சிவார்ச்சனா சந்திரிகை – உருத்திராக்கதாரண விதி:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை:
உருத்திராக்கதாரண விதி
உருத்திராக்கதாரணமும் விபூதிதாரணம் போலச் சிவ பூசையில் எப்பொழுதுந் தரிக்கவேண்டும். பிராமணர் முதலிய ஜாதியார் முறையே வெண்மை, செம்மை, பொன்மை, கருமை என்னும் வர்ணங்களையுடைய உருத்திராக்கங்களைத் தரிக்கவேண்டும். சொல்லப்பெற்ற வர்ணங்களையுடைய உருத்திராக்கங்கள் கிடையாவிடில் பிராமணர் நான்கு வர்ணங்களுள் ஒரு வர்ணமுடைய உருத்திராக்கந் தரிக்கலாம். க்ஷத்திரியர் செம்மை முதலிய மூன்று வர்ணங்களுள் ஒரு வர்ணமுடைய உருத்திராக்கந் தரிக்கலாம். வைசியர் பொன்மை முதலிய இரண்டு வர்ணங்களுள் ஒரு வர்ணமுடைய உருத்திராக்கந்தரிக்கலாம். சூத்திரர் கருமை வர்ணமுடைய உருத்திராக்கத்தையே தரிக்கவேண்டும். அல்லது அனைவரும் எல்லாவகையான உருத்திராக்கங்களையுந் தரிக்கலாம்.
சிரசு, கழுத்து, காது, புயம், மணிக்கட்டு, மார்பு என்னுமிந்தத் தானங்களில் அங்கங்களினளவுக்கு உரியதான எண்ணிக்கையுடன் கூடிய உரத்திராக்கத்தைத் தரிக்க வேண்டும்.
அல்லது சிரசில் நாற்பது, கழுத்தில் முப்பத்திரண்டு, காதுகளில் தனித்தனி ஆறு, கைகளில் தனித்தனி பதினாறு, மணிக்கட்டுகளில் தனித்தனி பன்னிரண்டு, மார்பில் நூற்றெட்டு இவ்வாறு இருநூற்று நாற்பத்தெட்டு உருத்திராக்கங்களைத் தரிக்கலாம். சிகையில் ஒன்று சேர்த்துத் தரிக்கலாம்.
சிகையில் ஒன்று, சிரசில் முப்பத்தாறு, மார்பில் ஐம்பது, பூணூலில் நுற்றெட்டு, கழுத்து, காது, புயம், மணிக்கட்டு என்னுமிவைகளில் முன்போல் முறையே முப்பத்திரண்டு, பண்ணிரண்டு, முப்பத்திரண்ட, இருபத்து நான்கு ஆக நூறு. இவ்வாறு இருநூற்றுத்தொண்ணூற்றைந்து உருத்திராக்கங்கள் தரிக்கலாம்.
சிரசில் நூற்றெட்டு, நாபிவரை நூற்றெட்டெண்ணுடைய மூன்று மாலைகள், கழுத்து, காது, மார்பு, புயம், மணிக்கட்டு என்னுமிவைகளில் முன்போல் நூற்றைம்பது, இவ்வாறு ஐந்நூற்று எண்பத்திரண்டு உருத்திராக்கங்கள் தரிக்கலாம்.
அல்லது கிடைத்ததற்குத் தக்கவாறு தரிக்கலாம். வைரம், மாணிக்கம், வைடூரியம், பவளம், நல்முத்து என்னும் பஞ்சரத்தினங்களுடன் கூடிய உருத்திராக்க தாரணமானது சுரம், பைசாசம், மேகம், குட்டம், பகந்தரம், குழந்தையை அபகரித்ததாலுண்டான தோஷமாகிய அபஸ்மாரமென்னுமிவைகளை நிவிருத்தி செய்யும்.
மகுடம், குண்டலம், காதணி, கேயூரம், கடகம், ஒட்டியாணம் என்னுமிவைகளில் உருத்திராக்கத்தைத் தரித்தால் அபமிருத்துவை நாசஞ்செய்யும். மற்ற இடங்களில் தரித்தால் ஆயுள் சம்பத்து கீர்த்தி என்னுமிவைகளை விருத்திசெய்யும். சிகையில் தரித்தால் கோடி மடங்கு பலன் உண்டு. காதுகள், கழுத்து, புயம் என்னுமிவைகளில் தரித்தால் முறையே ஒன்றற்கொண்டு பன்மடங்கதிகமான பலத்தைச் செய்யும். கைகளில் தரித்தால் அளவற்ற பலத்தைச் செய்யும்.
ஒரு முகமுடைய உருத்திராக்கத்தைச் சிகையில் மறைத்துத்தரித்தால் பிராமணக்கொலை செய்ததோஷமும், ஆயுதம், அக்கினி, திருடர், மழை என்னுமிவைகளாலுண்டான பெரிதான அச்சங்களும் நீங்கும்; ஆயுள்கீர்த்தி, சம்பத்து என்னுமிவைகளை விருத்திபண்ணும். போக மோக்ஷங்களைக்கொடுக்கும்; எல்லாச் சித்திகளும் உண்டாகும்.
இரண்டு முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் பசுக்கொலையாலுண்டான தோஷத்தை நீக்கும்.
மூன்று முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் பெண்ணைக்கொன்றதனாலுண்டான தோஷத்தை நீக்கும்.
நான்கு முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் புணருவதற்கு உரிமையில்லாத பெண்களைப் புணர்ந்த தோஷமும், தின்னுதற்கு உரிமையில்லாத பண்டங்களைத் தின்னுதலா லுண்டான தோஷமும் முதலிய தோஷங்களை நீக்கும்.
