சிவார்ச்சனா சந்திரிகை – பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை
இடது கையால் முக்காலியுடன் கூடப் பாத்திய பாத்திரம் ஆசமனீய பாத்திரம், அர்க்கியபாத்திரம் என்னுமிவற்றை உயரே தூக்கிவைத்துக்கொண்டு, பாத்தியத்தை ஈசுவரதத்துவம் முடியவும், ஆசமனத்தைச் சதாசிவதத்துவம் முடியவும், அர்க்கியத்தை சிவதத்துவம் முடியவும் தியானித்து, பாத்தியம் முதலியன ஈசுவர, சதாசிவதத்துவங்களை அர்ச்சகருக்குச் சேர்க்கிறதாகவும் பாவித்து, மூலாதாரத்திலிருந்துண்டான பிராசாத முதலிய மந்திரங்களைப் பாத்திய முதலியவற்றின் முறையால் புருவநடு, பிரமமரந்திரம், துவாதசாந்தம் என்னும் தானங்கள் வரை இயங்கிக்கொண்டிருப்பனவாகப் பாவித்து, ஹாம் ஹெளம் சிவாய என்னும் மந்திரத்தின் முறையாக, நம:, ஸ்வாஹா, ஸ்வதா என்னும் பதங்களை இறுதியாக இருக்கும்படி உச்சரித்துச் சத்தியோஜாத முதலிய மந்திரங்களின் முறையால் உயரே தூக்கினதாயும், புஷ்பத்துடன் கூடினதாயுமிருக்கும் வலது கைக்கட்டை விரல், நடுவிரல், அணிவிரல்களின் நுனியால் வலது திருவடி இடது திருவடிகளில் பாத்தியத்தையும், முகங்களில் தற்புருஷ முதலிய மந்திரங்களால் ஆசமனத்தையும், சிரசுகளில் ஈசானமுதலிய மந்திரங்களால் அர்க்கியத்தையும் சமா¢ப்பிக்க வேண்டும்.
நறுமணம் உள்ள புஷ்பத்தை ஞான சொரூபமாயும், சிவசாயுஜ்யத்திற்குக் காரணமாயும் தியானித்துத் துவாதசாந்தத்தானத்திற்கு மேலிருக்கும் சிவன் வரை மந்திரம் இயங்கிக்கொண்டிருப்பதாகவும் பாவித்து, வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய மந்திரத்தால் சிரசுகளில் ஈசான முதலியவற்றின் முறையால் சமர்ப்பிக்க வேண்டும். அம்பிகைக்கும் பாத்திய முதலியவற்றை அந்தந்தச் சமயங்களில் பதார்த்தங்கள் கிடைத்ததற்குத் தக்கவாறு சமர்ப்பிக்க வேண்டும். சந்தனம் முதலியவற்றைச் சமர்ப்பிக்குமிடத்தும் இவ்வாறு செய்யவேண்டும். அம்பிகைக்குச் சமர்ப்பிக்கும் பொழுது சிவாயை நம: சிவாயை ஸ்வாஹா சிவாயை ஸ்வதா என்னும் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
பின்னர், ஸ்வாஹா என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் தூப தீபங்களையும், முன்னர்க் கூறிய முறையில் ஆசமனம், அர்க்கியங்களையும், பார்வதி பரமேசுவரர்களின் பொருட்டுச் சமர்ப்பித்து, அஸ்திர மந்திரத்தை உச்சரித்து ஆடையுடன் பீடத்தின் கீழ்ப் பாகத்தை இடது கையால் தொட்டுக்கொண்டே வலது கையால் புஷ்பத்தை எடுத்து, அந்தப் புஷ்பத்தால் முன்னர் அர்ச்சிக்கப்பட்ட புஷ்பத்தை நீக்கி, வலது கையிலுள்ள அந்தப் புஷ்பத்தையும் நீக்கி, முன்னர்க் கூறியபடி தைலக்காப்பு முதலிய எல்லாவற்றையும் மனத்தால் பாவித்து, ஹாம் சிவதத்துவாய நம: என்று சொல்லிக்கொண்டு, அர்க்கிய ஜலத்தின் திவலையால் அபிஷேகஞ் செய்து, முன்போல் பாத்தியம், ஆசமனீயம், அர்க்கியங்களைச் சமர்ப்பித்து, ஸ்வாஹா என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் இரண்டு ஆடைகளையும் இரண்டு பூணூல்களையும் அணிந்து, ஆசமனம் சமர்ப்பித்து, ஹாம் ஆத்மதத்துவாதி பதயே சிவாய நம:, ஹாம் வித்யாதத்துவாதிபதயே சிவாயநம:, ஹாம் சிவதத்துவாதிபதயே சிவாயநம: என்று உச்சரித்துக்கொண்டு மூன்று புஷ்பாஞ்சலிகளையும், சிவாயை நம: என்று சொல்லிக்கொண்டு அம்பிகையின் பொருட்டுப் புஷ்பாஞ்சலியையுஞ் சமர்ப்பித்து, சேகரிக்கப்பட்டனவாயும், மனத்தாற் பாவிக்கப்பட்டனவாயுமுள்ள சுவர்ணமயமான ஆடையாலும், கடகம், கிரீடம், காதணி, தோளணி என்னும் ஆபரணங்களாலும், நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரங்களால் அலங்கரித்துச் சந்தனம் புஷ்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பாத்தியம் முதலியவற்றின் முறை முடிந்தது.