Templesinindiainfo

Best Spiritual Website

Sivarchana Chandrika Snapanothakam in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – ஸ்நபனோதகம்:

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
ஸ்நபனோதகம்

அதன் முறையாவது, ஜலங்கொண்டுவரும் சுத்தமான குடத்தையெடுத்துக் கொண்டு சிவபெருமானிடத்தில் அனுமதி பெற்று புண்ணியப் பேற்றையுடையதாயும், நறுமணமுடையதாயும், நல்ல தீர்த்தமுடையதாயும், தேவர்களால் தோண்டப்பட்டதாயுமுள்ள நதியையாவது, தடாகத்தையாவது அடைந்து அந்தத் தீர்த்தத்தைப் பஞ்சப் பிரம்ம மந்திரங்களாலும் அங்கமந்திரங்களாலும் அபிமந்திரித்து, அஸ்திரமந்திரத்தால் குடத்தைச் சுத்தி செய்து, வடிகட்டி, இருதயமந்திரத்தால் தீர்த்தத்தை நிரப்பி எடுத்துக்கொண்டுவந்து ஈசுவரனுடைய வலது பக்கத்தில் வைத்து ஏலம், விலாமிச்சம்வேர், லவங்கம், கற்பூரம், பாதிரிப்பூஷ்பம், நீலோத்பலம், தாமரை, அலரி என்னுமிவற்றால் வாசனையுண்டாகும்படி செய்யவேண்டும்.

பஞ்சகவ்வியஞ் சேர்த்தல், பஞ்சாமிருதஞ் சேர்த்தல், ஸ்நபனோதகங் கொண்டுவரல் என்னுமிவற்றை, ஆத்மசுத்தி துவாரபால பூஜைகட்கு முன்னரே செய்ய வேண்டும். ஸ்நபனோதகம் சூரியனில்லாத சமயத்தில் எடுக்கக் கூடாது.

எவன் பூஜை செய்கின்றானோ அவனே புஷ்பங்களைக் கொய்தல் வேண்டும். தான் கொண்து கொள்ளமுடியாத விடத்தும் அல்லது சமயங்கிடையாதவிடத்தும் சந்தனமரைத்தல், நைவேத்தியம் பக்குவமாக்குதல் என்னுமிவற்றை நீராடினவராயும், சுத்தமான ஆடையையணிந்தவராயும், பவித்திரம் தரித்தவராயுமுள் பரிசாரகர்களால் செய்துகொள்கின்றோமோ, அவ்வாறே புஷ்பம் ஜலமென்னுமிவற்றையும் பவித்திரத்தைக் கையிலணிந்த பரிசாரகரைக்கொண்டு செய்துகொள்ளவேண்டும். இது எது போலுமெனின், யாகஞ் செய்யுங்கருத்தாவே தருப்பையையறுத்துக்கொண்டு வருதல் மாவைப்பிசைதல் செய்யவேண்டுமாயினும் தன்னால் முடியாத விடத்துப் பரிசாரகரைக் கொண்டு செய்து கொள்வது போலாம். இவ்வாறே பின்னர்க் கூறப்படும் பூசைக்கு வேண்டிய எல்லாச்சாமான்களையும் சமீபத்தில் வைத்துக்கொண்டு அவற்றின் சுத்தியைச் செய்துகொள்ளல் வேண்டும்.

Sivarchana Chandrika Snapanothakam in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top