Templesinindiainfo

Best Spiritual Website

Sivarchana Chandrikai – Malajalam Kazhikkum Procedure

சிவார்ச்சனா சந்திரிகை – மலசலம் கழிக்குமுறை:

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை

மலசலம் கழிக்குமுறை

உரியதான இடத்தையடைந்து சலநிவிர்த்தி மலநிவிர்த்திகள் செய்யவேண்டும். பகற்காலங்களிலும் சந்திகளிலும் வடக்குமுகமாகவும், இராக்காலங்களில் தெற்குமுகமாகவும் ஈருந்துகொண்டுதான் மலசல நிவிர்த்திகள் செய்யவேண்டும். அல்லது காலையில் கிழக்குமுகமாகவம், மாலையில் மேற்குமுகமாகவும், நடுப்பகலில் வடக்குமுகமாகவும், இரவில் தெற்குமுகமாகவும் இருந்துகொண்டு மலசல நிவிர்த்திகள் செய்யலாம். செய்யுங்காலத்தில் வெறும் வெளியிலிருந்துகொண்டாவது, மலசலங்களின் முன்னரிந்துகொண்டாவது, ஒரு திக்கைப்பார்த்துக்கொண்டாவது, சந்திரன், சூரியன், நக்ஷத்திரங்கள், அக்கினி என்னும் இவைகளினுடைய பார்வையிலிருந்துகொண்டாவது, தேவர்கள், பசுக்கள், முனிவர், வேதியர், பெண்கள் என்னும் இவர்களுக்கெதிர் முகமாகவிருந்துகொண்டாவது, செய்தலாகாது. செய்தபின் யாகத்திற்கு உபயோகப்படாத புல்விசேடங்களையாவது ஓடு முதலியவற்றையாவது கொண்டு, குதத்தைத்துடைத்தல் வேண்டும். நல்ல புட்பங்களாலும், இலைகளாலும், குச்சுகளாலும், பழங்களாலும், குதத்தைத் துடைத்தல் கூடாது. கையால் குறியைப் பிடித்துக்கொண்டு கீழ் நோக்கிய பார்வையுடையனாய்ச் சென்று நீரின் சமீபத்தையடைந்து மண்ணுடன் கூடின நீரால் சௌசம் செய்தல் வேண்டும். மண்ணோடுகூடிய நீரால் சுத்தஞ்செய்யும்பொழுது, குறியில் ஒருமுறை மண்ணாலும், குதத்தில் ஐந்துமுறை மண்ணாலும், இடதுகையில் பத்துமுறை மண்ணாலும், புறங்கையிலும் உள்ளங்கையிலும் ஆறுமுறை மண்ணாலும், இருகைகளில் ஏழுமுறை மண்ணாலும் சுத்தஞ் செய்யவேண்டும். புற்றுக்களிலும், மரஙகளின் அடிகளிலும், வீடு, வழி, நீர்நடு, கானற் பூமி, எலிப்பொந்து, பசுநிற்குமிடம், ஆலயம் என்னும் இவைகளிலும், நடைவாய்க்கால், கிணறு, தடாகம் என்னும் இவைகளின் கரைகளிலும், மணலுள்ள இடம், வீதி, மயானம் என்னுமிவற்றிலும், புழு, எலும்பு, உமி, அக்கினி என்னுமிவிற்றால் கேடுபெற்றவிடங்களிலும், புழுதியானவிடத்திலும், அன்னியர் சௌசஞ் செய்துள்ள விடங்களிலும், கலப்பைகளால் உழப்பெற்றவிடங்களிலும், சேறானவிடங்களிலும், சுக்கான்பாறைகளிலும், மண்ணெடுக்கலாகாது. சுத்தமான பூமியில் மேல்மணலை நீக்கிவிட்டு அதனுள்ளிருக்கும் மண்ணைத்தான் எடுக்கவேண்டும். இவ்வாறெடுக்கப்பட்ட மண்ணால், எவ்விதமாகச் சௌசசுத்தி போதுமானதாகத் தோன்றுமோ அவ்விதமாகக் குறைவின்றிச் சௌசசுத்தி செய்துகொள்ளல் வேண்டும். முன்னர் அரைப்பிடி மண்ணால் குதத்தைச் சுத்திசெய்யவேண்டும். பின்னர் அதிலும் பாதியளவான மண்ணால் சுத்தஞ் செய்யவேண்டும். அதன்பின்னர் அதிலும் பாதியளவான மண்ணால் சுத்தஞ்செய்யவேண்டும். மூத்திர சுத்தி செய்யவேண்டுமாயின் ஈரநெல்லிக்காயளவான மணணையெடுத்துச் சுத்திசெய்து கொள்ள வேண்டும். இரவில்தானறியாமல் சுக்கிலம்கலிதமாயின் இரண்டு பச்சை நெல்லிக்காயளவான மண்ணால் சுத்திசெய்து கொள்ளல்வேண்டும். மனைவியின் சம்பவத்திற்குப்பின் மூன்று நெல்லிக்காயளவான மண்ணால் சுத்திசெய்யதுகொள்ளல் வேண்டும்.

