சிவார்ச்சனா சந்திரிகை – சிவாகம பூசை செய்யும் முறை:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
சிவாகம பூசை செய்யும் முறை
காமிகம் முதலிய இருபத்தெட்டு ஆகமங்களே சிவஞானங்களெனப்படும். அவற்றுள்,
காமிகம், மூன்று பேதத்துடன் பரார்த்தங்கிரந்தங்களையுடையது,
யோகஜம், ஐந்து பேதத்துடன் லக்ஷங்கிரந்தங்களையுடையது,
சிந்தியம், ஆறு பேதத்தடன் லக்ஷங்கிரந்தங்களையுடையது,
காரணம், ஏழு பேதத்துடன் கோடி கிரந்தங்களையுடையது,
அஜிதம், நான்கு பேதத்துடன் லக்ஷஙகிரந்தங்களையுடையது,
தீப்தம், ஒன்பது பேதத்துடன் லக்ஷங்கிரந்தங்களையுடையது,
சூக்குமம், ஒரு பேதத்துடன் பத்மமென்னுங் கிரந்தங்களையுடையது,
சகஸ்கரம், பத்துப் பேதத்துடன் சங்கமென்னுங்கிரந்தங்களையுடையது,
அம்சுமான், பன்னிரண்டு பேதத்துடன் ஐந்து லக்ஷங்கிரந்தங்களையுடையது,
சுப்ரபேதம், ஒரு பேதத்துடன் மூன்றுகோடி கிரந்தங்களையுடையது,
விஜயம், எட்டுப் பேதத்துடன் மூன்றுகோடி கிரந்தங்களையுயைடது,
நிசுவாசம், எட்டுப் பேதத்துடன் கோடி கிரந்தங்களையுடையது,
சுவாயம்புவம், மூன்று பேதத்துடன் ஒன்றரைக்கோடி கிரந்தங்களையுடையது,
அனலம், ஒரு பேதத்தையும் முப்பதாயிரங்கிரந்தங்களையுமுடையது,
வீரம், பதின்மூன்று பேதங்களையும் லக்ஷங்கிரந்தங்களையுமுடையது,
ரௌரவம், ஆறு பேதங்களையும் எண்பதுபோடி கிரந்தங்களையுமுடையது,
மகுடம், இரண்டு பேதங்களையும் லக்ஷங்கிரந்தங்களையுமுடையது,
விமலம், பதினாறு பேதங்களையும் மூன்று லக்ஷங்கிரந்தங்களையுமுடையது,
சந்திரஞானம், பதினான்கு பேதங்களையும் மூன்று கோடிகிரந்தங்களையுமுடையது,
பிம்பம், பதினைந்து பேதங்களையும் லக்ஷங்கிரந்தங்களையுமுடையது,
புரோத்கீதம், பதினாறு பேதங்களையும் மூன்றுலக்ஷங் கிரந்தங்களையுமுடையது,
லளிதம், மூன்று பேதங்களையும் எண்ணாயிரங் கிரந்தங்களையுமுடையது,
சித்தம், நான்கு பேதங்களையும் ஒன்றரைக்கோடி கிரந்தங்களையுமுடையது,
சந்தானம், ஏழு பேதங்களையும் ஆறாயிரங்கிரந்தங்களையுமுடையது,
சா¢வோக்தம், ஐந்து பேதங்களையும் இரண்டு லக்ஷங் கிரந்தங்களையுமுடையது,
பாரமேசுவரம், ஏழு பேதங்களையும் பன்னிரண்டு லக்ஷங்கிரந்தங்களையுமுடையது,
கிரணம், ஒன்பது பேதங்களையும் ஐந்துகோடி கிரந்தங்களையுமுடையது,
வாதுளம், பன்னிரண்டு பேதங்களையும் லக்ஷங்கிரந்தங்களையுமுடையது,
இவ்வாறு திவ்யாகமங்களுள் மூலாகமங்கள் இருபத்தெட்டுள்ளன. இந்த ஆகமங்களின் சுலோக எண் பரார்த்தம், பத்மம், சங்கமென்னும் எண்களுடன் தொண்ணூற்றொன்பது கோடியே முப்பத்து மூன்று லக்ஷத்து நாற்பத்து நாலாயிரமாகும். மூலாகமங்களின் பேதங்களான உபாகமங்கள் இருநூற்றேழு ஆகும். இத்தகைய தியாகமங்கள் எல்லாவற்றையுமாவது, அல்லது கிடைத்ததற்குத் தக்கவாறு சிலவற்றையாவது, ஒன்றையாவது, அந்த ஒன்றிலும் தன் பூசைக்கு உபயோகமான சம்ஹிதையை மாத்திரமாவது, இலக்கணம் வாய்ந்த புத்தகங்களில் நன்றாக எழுதல் வேண்டும்.
புத்தகங்களுள், இருபத்திரண்டங்குல நீளமும், நான்கு அங்குல அகலமும் உடைய ஏடுகள் புத்தகம் இலக்குமிபத்திரமெனப்படும். இருபத்தொரு அங்குல நீளமும், மூன்று அங்குல அகலமும் உடைய ஏடுள்ள புத்தகம் ஸ்ரீரக்ஷமெனப்படும். இருபது அங்குல நீளமும், ஒரு வால் நெல்லளவு குறைந்த மூன்று அங்குல அகலமும் உடைய ஏடுள்ள புத்தகம் சந்திரகாந்தமெனப்படும். இந்த மூன்றும் உத்தமங்கள்.
