சிவார்ச்சனா சந்திரிகை – நைவேத்தியஞ் செய்யும் முறை:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
நைவேத்தியஞ் செய்யும் முறை
நைவேத்தியத்திற்கு விரீகியென்னும் செந்நெல்லரிசி, சாலியென்னும் சம்பாநெல்லரிசி, பிரியங்கு என்னும் தானியத்தினரிசி, நீவாரமென்னும் வனநெல்லினரிசி, கோதுமையினரிசி, மூங்கிலரிசி, வால்நெல்லரிசி யென்னுமிவை மேலானவையாம். அவற்றுள், செந்நெல் அரிசி அதமம். சம்பாநெல்லரிசி மத்திமம். ஏனைய அரிசிகள் உத்தமம். அவற்றுள்ளும் பிரியங்குவின் அரிசியும், நீவாரமென்னும் வனநெல்லரிசியும், கோதுமையரிசியும், மூங்கிலரிசியும் முறையே நூறு, ஆயிரம், இலட்சம், அநந்தமென்னும் பலன்களை யுடையனவாய் ஒன்றுக்கொன்று மேலானவையாம்.
அல்லது சம்பாநெல்லரிசி உத்தமம். வால்நெல்லரிசியும் மூங்கிலரிசியும் மத்திமம். செந்நெல்லரிசி அதமம் என்றறிந்து கொள்க.
சாலியென்பது வெண்மையான அரிசியையுடைய நெல். ஏனைய நெற்களனைத்தும் விரீகியெனப்படும்.
ஆர்மார்த்த பூசையில் ஒரு உழக்கு முதற்கொண்டு எட்டு மரக்கால்வரை ஒன்றுக்கொன்று மேலானதாகும்.
இருநூற்றிருபத்தைந்து எண்ணுள்ள நெற்கள் சுத்தியெனப்படும். இரண்டு சுத்திகள் தலமெனப்படும். இரண்டு தலங்கள் பிரகுஞ்சமெனப்படும். இரண்டு பிரகுஞ்சங்கள் பிரசுருதி யெனப்படும். இரண்டு பிரசுருதிகள் உழக்கு எனப்படும். இரண்டு உழக்கு அஞ்சலியெனப்படும். இரண்டு அஞ்சலிகள் படியெனப்படும். இரண்டு படிகள் பாத்திரமெனப்படும். இரண்டு பாத்திரங்கள் மரக்காலெனப்படும். இரண்டு மரக்கால்கள் சிவமெனப்படும். இரண்டு சிவங்கள் துரோணமெனப்படும்.
அல்லது இரண்டு குஞ்சங்கள் சேர்ந்தது மாஷம். இருபது மாஷங்கள் சேர்ந்தது ஒரு நிஷ்கம். எட்டு நிஷ்கங்கள் சேர்ந்தது ஒரு பலம். நான்கு பலங்கள் சேர்ந்தது ஒரு பாதம். நான்கு பாதங்கள் சேர்ந்தது ஒரு பிரஸ்தம். நான்கு பிரஸ்தஞ் சேர்ந்தது ஒரு மரக்கால். நான்கு மரக்கால் சேர்ந்தது ஒரு துரோணம் எனப்படும்.
நான்கு துரோண அளவுள்ளவையாயும், நைவேத்தியத்திற்காகச் சேகரிக்கப்பட்டவையாயும், உரோமம், புழு முதலியன இல்லாதவையாயும், உமி முளை முதலியவற்றின் துண்டுகள் இல்லாதவையாயும், குறுணைகளாக இல்லாதவையாயும், மிகவும் சுத்தமாயுமுள்ள அரிசியை, நல்ல நிறமும் மணமும் சுவையும் உடையதாயும், வடிகட்டினதாயும் உள்ள நீரினால் அடிக்கடி தேய்த்துச் சடங்கமந்திரங்களால் ஆறுமுறை கழுவி மணல்களும் கற்களுமின்றிச் சுத்திசெய்து பானையில் வைத்து, வைக்கப்பட்ட அரிசியின் மேல் அரிசியளவில் பாதி ஜலத்தை நிரப்பி, சாணத்தால் மெழுகப்பட்டதாயும், புரோக்ஷிக்கப்பட்டதாயும், பக்ஷிகளின் பார்வைக்கும் நீசர்களின் பாவைக்கும் அகப்படாததாயுமுள்ள சமையற்கட்டில், இருதயமந்திரத்தா லருச்சிக்கப்பட்ட அடுப்பில், வாமதேமந்திரத்தால் பானையை யெடுத்து இருதயமந்திரத்தால் ஏற்றி, அகோரமந்திரத்தால் அக்கினியை வைத்து வாயினால் சுவாலை செய்து, பக்குவம் ஆகாததாயும், அதிகமான பக்குவத்துடன் கூடினதாயும் இல்லாமல் சாவதானத்துடன் அன்னத்தைச் சமையல் செய்தல் வேண்டும். சத்த அன்னம் செய்யும் முறையிவ்வாறாகும்.
