சிவார்ச்சனா சந்திரிகை – நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை
ஈசுவரனுக்குப் பாத்தியம் ஆசமனீயம் அருக்கியமென்னு மிவற்றைக்கொடுத்து, அவருக்கு முன்னர்க் கோமயத்தால் சதுரச் சதுரமாக ஒரு மண்டலமிட்டு, மாப்பொடிகளால் கோலமிட்டு, சுத்தான்னம் பாயசான்ன முதலியவற்றால் நிரம்பப் பெற்ற பாத்திரங்களும், வாழைப்பழம் தேங்காய் மாம்பழம் பலாப்பழம் திரா¬க்ஷப்பழம் பேரிச்சைப்பழம் முதலிய பழங்களாலும், லட்டு, கஸ்தூரி சேர்ந்த பிட்டு மோதகம் அப்பம் என்னுமிவற்றாலும், வாழை பலா என்னும் இவற்றாலாய கறிகளாலும், இஞ்சி வெள்ளரிக்காய்களாலும், மாங்கய் ஊறுகாய் நாரத்தங்காய் ஊறுகாய்களாலும், தோல் நீக்கப்பட்ட பயறால் செய்யப்பட்ட பருப்புகளாலும் நிரம்பப்பெற்ற பாத்திரங்களும், மண்டலாகாரமாக முறையாக அலங்காரமாய் வைக்கப்பட்டு, இவற்றின் நடுவில் பால் தயிர்களும் புது நெய்யும் பெய்து, சருக்கரை தயிர் பால் பழமென்னுமிவற்றின் ரசங்களாற் செய்யப்பட்ட பருகுதற்குரிய பலவிதமான பொருள்களும், நாவாலிழுத்தற்குரிய பொருள்களும், உரிஞ்சுதற்குரியபொருள்களும், ஆகிய இவற்றாலும், பால் தயிர் வெண்ணெய் நெய்யென்னு மிவற்றாலும், ஏலம் சண்பகமொட்டு பச்சைக்கற்பூரம் கஸ்தூரி விலாமிச்சவேர் பாடலபுஷ்பம் முதலியவற்றால் வாசனை செய்யப்பட்டவையாயும், மிகவும் குளிர்ந்ததாயுமுள்ள ஸ்நபனகலசங்ஙஙகளினின்றுங் கொண்டுவரப்பட்ட ஒரு மரக்கால் பாதி அல்லது கால் மரக்கால் அளவுள்ள ஜலத்தாலும் நிரம்பப்பெற்ற பாத்திரங்களை நான்கு பக்கத்திலும் அலங்காரமாக வைத்து, இவ்வாறு சிவனுடையதும், அம்பிகையுடையதும், சதாசிவர் மனோன்மனி பரிவாரதேவர்கள் ஆவரண தேவர்களென்னும் இவர்களுடையதுமான நைவேத்திய பாத்திரங்களை வைத்து, அவற்றிற்கு மேல் பத்திரத்தைக் கிள்ளி வைத்து இருதயமந்திரத்தால் புரோக்ஷித்து மூன்றுதாளங்கள்¢திக்குபந்தனம் அவகுண்டனம் தேனுமுத்திரை யென்னுமிவற்றைச் செய்து, அன்னமுத்திரை பர்வதமுத்திரைகளைக்காட்டி, முன்னர் வைக்கப்பட்ட பத்திரத்தை எடுத்து அஸ்திரமந்திரத்தால் பரிஷேசனம் (நீர்க்கோட்டை) செய்து, இருதயமந்திரத்தால் தனித்தனி ஆபோசனங்கொடுத்து, புஷ்பத்துடன் கூடிய மிருகமுத்திரையால் முதலாவது கணபதிக்கு நிவேதனம் செய்து, பின்னர் அந்தப்புஷ்பத்தை நீக்கிவிட்டுக்கைகளைச் சுத்தஞ் செய்து ஹாம் ஹெளம் சிவாயஸ்வதாவென்று சொல்லிக் கொண்டு, ஐந்து அல்லது மூன்று அல்லது ஒருமுறை நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்கிற அபிநயத்துடனும் புஷ்பத்துடனும் கூடிய மிருக முத்திரையால் சிவனுக்கு நிவேதனத்தைச் செய்து, பின்னர் அம்பிகை முதலிய ஒவ்வொருவருக்கும் முறையே தனித்தனி நிவேதனத்தைச் செய்ய வேண்டும்.
தனித்தனி பாத்திரமில்லையாயின், எல்லாப்பரிவார தேவர்களுக்கும் ஆவரண தேவர்களுக்கும் ஒரே பாத்திரத்தில் நைவேத்தியத்தைக் கொண்டுவந்து தனித்தனி நிவேதனத்தைச் செய்ய வேண்டும்.
பின்னர், பரமசிவனுக்கு வாசனையுள்ள சலத்தைச் சமர்ப்பித்து, நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் புஷ்பத்தைச் சமர்ப்பித்து, எல்லாத்திரவிய சமூகத்தையும் பூரணமானதாகப் பாவித்து, ஸ்வதா என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் ஆசமனங்கொடுத்து, ஈசுவரனுடைய வலது இடது திருக்கரங்களில் பூசிக்கொள்வதற்காக கற்பூரம் முதலியன சேர்ந்த சந்தனம் சமர்ப்பித்து, கை வாய் கால்கள் சுத்தி செய்தல் முதலியவற்றைப் பாவிக்க வேண்டும்.
முன்னரே ஈசானதிக்கில் வைக்கப்பட்ட சந்தனம் புஷ்பங்களென்னும் நிர்மாலியங்களுடன் எல்ல நிர்மாலியங்களையும் எடுத்துச் சதாசிவர் நிர்மாலியத்தை மாத்திரம் ஈசானதிக்கில் சண்டேசுவரரின் பொருட்டு நிவேதனத்தைச் செய்ய வேண்டும்