சிவார்ச்சனா சந்திரிகை – விபூதிஸ்நான முறை:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை:
விபூதிஸ்நான முறை
பசு, பிராமணர், தேவதை, அக்கினி, குரு, வித்தியாபீட மென்னும் இவற்றின் சன்னிதியை நீக்கி, மிலேச்சர், சண்டாளன் செய்நன்றி மறந்தவன் ஆகிய இவர்களுடைய பார்வையில் இராமல், நடைபாதையாகவில்லாத சுத்தமான இடத்தில் கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு பிராமணர் முதலிய நான்கு வருணத்தவரும் முறையே ஒரு பலம், ஒன்றரைப் பலம், இரண்டு பலம், இரண்டரைப் பலம் அளவுள்ளதாகவாவது ஒரு பிடியினளவாகவாவது கற்ப அநுகற்பரூபமான விபூதியை எடுத்து நிருதிதிக்கில் இராக்ஷத பாகத்தை எறிந்துவிட்டு அகற்பமான விபூதியாயின் முதலாவது திக்கு பந்தனஞ் செய்து பஞ்சப்பிரம்ம ஷடங்க மந்திரங்களால் சுத்தி செய்க. நான்கு விதமான விபூதியையும் ஹும்பட்என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திர மந்திரத்தால் ஏழு முறை அபிமந்திரணஞ்செய்க. இவ்வாறு சுத்தி செய்யப்பட்ட விபூதியால் விரக்தனாயிருந்தால் பாதமுதல் சிரசு வரையும், விரக்தனாக இல்லையாயின் சிரசு முதல் பாதம் வரையும் வலது கைக்கட்டை விரல் விரல் சுட்டு விரல்களின் நுனியால் எடுக்கப்பட்ட சிறிது விபூதியால் கைகால்கள் தவிர கைக்கு எட்டக் கூடிய ஏனைய அங்களில் பரிசித்து உத்தூளனஞ் செய்க. இது விபூதிஸ்நானத்தில் அழுக்கு நீக்கத்திற்குரிய ஸ்னானமெனப்படும். பின்னர் ஷடங்க மந்திரங்களால் செபிக்கப்பெற்ற விபூதியால் ஈசான முதலிய பஞ்சப்பிரம்ம மந்திரங்களை உச்சரித்து சிரசு, முகம், இருதயம், குய்யம், பாதம் ஆகிய இந்த அங்கங்களிலும், சத்தியோஜாதமந்திரத்தால் தோள்களிலும் ஏனைய அங்கங்களிலும், வலது கையாலும், வலது கைக்கு எட்டாத அங்கங்களில் இடது கையாலும் உத்தூளனஞ் செய்க. எஞ்சியுள்ள விபூதியை கும்ப முத்திரை செய்து மூலமந்திரத்தால் சிரவில் அபிஷேகம் செய்க.
இவ்வாறு பிராமணர் எல்லா அங்களிலும் உத்தூளனஞ் செய்ய வேண்டும். க்ஷத்தியர் முதலியோர் லலாடத்தில் முறையே நான்கு நுனியையுடைய சதுரச்சிரமாகவும், மூன்று நுனியையுடைய திரிகோணமாகவும், வட்டமாகவும் உத்தூளனஞ் செய்துகொண்டு கழுத்துக்குக் கீழும் நாபிக்கு மேலும் உத்தூளனஞ் செய்யவேண்டும்.
சூத்திரர் உத்தூளனமின்றி பின்னர்க் கூறப்படும் திரிபுண்டாரூபமான விபூதிஸ்நானத்தைச் செய்யவேண்டும். இந்தவிதி தபசியல்லாத சூத்திர சாரியாருக்குரியது. இதுபற்றியே ஞானரத்தினாவளியில் தபசியாயின் முறைப்படி விபூதியை எடுத்து அதனால் விபூதிஸ்நானஞ் செய்ய வேண்டுமென்பதை ஆதியாகவுடைய வாக்கியங்களால் அழுக்கு நீக்கத்திற்குரிய ஸ்னானம் விதிஸ்னானம் ஆகிய இரண்டின் ரூபமான உத்தூளனங்களில் அதிகாரி விசேடத்தைக் குறிப்பிட்டு தபசிகளுக்கு உத்தூளன ஸ்நானம் சொல்லப்பட்டிருத்தலால் உத்தூளனமல்லாத திரிபுண்டா ஸ்னானமானது தபசியல்லாத சூத்திரருக்குரியதாகும்.
இவ்வாறே க்ஷத்திரியரும் வைசியரும் தபசிகளாயில்லையாயின் திரிபுண்டர ரூபமான விபூதி ஸ்னானத்தையே செய்யவேண்டும்.
பிராமணர் முதலிய நான்கு வருணத்தவரும் உத்தூளனஸ்நானஞ் செய்ய முடியாத சமயங்களில் திரிபுண்டர ரூபமான விபூதி ஸ்நானத்தையே செய்யவேண்டும்.
திரிபுண்டர ரூபமான விபூதி ஸ்நானத்தை மட்டும் கருதியே சில ஆகமங்களில் பிராமணர் முதலிய நான்கு வருணத்தவர்களுக்கும் முறையே ஒரு பலம் அரைப்பலம், கல்ப் பலம் அரைக்கால்ப் பலமென்று விபூதியின் அளவு கூறப்பட்டிருக்கின்றது.
இந்த விபூதிஸ்நானத்தை தீக்ஷையையுடைய கிரகஸ்தன் மூன்று சந்திகளிலும் நீரோடு கலந்து செய்யவேண்டும். பெண்களும், சன்னியாசிகளும் நீரின்றியும், விரதத்தையுடையவரும், வானப்பிரஸ்தரும், கன்னிகையும், தீக்ஷையில்லாதவரும், மத்தியானத்திற்கு முன் நீரோடு கலந்தும் மத்தியானத்திற்குப் பின் நீரோடு கலப்பின்றியும் விபூதியைத் தரிக்க வேண்டும்.
இவ்வாறு விபூதிஸ்நானம் செய்து வேறு ஆடை தரித்துக் கொண்டாவது தரிக்காமலாவது ஆசமனஞ் செய்யவேண்டும்.