இந்தச் சௌசமானது இல்வாழ்வானுக்கு விதிக்கப்பட்டது. அந்தக்கரணங்களின் சுத்தியின்பொருட்டு முன்னர்க்கூறப்பட்டவற்றைவிட பிரமசாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி என்னுமிவர்களுக்கு முறையே இரண்டு மூன்று நான்கு மடங்கு அளவு அதிகமாக விதிக்கப் பட்டிருக்கிறது. எவனுக்குப் பகலில் எவ்வளவு சௌசம் விதிக்கப்பட்டிருக்கின்றதோ அதிற்பாதிசௌசமே இராக்காலங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றது. இராக்காலங்களில் விதிக்கப்பட்ட சௌசங்களில் பாதிதான் நோயால் துன்புற்றவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றது. அதில் பாதிதான் காட்டுவழிச் செல்வோருக்கு விதிக்கப்பட்டிருக்கின்றது. கால்களின் பக்கங்களிலிருக்கிற கணுவரையும், கைகளில் மணிக்கட்டு வரையும் முன்னர்ச் சுத்திசெய்துகொண்டு பின்னர் முழங்கால் வரையும்முழங்கை வரையுஞ் சுத்திசெய்யவேண்டும். சௌசத்தினால் சுத்தியை விரும்பும் மனிதர்கள் நீர் நிலைகளிலும் நீரோட்டங்களிலும் சம்பந்தித்துச் செய்தல்கூடாது. உள்ளங்கையால் நீரையெடுத்துச் சுத்தி செய்யவேண்டும். சௌசஞ்செய்து கொள்ளுவதற்கு முன்னரே மண், நீர் என்னுமிவற்றைக் கொண்டுதருதற்கு வேலைக்காரரை நியமித்துக்கொள்ளல் வேண்டும். அவர்களால் கொண்டுவரப்பட்ட மண்ணை வலதுகையால் எடுத்து இடதுகையில் வைத்துகொள்ளல் வேண்டும். மலநிவிர்த்தி செய்தால் பன்னிமுறை வாய் கொப்பளித்தல் வேண்டும். சலநிவிர்த்தி செய்தால் நான்குமுறை வாய் கொப்பளித்தல் வேண்டும். அன்னம் உண்டபின் பதினாறுமுறை வாய் கொப்பளித்தல் வேண்டும். கிழக்குமுகமாக இருந்துகொண்டு கால்களையும் வடக்குமுகமாக இருந்துகொண்டு கைகளையும் முகத்தையும் சுத்திசெய்துகொள்ளல் வேண்டும். பின்னர் வடக்குமுகமாகவேனும் கிழக்குமுகமாகவேனும் இருந்துகொண்டு ஆசமனம் செய்தல் வேண்டும்.

Sivarchana Chandrikai – Malajalam Kazhikkum Procedure

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top