடத்தையே மேலே கூறப்பட்ட பூஜாமண்டபமாக மனதில் பாவித்துக் கொள்ளல் வேண்டும். பின்னர் சிவபீடத்தின் பக்கத்தில் உட்கார்ந்து ஆத்மசுத்திக்கு முன்னராவது அல்லது பின்னராவது துவாரபால பூஜையைச் செய்ய வேண்டும்.