சிவார்ச்சனா சந்திரிகை – அக்கினிகாரியஞ் செய்யுமுறை:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
அக்கினிகாரியஞ் செய்யுமுறை
இவ்வாறு பரமேசுவரனைத் தோத்திரம், பிரதக்ஷிணம், நமஸ்காரமுதலியவற்றால் திப்தியடையும்படி செய்து, ஓ சுவாமின்! யான் அக்கினி காரியஞ் செய்கின்றேன் என்று தெரிவித்துப் பரமசிவனிடமிருந்து ஆணையைப்பெற்றுச், சாமான்யார்க்கிய பாத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அக்கினியிருக்கும் ஓமகுண்டத்திற்குச் சென்று, நிரீக்ஷணம் முதலிய நான்கு சுத்திகளால் சுத்தமாயும், ஒருமுழ அளவுள்ளதாயும், மண், மணலென்னுமிவற்றுள் யாதானுமொன்றால் செய்யப்பட்டதாயுமிருக்கும் இடத்தில் அரணிக்கட்டை, சூரியகாந்தமென்னுமிவற்றால் செய்யப்பட்டதாகவாவது, அக்கினிகாரியஞ் செய்பவர் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்டதாகவாவது உள்ள அக்கினியை சுவலிக்கும்படி செய்து, ஹும்பட்என்னும் பதத்தை யிறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் இராக்கதபாகமான அக்கினியை நிருதிகோணத்தில் போட்டுவிட்டு, மூலமந்திரத்தால் அக்கினியை நிரீக்ஷணஞ்செய்து, ஹும்பட்என்னும் பதத்தை யிறுதியிலுடைய அஸ்திர மந்திரத்தால் புரோக்ஷணம் தாடனம் என்னுமிவற்றைச் செய்து, வெளஷடு என்னும் பதத்தையிறுதியிலுடைய கவசமந்திரத்தால் அப்யுக்ஷணஞ் செய்து, ஹாம், ஹம், ஹாம் வஹ்நிமூர்த்தயே நம: என்று சொல்லிக்கொண்டு, சங்கார முத்திரையால் அக்கினி சைதன்யத்தைப் பூரகவாயுவினால் இருதயகமலத்திலிருக்கும் அக்கினியுடன் சேர்த்து, அதனுடன் கூடவே சுழுமுனாநாடியின் வழயாகத்துவாத சாந்தத்திற்குக் கொண்டுபோய், பரமசிவனுடன் கலந்ததாகச் செய்து, ரேசகவாயுவால் பிங்கலைநாடி வழியாக வெளியே கொண்டு வந்து, ஹாம் ஹ்ரூம், வஹ்நிசைதன்யாய நம: என்று சொல்லிக்கொண்டு, உத்பவமுத்திரை செய்து, அந்த அக்கினி சைதன்யத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும் அக்கினியில் சேர்க்க வேண்டும்.
பின்னர், நம: என்னும் பதத்தை யிறுதியிலுடைய சத்யோஜாத முதலிய ஐந்து மந்திரங்களால் அக்கினியைப் பூஜித்து, வெளஷடு என்னும் பதத்தை யிறுதியிலுடைய சத்திமந்திரத்தால் தேனுமுத்திரைசெய்து, அமிருதீகரணஞ் செய்து, கவசமந்திரத்தால் அவகுண்டனஞ்செய்து, அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணஞ் செய்து, இருதயமந்திரத்தால் அருச்சித்து, பரமேசுவரனுடைய வீரியமென்று பானைசெய்து, வாகீசுவரரையும் வாகீசுவரியையும், சமானர்களாயும், ஈசானதிக்கிலிருப்பவர்களாயுந் தியானித்து வாகீசுவரியின் கருப்பநாடியில் வாகீசுவரரால் அவருக்கெதிர் முகமாக அவருடைய வீரியமானது விடப்படுகிறதாகப் பாவிக்க வேண்டும்.
