சிவார்ச்சனா சந்திரிகை – புஷ்பவகை:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
புஷ்பவகை
பின்னர், இருபது அங்குல அகலமுள்ளதாயும், எட்டு அங்குல உயர முள்ளதாயும், எட்டங்குல உயரமும் அகலமும் உடைய கால்களை யுடையதாயும், இருபக்கங்களினும் எட்டங்குல நாளத்தையுடையதாயும், நாளமும் பாதமுமில்லாத முடியுடன் கூடினதாயுமாவது, அல்லது இந்த அளவில் பாதியையுடையதாகவாவதுள்ள சுவர்ணம், இலை என்னுமிவற்றுள் யாதானுமொன்றாற் செய்யப்பட்ட பாத்திரத்தில் வைக்கப்பட்டவையாயும், மொட்டு கீழே விழப்பெற்றலும், சிதறிப்போனதும், நுகரப்பெற்றதும், துஷ்டஜந்துக்களி அங்களாற் பரிசிக்கப்பெற்றதும், எட்டுக்காற் பூச்சியின் நூலால் சுற்றப்பெற்றதும், பழையதும், ஆடையிற்கொண்டு வரப்பெற்றதுமாகிய இவை முதலிய குற்றங்களில்லாதனவாயும், நன்றாய்ச் சுத்தஞ் செய்யப்பட்டனவாயும், இலைப்பிடிப்பு நீக்கப்பட்டனவாயுமுள்ள உயர்ந்த புஷ்பங்களால் மூலமந்திரத்தை யுச்சரித்துக்கொண்டும், மிருக முத்திரை செய்துகொண்டும் அர்ச்சிக்கவேண்டும். அவை வருமாறு :- தும்பைப்பூ, சுரபுன்னை, மந்தாரம், நந்தியாவர்த்தம், ஸ்ரீயாவர்த்தம், அலரி, எருக்கு, மகிழம், மருதூணி, வெள்ளைலொத்தி, நூறு இதழுடையதாமரை, ஊமத்தை, பலாசம், பாடலம், சண்பகம், கொன்றை, கர்ணிகாரம், கும்மட்டி, மாதுளை, மருதம், மயிற்கொன்றை, தேவதாரு, பச்சிலைமரம், முன்னை, மருக்கொழுந்து, அசோகம், பத்ரா, அபராஜிதம், ஆயிரம் இதழுடைய தாமரை, செங்கழுநீர், செந்தாமரை, நீலோற்பலம், குசும்பம், குங்குமமரம், மலைமல்லி, தருப்பை, நாயுருவி, கையாந்தரை, கமுகு, சரளம், மலையத்தி, கடம்பம், மா, இலுப்பை, நாகம், ஹேமாகுலி, குன்றிச்செடி, நிலப்பனை, வேஜிகை, ஜாதிமல்லி, பட்டி, மாலதி, ரித்தி, நொச்சி, விஷ்ணுகிராந்தி, வாழை, நன்னாரி, தேவதாளம், த்விகண்டி, கிரந்தபர்ணி என்னும் இவற்றின் பூக்களாகும்.