பதினெட்டங்குல நீளமும், இரண்டரையங்குல அகலமும் உடையது நளினமெனப்படும். பதினேழு அங்குல நீளமும், மூன்று வால் நெல்லளவு அதிகமான இரண்டங்குல அகலமும் உடையது ஸ்ரீநிவாஸமெனப்படும். பதினாறங்குல நீளமும், இரண்டு வால் நெல்லளவு அதிகமான இரண்டங்குல அகலமும் உடைய ஸ்ரீபத்ரமெனப்படும். இம்மூன்றும் மத்திமங்களெனப்படும்.
பதினைந்தங்குல நீளமும் ஒரு வால் நெல்லளவு அதிகமான இரண்டங்குல அகலமும் உடையது இலக்ஷ¢மீநிவாசமெனப்படும். பதினான்கு அங்குல நீளமும் இரண்டங்குல அகலமும் உடையது உமாபத்ர மெனப்படும். பதின்மூன்றங்குலம் நீளமும் ஒருவால் நெல்லளவு குறைந்த இரண்டங்குல அகலமும் உடையது வீரபத்ர மெனப்படும். இம்மூன்றும் அதமங்களெனப்படும்.
இத்தகைய ஏடுகளுள் தனக்குக் கிடைக்கக் கூடிய ஏட்டைக் கொண்டு அதனுடைய நான்கு பாகத்தின் மத்தியிலாவது மூன்று பாகத்தின் மத்தியிலாவது துவாரமிட்டு வால் நெல்லின் நடுவின் அளவுகொண்ட நூற்கயிற்றால் கட்டிக்கொள்ள வேண்டும்.
இந்தச் சிவஞான புத்தகங்களைப் பூசிக்ம் பொருட்டுச் சிவனுடைய தெற்கு அல்லது மேற்கு அல்லது வாயுபாகமாகிய திக்கில் முப்பத்துமூன்று கைமுழம் முதல் மூன்று முழம் வரையில் யாதானுமோரளவு கொண்ட வித்தியாகோச கிருகத்தைச் செய்து வாசனையுள்ள சந்தனம் முதலியவற்றால் பூசப்பட்ட சுவரையுடைய அந்த வித்தியாகோசத்தின் நடுவில், யானைத்தந்த முதலியவற்றால் செய்யப்பட்டதாயும் சுவர்ணரேகை முதலியவற்றால் சித்திரவேலை செய்யப்பட்டதாயுமுள்ள வித்தியாசிங்காசனத்தை வைத்து, அந்த ஆசனத்தில் வெண்பட்டு முதலியவற்றை விரித்து, அதன் நடுவில் சுவர்ணம், வெள்ளி, செம்பு, வெண்கலம், பித்தளையாகிய உலோகம், கட்டை மூங்கிலென்னுமிவற்றுள் யாதானுமொன்றால் செய்யப்பெற்ற வித்தியாரத்தி நகரண்ட ரூபமான பெட்டியை வைத்து அந்தப் பெட்டியில் புத்தகங்களை வைக்கவேண்டும்.
பின்னர், எல்லாச் சிவாகமங்களின் பொருட்டு நமஸ்காரமென்னும் பொருளில், ஸர்வேப்யச் சிவக்ஞானேப்யோ நம: என்று சொல்லிக்கொண்டு, சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியமென்னுமிவற்றால் அந்தப் புத்தகங்களைப் பூசித்து எல்லா ஞானங்களையுங் கொடுக்கிறவராயும், அஞ்ஞானம் அனைத்தையும் நாசஞ் செய்பவராயும், வித்தியாபீடத்தில் வீற்றிருப்பவராயுமுள்ள சம்புவை மனம் வாக்குக்காயங்களால் வணங்குகின்றேன் என்று தோத்திரஞ்செய்து நமஸ்காரஞ் செய்ய வேண்டும்.
புத்தகங்கிடையாவிடில் சதுரச்ரமான மண்டலத்தில் அஷ்டதளபத்மத்தையும், அந்தப் பத்மத்தை மறைத்துக்கொண்டிருக்கும்படியாகப் பதினெட்டுத்தளமுள்ள பத்மத்தையும் வரைந்து, கர்ணிகையில் ஹெளம் சிவாய நம:, ஹாம் வாகீசாய நம: என்று சொல்லிக்கொண்ட வாகீசுவரருடன் கூடச் சிவனைப் பூசித்துக், கிழக்கு முதலிய பத்துத் திக்குக்களில், காமிகம் மதல் சுப்ரபேதமீறானவையாயும், பிறரையதிட்டிக்காது சிவனால் நேரே செய்யப்பெற்றமையால் சைவமென்ற பெயரை யுடையவையாயுமுள்ள பத்துத் திவ்யாகமங்களைப் பூசித்து, பதினெட்டுத் தளங்களில் விஜயம் முதல் வாதுளம் ஈறாகவுள்ளவையாயும், அநாதிருத்திரர் முதலாயினாரை யதிட்டித்துச் சிவனால் செய்யப்பெற்றமையால் ரௌத்திரமென்னும் பெயரையுடையவையாயுமுள்ள பதினெட்டு ஆகமங்களைப் பூசிக்க வேண்டும்.