பின்னர், ஸ்வாஹா என்னும் பதத்தையிறுதியிலுடைய மூலமந்திரத்தால் ஐந்து ஆகுதிகளைக் கொடுத்து, ஹாம், சிவாக்னிஸ்த் வம்ஹ§தாசன என்று நாமகரணஞ்செய்து, (அதாவது, அக்கினியே நீ சிவாக்கினியாகின்றாயென்று பெயரிட்டு) கருப்பாதான முதலிய ஐந்து சமஸ்காரங்களால் சுத்திசெய்யப்பட்டதாக அக்கினியைப் பாவித்து, தந்தை தாயார்களாகிய வாகீசுவரர் வாகீசுவரிகளை இருதயமந்திரத்தால் அருச்சித்து அனுப்பிவிட்டு, சாமான்யார்க்கிய ஜலத்தால், வெளஷட் என்னும் பதத்தை யிறுதியிலுடைய கவசமந்திரத்தை யுச்சரித்துக் குண்டத்தையும் மேகலையையும் சம்புரோக்ஷணஞ் செய்து, மேகலைகளில் கிழக்கு நுனியாகவும் வடக்கு நுனியாகவும் பத்துத் தருப்பைகளை கவசமந்திரத்தால் பரப்பி, மேகலையினுடைய கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு ஆகிய திக்குகளி பிரமன், விட்டுணு, உருத்திரர் அனந்தராகிய இவர்களையருச்சித்து, குழந்தையாகிய அக்கினியைக் காப்பாற்றும்படி தெரிவித்து, ஐந்து முகமும், சிவந்த திருமேனியும், ஏழுநாக்குகளும், பத்துக் கைகளும், மூன்று கண்களும், எல்லா ஆபரணங்களுமாகிய இவற்றையுடையவராயும், சிவந்த ஆடையயைத்தரித்திருப்பவராயும், தாமரையின் மேலிருப்பவராயும், பத்மாசனத்துடனும் பத்து ஆயுதங்களுடனும் இருப்பவராயும் சிவாக்கினிதேவரைத் தியானித்து, சிவாக்கினியினுடைய மேல்முகத்தில் கனகை பகுரூபை, அதிரக்தையென்னும் மூன்று நாக்குகளையும், கிழக்கு முதலிய திக்குக்களிலிருக்கும் முகங்களில் சுப்ரபை, கிருஷ்ணை, இரக்தை, இரண்யையென்னும் நான்கு நாக்குக்களையும் தியானிக்கவேண்டும்.
பின்னர், ஹாம், அக்னயே நம: என்று சொல்லிக்கொண்டு பூசைசெய்து, ஹாம், ஹ்ரூம், அக்னயேஸ்வாஹா என்று சொல்லிக்கொண்டு ஐந்து திலாகுதிகளைச் செய்து, ஓ அக்கினியே! நீ ஈசுவரனுடைய பரிசுத்மான தேஜசாயிருப்பது கொண்டு உன்னுடைய இருதய கமலத்தில் தாபித்துத் திருப்தி செய்கிறேன் என்று அக்கினியினிடந்தெரிவித்து, அக்கினியினுடைய இருதயகமலத்தில் ஆசனமூர்த்தியையும் சதாசிவரையும் ஆவாகனஞ்செய்து, எல்லாவுபசாரங்களாலும் பூசித்து, சதாசிவருடைய முகத்தை அக்கினியின் முகமாயிருப்பதாகப் பாவித்து, ஸ்வாஹா என்னும் பதத்தை யிறுதியிலுடைய மூலமந்திரத்தால் சமித்து, அன்னம், நெய், பொரி, கடுகு, எள்ளு என்னுமிவற்றால், நூறு அல்லது ஐம்பது முறையாவது, அல்லது சத்திக்குத்தக்கவாறாக ஆவது ஓமஞ்செய்து, பிரமாங்கங்களுக்கு தசாம்ச ஓமஞ்செய்து ஹெளம், சிவாய வெளஷட் என்று சொல்லிக்கொண்டு, மேல்முகத்தில் பூரணாகுதி கொடுத்து, சுவாஹா என்னும் பதத்தையிறுதியிலுடைய மூலமந்திரத்தால் மூன்று கவள அளவுள்ள அன்னத்தை ஓமஞ்செய்து, பிரமாங்கங்களுக்குத் தனித்தனி ஆகுதிகொடுத்து, ஆசமனங்கொடுத்து, சந்தனந் தாம்பூலஞ் சமர்ப்பித்து, பஸ்மம் பாத்தியம் அட்டபுஷ்ப மென்னுமிவற்றால் பூசிக்க வேண்டும்.
நெய் முதலியன கிடையாவிடில் பத்திரம் புஷ்பமென்னுமிவற்றாலாவது ஓமஞ்செய்ய வேண்டும்.
பின்னர், தோத்திரம் பிரதக்ஷிணம் நமஸ்காரங்களால் திருப்தியை யுண்டுபண்ணி பராங்முகார்க்கியங்கொடுத்து சிவனை அக்கினியினின்றும் எழுந்தருளச் செய்து லிங்கத்தில் இருக்கும் சிவனிடம் சேர்க்க வேண்டும்.
பின்னர், மேகலையில் பரப்பியிருந்த தருப்பைகளை யெடுத்து நுனி நடு அடியென்னுமிவற்றை நெய்யால் நனைத்து ஒரு தருப்பையை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனையவற்றை நுனியை முதலாகக்கொண்டு தகனஞ்செய்ய வேண்டும். அந்த ஒரு தருப்பையினையும் அக்கினியில் போட்டு அதன் பஸ்மத்தால் நெற்றியில் பொட்டிடல் வேண்டும். அந்தப் பஸ்மத்தைத் தரித்தலானது, ஆயுள் சம்பத்துக் கீர்த்தியென்னுமிவற்றை விருத்திபண்ணும்; வெற்றி ஆரோக்கியமென்னு மிவற்றையுந் தரும்.