இப்பூக்களுள் வெண்மையான பூக்கள் சாத்துவிக பூக்களாகும். அவை முத்தியைக் கொடுக்கும். செம்மையான பூக்கள் இராசதபூக்களாகும். அவை போகத்தைக் கொடுக்கும். பொன்மையான பூக்கள் போக மோக்ஷங்களையும், எல்லாக்காரியங்களின் சித்தியையுங் கொடுக்கும். புத்திரர் பௌத்திரர்களின் விருத்தியையுஞ் செய்யும். நீலோற்பலத்தினும் வேறாயும், கருமை வர்ணமுடையனவாயும் உள்ள புஷ்பங்கள் தாமத புஷ்பங்களாகும். இவற்றை உபயோகிக்கக்கூடாது. கருமையாயிருப்பினும் பச்சிலைப் புஷ்பங்கள் கூரண்டவிஷ்ணுகிராந்தி யென்னுமிவற்றைப் விஷேட விதியிருத்தலால் பூஜைக்கு உபயோகிக்கலாம். இவை திடத்தைக் கொடுக்கும். எல்லாவர்ணங்களுமுடைய பூக்களால் பூஜைசெய்துவது உத்தமம். கருமை வர்ணமான புஷ்பங்களின்றிப் பூஜைசெய்வது மத்திமம். வெண்மை, செம்மை முதலிய இருவர்ணங்களையுடைய புஷ்பங்களாற் பூசிப்பது அதமம். ஒரே வர்ணமுடைய புஷ்பங்களாற் பூசிப்பது அதமாதமம். ஒவ்வொரு வர்ணமுடைய புஷ்பங்களாற் தனித்தனி கட்டப்பெற்ற மாலைகள் உத்மம். அநேக வர்ணமுடைய புஷ்பங்களாற் கட்டப்பட்ட மாலைகள் மத்திமம். இலையும், பூவும் கலந்து கட்டப்பட்ட மாலைகள் அதமம்.
எருக்கு, அலரி, வில்வம், கந்தபத்ரிகா, வெண்தாமரை, நூறு இதழுடைய தாமரை, ஆயிரம் இதழுடைய தாமரை, கொக்குமந்தாரை, ஊமத்தை, தும்பை, நாயுருவி, தருப்பை, வன்னி, கொன்றை, சங்கம், கண்டங்கத்திரி, சதாபத்ரா, மிளகுச்செடி, நொச்சிச்செடி, வெள்ளெருக்கு, பெருந்தும்பை, நீலோற்பலம் என்னுமிவை முறையே ஒன்றற்கொன்று ஆயிரமடங்கு அதிகமான பலனைத்தருவனவாம். அவற்றுள் எருக்கம்பூ பத்துச் சுவர்ணத்தைத் தானம் செய்ததோடொக்கும். நீலோற்பலம் ஆயிரம் சுவர்ண புஷ்பத்தால் அர்ச்சனை செய்ததோடொக்கும். துளசி, கருந்துளசி, இந்திரவல்லி, விஷ்ணுக்கிராந்தி, நன்னாரி, குங்குமம், கரும்பு என்னும் இவற்றின் பூக்கள் எருக்கம் பூவுக்குச் சமமாகும். நந்தியாவர்த்தம், விஜயம், நூறு இதழுடைய தாமரை, மந்தாரம், மா, இலுப்பை, வெள்ளைவிஷ்ணுகிராந்தி, சிறுசண்பகம், கதலி, நன்னாரி என்னுமிவற்றின் பூக்கள் அலரிப்பூவுக்கொப்பாகும். ரித்தி என்னும் ஓஷதி, சகதேவி, நாகதந்தி, செண்பகமென்னுமிவற்றின் பூக்கள் வில்வ தளத்திற்கு ஒக்கும், பாதிரிப்பூவும், மகிழம்பூவும், தாமரைப்பூவுக்கொக்கும். ஜாதி, மல்லிகை, இலுப்பை, சங்கம், நாகம், சூரியாவர்த்தம், சிங்ககேசரம், மகாபத்திரம் என்னுமிவை முதலியவற்றின் புஷ்பங்கள் நாயுருவியின் பூவுக்கொப்பாகும். செவ்வரத்தம், கடம்பு, புன்னாகம் என்னுமிவற்றின் பூக்கள் தும்பைப் பூவுக்கொக்கும். அசோகம், வெள்ளைமந்தாரம் என்னும் இவற்றின் பூக்களும், ஏழுநாட்களில் விருத்தியடைந்த வால்நெல், கோதுமை, நீவாரம், நெல், மூங்கிலரிசி, மஞ்சாடி, பயறு, மொச்சை, விலாமிச்சை, உளுந்து என்னுமிவற்றின் முளைகளும் கொன்றைப் பூவுக்கொப்பாகும்.