ஐந்து முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் எல்லாப் பாவங்களையும் நீக்கும்.
ஆறு முகமுடைய உருத்திராக்கத்தை வலது கையில் தரித்தால் கர்ப்பத்தைக் கெடுத்ததோஷத்தை நீக்கும்.
ஏழு முகமுடைய உருத்ரி£க்கத்தைத் தரித்தால் சுவர்ணத்தைத் திருடியதாலுண்டாம் தோஷத்தையும், பசுவைக் கொன்றதனாலுண்டாம் தோஷத்தையும் நீக்கும், விடத்தையும் போக்கும்.
எட்டு முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் குருபத்தினியைப் புணர்ந்ததனாலுண்டான தோஷத்தையும், வஞ்சகமாக தொழில் செய்ததனாலுண்டான தோஷத்¬யும் நீக்கும்.
ஒன்பது முகமுடைய உருத்திராக்கத்தை இடது கையில் தரித்தால் ஒரு லக்ஷங்கோடி மகாபாதகங்களை நீக்கும்.
பத்து முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால், பீடை, பிசாசம், வேதாளம், பிரமராக்ஷஸம், சர்ப்பம், சிங்கம், புலி என்னுமிவைகளாலுண்டான அச்சத்தை நீக்கும்.
பதினொரு முகமுடைய உருத்திராக்கத்தைச் சிகையில் தரித்தால் ஆயிரம் அசுவமேதயாகம், நூறுவாஜபேயம், இலக்ஷங்கோடி தானம் என்னுமிவைகளாலுண்டாம் பலத்தைக் கொடுக்கும்.
பன்னிரு முகமுடைய உருத்திராக்கத்தைக் கழுத்தில் தரித்தால் மிகுந்த தக்ஷிணையுடன் செய்த கோமேதம் அசுவமேத மென்னும் இவைகளாலுண்டாம் பலனைக் கொடுக்கும்; ஐசுவரியத்தை விருத்தி செய்யும்; இகத்தில் பற்களையுடை மிருகங்கள், கொம்புள்ள மிருகங்கள், திருடர், அக்கினி என்னுமிவைகளாலுண்டாகும் அச்சத்தைப் போக்கும்; எல்லாப் பாவங்களையும் நாசஞ் செய்யும்.
பதின்மூன்று முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் சமானமில்லாத போகத்தைக் கொடுக்கும்; இரசவாதம், தாதுவாதம், குளிகை முதலிய சித்திகளை உண்டு பண்ணும்; தந்தை, தாய், சகோதரர், பெண்கள் ஆகிய இவர்களைக்கொன்ற தோஷம் நீங்கும்.
பதினான்கு முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் எல்லாக்காரிய சித்திகளையும் உண்டுபண்ணும்; எல்லா வியாதிகளையும் பாவங்களையும் போக்கும்; ஞானயோகசித்திகளை உண்டு பண்ணும்.
மரணஜனன சூதகங்கள், பெண்ணின் சேர்க்கை, மலஜலங்கழித்தல், புலால், பூண்டு, தேத்தாங்கொட்டை, முருங்கைக்கீரை, நறுவிலி என்னுமிவைகளை உண்ணுதலென்னுமிவற்றில் சிரசு, புயம், கழுத்து, காது என்னுமிவைகளைத் தவிர ஏனைய அங்கங்களில் உருத்திராக்கங்கள் தா¤க்கலாகாது.
உருத்திராக்கத்தைக் கற்பசூத்திரத்தில் கூறியவாறு தானஞ் செய்யின் எல்லா வேதங்களையும், புராணங்களையும், அத்தியயனஞ் செய்ததனாலுண்டாம் பலனையும், எல்லா யாகங்களையும் தானங்களையும் செய்ததனாலுண்டாம் பலனையும், எல்லாத் தீர்த்தங்களினுஞ் சென்று ஆடினதாலுண்டாம் பலனையும் கொடுக்கும்; எல்லா ரோகங்களையும் போக்கும்; நூறு இலிங்கங்களைத் தாபித்ததாலுண்டாம் பலனையும், நூறு இலிங்கங்களைத் தானஞ்செய்ததாலுண்டாம் பலனையும், ஆயிரம் சாளக்கிராமத்தைத் தானஞ்செய்ததாலுண்டாம் பலனையும், ஆயிரம் கன்னியாதானத்தின் பலனையும் கொடுக்கும்; புத்திரமித்திரருடன் கூடின சகல ஐசுவரிய போகங்களையும் கொடுக்கும்; சிவசாயுச்சியத்தையுங்கொடுக்கும்.
இதுபோல் இந்தத்தானங்களை எந்தச் சிவபக்தன் ஏற்றுக்கொள்ளுகின்றானோ, அந்தச் சிவபக்தனுக்கும் இவ்வளவு பலன்களும் உண்டு.
பௌர்ணமி, இமாவாசை, சங்கிராந்தி, (உபராகம்) கிரகணம், ஜன்ம நக்ஷத்திரம் முதலிய புண்ணிய தினங்களில் உருத்திராக்க தாரணஞ்செய்யின் எல்லாப் பாவங்களையும் விலக்கும்.
பூஜாகாலத்தில் உருத்திராக்கத்தைச் சிரசில் ஈசான மந்திரத்தாலும், காதுகளில் தத்புருட மந்திரத்தாலும், கழுத்து முதலிய தானங்களில் அகோர மந்திரத்தாலும், மார்பில் வியோமவியாபி மந்திரத்தாலும் தரிக்கவேண்டும். உருத்திராக்கதாரண முறை முடிந்தது.