அரிசியினும் இரண்டு மடங்கு அதிகமான பாலுடனும், அரிசிக்குப் பாதியளவுள்ள பயறுடனுமாவது, அல்லது அரிசியின் மூன்று மடங்கு அதிகமான பாலுடனும், அரிசியின் நான்கின் ஒரு பங்கு அளவுள்ள பயறுடனுமாவது, அவற்றிற்கு ஏற்றவாறு சருக்கரை வாழைப்பழமென்னும் இவற்றுடன் கூடினதாய்பாயச அன்னத்தைச் செய்ய வேண்டும்.
அரிசியின் நான்கின் ஒரு பங்கு அளவுள்ள எள்ளும், அந்த எள்ளின் அளவில் பாதி, அல்லது நான்கில் ஒரு பங்கு அளவுள்ள நெய்யுங் கூடினதாய் எள்ளன்னத்தைச் செய்ய வேண்டும்.
அல்லது அரிசிக்குப் பாதியளவு பயறின் குறுணையும், எள்ளுப்பொடியும், சிறிது உப்பும் சேர்ந்ததாய் எள்ளன்னத்தைச் செய்ய வேண்டும்.
அரிசியின் பாதியளவுள்ள பாலுடனும், சருக்கரையுடனும், அவற்றின் பாதியளவுள்ள நெய்யுடனும் கூடினதாய்ச் சருக்கரை யன்னத்தைச் செய்ய வேண்டும்.
அல்லது அரிசியினும் இரண்டு மடங்கு அதிகமான பாலுடனும், அரிசியின் பாதியளவுள்ள சருக்கரையுடனும், சருக்கரையின் பாதியளவுள்ள நெய்யுடனும் கூடியிருப்பது சருக்கரையன்னமென அறிந்து கொள்க.
அல்லது அரிசியின் மூன்று பங்கு அதிகமான பாலுடனும், அரிசியின் மூன்றிலொரு பங்கு அளவுள்ள பயறுடனும், அரிசியின் நான்கிலொரு பங்குள்ள சருக்கரையுடனும், வாழைப்பழத்துடனுங் கூடியிருப்பது சருக்கரையன்னமாகும்.
அரிசியின் நான்கின் ஒரு பங்காவது, அல்லது மூன்றிலொரு பங்காவது, அல்லது சமமாகவாவது உள்ள பயறுடனும், தேங்காயுடனும் கூடினதாகவாவது, அல்லது தேங்காய் இல்லாததாகவாவது செய்யப்படுவது பயறன்ன மெனப்படும்.
சுத்தான்னம், பாயசான்னம், எள்ளன்னம், சருக்கரையன்னம், பயறன்னமென்னும் இவற்றிற்கு முறையே மேலும் மேலும் ஒன்றற்கொன்று ஆயிரமடங்கதிகமான பலன்களுண்டு. இவ்வாறே தயிரன்னம் தேனன்னங்களும் மேலானவையாகும்.
இவற்றுள் எல்லாவற்றையுமேனும், அல்லது சத்திக்குத் தகுந்தவாறு யாதானு மொன்றையேனும் அமைத்துக் கொள்ளலாம்.
நைவேத்தியத்தின் எட்டு அல்லது பதினாறிலொரு பங்குள்ள பயறு துவரை உளுந்து காறாமணி மொச்சை கொள்ளு என்னுமிவற்றுள் யாதானுமொன்றால் (சுண்டல்) செய்யபடல் வேண்டும். பயறு முதலியவற்றைச் சக்திக்குத் தகுந்தவாறு தோலற்றதாகவே கொள்ளல் வேண்டும்.
பிரஸ்த அளவுள்ள நைவேத்தியத்திற்கு * வியஞ்சனத் திரவியங்களாக இரண்ட அல்லது ஒரு பலமுள்ள வாழைக்காய், பலாக்காய், பூசுணிக்காய், வெள்ளரிக்காய், பாவற்காய், இருவகைக் கண்டங்கத்திரிக்காய், புலங்காய், மாங்காய், தேங்காய்யென்னு மிவற்றையாவது, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, கருணைக் கிழங்கு என்னுமிவற்றையாவது, அல்லது நல்ல சுவையும் வாசனையுமுடைய பொருள்களையாவது, உலந்ததாகவேனும் ஈரமுள்ளதாகவேனுங் கொண்டு, இவற்றுடன் உப்பி மிளகு சீரகம் ஏலமென்னுமிவற்றைப் பொடி செய்து அந்தப் பொடியுடன் சருக்கரை முதலியவற்றையுஞ் சேர்த்துக் கலந்து நெய்யினால் வறுக்க வேண்டும்.