வைரம், பத்மராகம், மரகதம், நல்முத்து, இந்திரநீலம், மகாநீலம், சூரியகாந்தம், சந்திரகாந்தம் ஆகிய இரத்தின புஷ்பங்களும், ஆயிரம் சுவர்ண புஷ்பங்களும் அலரி, நீலோற்பலமென்னும் புஷ்பங்களுக் கொக்கும். நீலோற்பலம் எல்லாப் பூக்களினும் சிறந்ததென்பது எல்லா ஆகமங்களின்றுணிபு. சில ஆகமத்தில் அலரி சிறந்ததென்றும், வேறுசில ஆகமத்தில் கொக்குமந்தாரை சிறந்ததென்றும், இன்னுமோராகமத்தில் மலைப்பூ எல்லாவற்றினும் சிறந்ததென்றும் கூறப்பட்டிருக்கின்றன. சிலர், எல்லாப் பூக்களினும் தாமரைப்பூவே சிறந்ததெனக் கூறுகின்றனர். ஆனால், காலவிசேடத்தை யநுசரித்துப் புஷ்பவிசேடத்துக்குப் பெருமையுண்டு எவ்வாறெனில், கூறுதும்:-
கடம்பம், செண்பகம், செங்கழுநீர், புன்னாகம், தருப்பை, கண்டங்கத்தரி யென்னும் இந்தப் புஷ்பங்களால் வசந்தருதுவாகிய சித்திரை, வைகாசியில் சிவபெருமானை அருச்சனை செய்யின் அசுவமேதயாகஞ் செய்த பலனைத்தரும். பாடலிப் புஷ்பம், மல்லிகைப் புஷ்பம், நூறு இதழ்களையுடைய தாமரைப் புஷ்பம் என்னுமிவற்றால் கிரீஷ்மருதுவாகிய ஆனி, ஆடி மாதங்களில் சிவபெருமானை அருச்சனை செய்யின் அக்கினிஷ்டோமம் செய்த பலனைத்தரும். தாமரை, மல்லிகை யென்னும் இவற்றின் புஷ்பங்களால் வருஷருதுவாகிய ஆவணி, புரட்டாசி மாதங்களில் சிவபெருமானை அருச்சனை செய்யின் அசுவமேதயாகஞ் செய்த பலனைத்தரும். ஊமத்தை, செங்கழுநீர், சுஜாதம், நீலோற்பலம் என்னுமிவற்றின் புஷ்பங்களால் சரத்ருதுவாகிய ஐப்பதி, கார்த்திகை மாதங்களில் சிவபெருமானை அருச்சனை செய்யின் சத்திரயாகஞ் செய்த பலனைத்தரும். அலரி, சுஜாதம், நீலோற்பலம் என்னுமிவற்றின் புஷ்பங்களால் ஹேமந்தருதுவான மார்கழி, தை மாதங்களிற் சிவபெருமானைஅருச்சனை செய்யின் நூறுயாகஞ்செய்த பலனைத்தரும். கர்ணிகாரப் புஷ்பத்தால் சிசிரருதுவாகிய மாசி, பங்குனி மாதங்களில் சிவபெருமானை அருச்சனை செய்யின் எல்லா யாகங்களுஞ் செய்த பலனைத் தரும்.
அவ்வாறே, ஆனி முதலிய பன்னிரண்டு மாதங்களிலும் முறையே எருக்கு, வில்வம், நாயுருவி, தும்பை, நீலோற்பலம், தாமரை, கொன்றை, கண்டங்கத்தரி, வியாக்கிரம், வன்னி, சண்பகம், பாடலம் என்னுமிவற்றின் பூக்கள் சிறந்தனவாகும்.