பின்னர், அதன் தென்பக்கத்தில் சதுரச்ரமான மண்டலமிட்டு மண்டலத்திற்குக் கீழ்பக்கத்தில் கிழக்கு முதல் வடக்கு ஈறாகவுள்ள மகா திக்குக்களில் உருத்திரர், மாதிரு, கணங்கள், யக்ஷர் என்னுமிவர்களையும், ஈசானமுதலிய கோணங்களில் கிரகங்கள், அசுரர், இராக்ஷதர், நாகங்களென்னுமிவர்களையும், மண்டலத்தின் மத்தியிலுள்ள ஈசானம், அக்கினி நிருருதியாகிய மூலைகளில் நக்ஷத்திரங்கள், இராசிகள், விசுவதேவர்களாகிய இவர்களையும், வாயு திக்கிற்கும் மேற்குத்திக்கிற்கும் இடையே «க்ஷத்திர பாலரையும் அருச்சித்து அருக்கியங்கொடுத்து, ஜலங்கலந்த அன்னத்தால் உருத்திரர் முதலாயினாரின் பொருட்டுப் பலிகொடுத்து, ஆசமனமுங்கொடுக்க வேண்டும்.
உருத்திரர் முதலாயினாரை யருச்சிக்கும் பொழுது நம: என்னும் பதத்தை யிறுதியிலுடையதாக அவரவரின் பெயரையுடைய மந்திரங்களிருக்க வேண்டும். பலிகொடுக்கும் பொழுது அந்த மந்திரங்களை சுவாஹாந்தமாக உபயோகப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது «க்ஷத்திரபாலருக்கு ஒருமை வசனமாயும், ஏனையோருக்குப் பன்மைவசனமாயும் மந்திரத்தை உபயோகப்படுத்த வேண்டும்.
பின்னர், கீழ்பாகத்தில் சதுரச்ர மண்டமிட்டு அதில் இந்திரன் முதல் விட்டுணுஈறாகவுள்ள உலகபாலகர்களுக்குப் பலிகொடுக்க வேண்டும்.
பின்னர், மண்டபத்தினுடைய வெளியங்கணத்தில் கோமயத்தால் மண்டலமிட்டு அதில், வாயசாதிப்யச் சமயபேதிப்யஸ் ஸ்வாஹா அக்ன்யாதிப்யஸ் ஸ்வாஹா, சர்வேப்யோக்ரக வாஸ்து தேவேப்யஸ் ஸ்வாஹா என்று சொல்லிக்கொண்டு வாயசாதிகளுக்கும், அக்கினியாதிகளுக்கும், கிரகங்களுக்கும், வாஸ்து தேவர்களுக்கும் தனித்தனி பலிகொடுத்து, நாய், பூதம், பதிதன் பிரேத ரூபமாயிருக்கும் உயிர்களாகிய இவர்களின் பொருட்டும் ஒரு பலி கொடுக்க வேண்டும்.
அல்ல சுரக்கமாகவே அனைவரையும் உத்தேசித்து, ஓ உருத்திரத்தானத்தில் வசிப்பவர்களாயும், பயங்கரமான செயல்களையுடையவர்களாயும் உள்ள உருத்திரர்களே! சௌம்யத்தானத்தில் வசிப்பவர்களாயும், சௌமியர்களாயுமிருக்கும் ஓ சௌமியர்களே! உருத்திரரூபிகளான ஓ அன்னைமார்கள்! திக்கு உபதிக்குகளிலிருக்கும் விக்கினரூபிகளான ஓ கணநாதர்களே! நீவிரனைவரும் திருப்தியுடன் கூடின மனமுடையவர்களாய் இப்பலியை ஏற்றுக்கொள்ள வேண்டும். சித்தியை எனக்கு விரைவில் தரவேண்டும், அச்சத்தில் நின்றுங்காக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ஒரு பலிபோட வேண்டும்.
இந்தப் பலிகாரியமனைத்தும் அக்கினிகாரியஞ் செய்வதற்கு அதிகாரம் உள்ளவனாற்றான் செய்யப்படல் வேண்டும். ஏனையோர் செய்யக்கூடாது. அக்கினிகாரியஞ் செய்தற்கு அதிகாரியாயிருப்பினும், ஓமத்திற்கு வேண்டுந்திரவியங்கள் பூரணமாயில்லாமலிருந்தாலும், அல்லது அக்கினிகாரியஞ் செய்தற்குச் சத்தியில்லாமலிருந்தாலும், அப்பொழுது ஓமமந்திரங்களை ஓமத்திற்குரிய எண்ணில் நின்றும் பத்துமடங்கு அதிகமாக ஆவர்த்தி செய்து செபிக்க வேண்டும். இவ்வாறு அக்கினி காரியத்தைச் செய்துவிட்டுப் பின்னர்ச் சிவஞானபூசை செய்ய வேண்டும்.