( * வியஞ்சனம் – கறி)
புளிப்பாயும் கெட்டியாயுமிருக்கிற மோருடன் உப்பு மிளகு சீரகம் கொள்ளு கடுகு என்னும் இவற்றின் பொடிகளையும் சருக்கரையும் கலந்து குழம்பாகச் செய்து கொள்ளல் வேண்டும்.
இன்னும் உளுந்து பயறு கோதுமை அரிசிமா என்னுமிவற்றால் செய்யப்பட்டவையாயும், பூரணமான சருக்கரையுடன் கூடினவையாயும், பச்சைக்கற்பூரம் ஏலம் என்னுமிவற்றின் பொடிகளால் வாசனையுள்ளவையாயும் இருக்கும் அநேக அப்பம் வடைகளையும் பானகம் முதலியவற்றையும் செய்து கொள்ளல் வேண்டும்.
நைவேத்தியம் எந்த அளவு இருக்கின்றதோ அந்த அளவில் பதினாறில் ஒரு பங்கு, அல்லது முப்பத்திரண்டிலொரு பங்கு, அல்லது அறுபத்து நான்கிலொரு பங்கு நெய்யிருக்க வேண்டும். எட்டிலொரு பங்கு ஆடைத்தயிர் இருக்க வேண்டும். எல்லாப் பொருள்களிலும் பால் நெய் தயிர் என்னுமிவை பசுவினின்று முண்டானவையாவே இருக்கவேண்டும்.
நைவேத்தியம் சமர்ப்பித்தற்குரிய பாத்திரங்கள் சுவர்ணம் அல்லது வெள்ளி, அல்லது செம்பு, அல்லது சுத்த வெண்கலம் என்னுமிவற்றுள் யாதானும் ஒன்றால் செய்து கொள்ளப்படல் வேண்டும். இந்தப் பாத்திரங்கள் நாற்பத்தெட்டு அங்குல அகலத்தையும், ஒரு அங்குல உயரத்தையும், இரண்டங்குல கனமுள்ள விளிம்பையும் உடைத்தாயிருப்பின் உத்தமம். முப்பத்தாறங்குலம் முதற்கொண்டு பன்னிரண்டங்குலம் வரை அகலமுள்ள பாத்திரங்கள் மத்திமம். ஒன்பது ** யவம் முதற்கொண்டு ஒரு யவம் வரையுள்ள அளவு உடைய விளிம்பையும், விளிம்பின் அளவான++வேத்திரத்தையும் உடையதாகவாவது, வேத்திரம் இல்லாததாகவாவது, ஒன்பது அங்குல அகலத்தையுடையதும், அதற்குப் பாதி அகலத்தையுடையதுமான பாத்திரங்கள் மிகவும் அதமங்களாகும். எல்லாப் பாத்ரிங்களையும் காலில்லாதவையாகவும் வட்ட சொரூபத்துடன் கூடினவையாகவும் செய்ய வேண்டும். பாத்திரங்களுக்கு ஆதாரமான முக்காலிகள் பூசிக்கப்படும் இலிங்கத்தின் பீடம் எவ்வளவு உயரமிருக்குமோ அவ்வளவு உயரமிருக்க வேண்டும். எல்லாவித நைவேத்தியங்களும் சிவதீக்ஷையினால் சுத்தர்களாயும், சுத்தமான ஆடையையுடையவர்களாயும், விபூதி உருத்திராக்கங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாயும், பவித்திரத்தைக் கையில் அணிந்தவர்களாயுமுள்ள பரிசாரகர்களால் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
( ** யவம் – வால்நெல், ++வேத்திரம் – பிரம்புபோலுங்கம்பி.)
அவ்வாறே அலங்கரிக்கப்பட்டவர்களான பெண்களாலாவது நைவேத்தியத்தைச் செய்துகொள்ளுமிடத்தில் அரிசியைக் கழுவுதல் முதலிய கிரியைகளுக்குச் செபிக்க வேண்டிய மந்திரங்களைத் திரவிய சுத்தி செய்யுங்காலத்தில் அரச்சகர் ஜபிக்கவேண்டும்.
நைவேத்தியம் பக்குவம் ஆகாமலிருப்பினும், அதிகமான பக்குவத்தையடைந்திருப்பினும், சமையல் செய்து அதிக நேரமானதால் குளிர்ந்திருப்பினும், யாராவது நைவேத்தியத்தைத் தாண்டினும், அந்த நைவேத்தியத்தை விலக்கி வேறு நைவேத்தியம் செய்யப்படல் வேண்டும்.