அவ்வாறே, நந்தியாவர்த்தம், ஸ்ரீயாவர்த்தம், வெள்ளெருக்கு, வெண்டாமரை, புரசு, புன்னாகம், சிறு சண்பகம், பட்டி, சிவந்த அகஸ்தியம், மகிழம், ரித்தி என்னும் ஓஷதி, திவிகண்டி, வேஜிகை, பாடலம், அசோகம், கதலி, சங்கினியென்னுமிவற்றின் புஷ்பங்கள் பிராதக்கால பூஜையில் மிகவுஞ் சிறந்தனவாகும்.
தும்பை, அலரி, கொன்றை, ஊமத்தம், வியாக்கிரம், கண்டங்கத்தரி, பாடலம், தாமரை, நீலோற்பலம், செண்பகம், குரண்டமென்னும் இவற்றின் பூக்கள் உச்சிக் காலத்துப் பூஜையில் மிகவுஞ் சிறந்தனவாகும்.
சண்பகம், ஊமத்தம், சிறுசண்பகம், மல்லிகை, வேஜிகம், பலகர்ணி, சகபத்ரை, பத்ராமுஸலீ, பச்சிலை, வன்னி, சங்கம் என்னுமிவற்றின் பூக்களும், வாசனையுள்ள பத்திரங்களும் சாயங்கால பூஜையில் மிகவுஞ் சிறந்தனவாகும்.
ஜாதி, நீலோற்பலம், கடம்பம், ரோஜா, தாழை, கமுகு, புன்னாகம், தந்தி என்னும் இவற்றின் பூக்களும், ஊமத்தையின் புஷ்பமும், குருவேரும், வில்வமுமாகிய அவை அர்த்த ராத்திரி பூஜையில் மிகவுஞ் சிறந்தனவாகும்.
கடம்பம், ஊமத்தை, ஜாதியென்னுமிவற்றை இரவிற்றான் சமர்ப்பிக்க வேண்டும்.
குருக்கத்தி, ஆனந்ததிகா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை அல்லது நீர்த்திப்பிலி, குமுழம், பருத்தி, வேம்பு, பூசுணி, இலவு, சிந்தித, வோட, மலைஆல், பொன்னாங்காணி, விளா, புளி யென்னுமிவற்றின் பூக்கள் விலக்கத் தக்கவையாகும்.
தாழம்பூவை விலக்கிய விலக்கானது அர்த்தராத்திரியிற்றவிர ஏனைய காலங்களிற்றான் உபயோகம். அஃதாவது, அர்த்தராத்தியில் மாத்திரம் தாழம்பூவை உபயோகிக்கலாம் என்பதாம்.
கடம்பப்பூவைப் பகற்காலத்துபயோகிக்கக் கூடாது. கிரிகர்ணிகையை விலக்கிய விலக்கானது நீலகிரிகர்ணிகையில் உபயோகம். அஃதாவது, நீலகிரிகர்ணிகை அருச்சனைக்கு ஆகாதென்பதாம், பலாசம் கூடாதென்ற விலக்கை முள்ளுள்ள பலாசத்திற்கு மட்டுங்கொள்ளல் வேண்டும். இவ்வாறே ஜவாபுஷ்பம் (செவ்வரத்தம்பூ) மகிழம்பூ என்னுமிவை சில ஆகமங்களில் விதிக்கப்பட்டும், சில ஆகமங்களில் விலக்கப்பட்டு மிருக்கின்றன.
கூடும் கூடாதென்ற இவற்றின் முடிவைப் பலத்தின் பேதத்தை யநுசரித்த பூஜையின் பேதத்தாலும், அவரவர்களின் முன்னோர் அநுட்டித்து வந்த ஆகமத்தை யநுசரிக்கும் பூஜையின் பேதத்தாலும், பூஜிக்கப்படும் மூர்த்தியின் பேதத்தாலும் நிர்ணயித்துக் கொள்க.
விலக்கப்பட்ட பூக்களை மண்டபத்தை யலங்கரிப்பதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.