Templesinindiainfo

Best Spiritual Website

Practicing Hinduism – Povum Nerum – பூவும் நீரும்

பூவும் நீரும்

“அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண்டு
அட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந்து
அட்டு மாறுசெய் கிற்பஅ திகைவீ
ரட்ட னாரடி சேரு மவர்களே”

– திருநாவுக்கரசர்

“புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” என்பது திருமுறை. மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் வழிபாடு செய்வது இன்றியமையாதது. வீடுகளில் செய்யப் பெறுவது ஆத்மார்த்த வழிபாடு. திருக்கோயில்களில் நிகழ்த்தப் பெறுவது பரார்த்த வழிபாடு. இவ்விரண்டிலும் இறைவன் திருவுருவங்களுக்கு அபிஷேகம், அர்ச்சனை முதலியன நிகழும். அபிஷேகத்திற்குரிய திரவியங்கள் இவை என்பதையும், அவற்றின் பயன்களையும், அதுபோல மலர்களின் மாட்சியும் அவற்றை இறைவனுக்குச் சாத்துவதால் உண்டாகும் நன்மைகளையும் அறிந்துகொள்வது அவசியம். எவ்வித வழிபாடாக இருப்பினும் புறந்தூய்மையும் அகந்தூய்மையும் வேண்டும். புறந்தூய்மை நீரால் அமையும் ஆதலால் வழிபாட்டிற்கு முன்னர் நீராடி, தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து தூயவராக விளங்கவேண்டும். திருநீறு முதலிய சமய அடையாளங்களும் தேவை. ஐம்புலன்களாலும் மனம் சலனமடையாமல் இறை வழிபாட்டில் ஒன்றுதல் வேண்டும்.

திருக்கோயிலுக்குச் செல்லும்போது இறைவழிபாட்டிற்குரிய மலர்கள், அபிஷேகத் திரவியங்கள், தூபம், தீபம் முதலியவற்றிற்கான பொருள்களைக் கொண்டு செல்லவேண்டும். வழிபாட்டிற்குரியனவற்றை இடுப்பிற்குக் கீழே இருக்குமாறு எடுத்துச் செல்லக்கூடாது. இரு கைகளாலும் கொண்டுசெல்ல வேண்டும். தூய்மையான இடங்களில் வைக்கவேண்டும்.

அபிஷேகத் திரவியங்கள்:

தூய்மையான ஆற்றுநீர், கிணற்றுநீர் அபிஷேகத்திற்கு முதன்மையானதாகும். “சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தாமே” என்னும் அப்பர் பெருமானின் வாக்கினால் தீர்த்தம் இறைவனோடு தொடர்புடையதாகும். இதனைக் குடங்களில் தூய்மையானவர்கள் சென்று வாத்தியங்கள் முழங்க நாள் தோறும் கொண்டுவரல் வேண்டும்.

கங்கை எல்லா நீர்நிலைகளிலும் விளங்குகின்றாள் என்பது மரபு. கொண்டுவந்த திருமஞ்சனத்திற்குரிய நீரில் பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலிய மணமுள்ள பொருள்களை இடவேண்டும்.

“தடங்கொண் டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல் குடங்கொண் டடியார் குளிர்நீர் சுமந்தாட்ட” என்னும் திருஞானசம்பந்தர் வாக்கால் அபிஷேக நீர் இறைவனுக்குக் குளிர்ச்சியுடன் குடங்களில் கொணர்தல் வேண்டும் என்பதை அறியலாம். “போதொடு நீர் சுமந்தேத்த” என்னும் அப்பர் வாக்கால் உரிய காலங்களில் நீர் எடுத்து வரவேண்டும் என்னும் செய்தி தெரிகின்றது. பழைய நீரைப் பயன்படுத்தக் கூடாது.

அபிஷேக முறை:

நல்லெண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, பஞ்சகவ்யம், பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன் கரும்பின் சாறு, பழவர்க்கம், இளநீர், வாசனைச் சந்தனம் சிருங்கநீர், தாராநீர், ஸ்நபனநீர், சங்காபிஷேகம் ஆகியனவற்றை வரிசையாகச் செய்யவேண்டும். விபூதி, அன்னம், கும்பநீர், அர்க்கிய தீர்த்தம் இவற்றாலும் அபிஷேகம் செய்யவேண்டும்.

சகலாகம சங்கிரகம் என்னும் நூலில் கீழ்க்கண்ட முறை கூறப்பட்டுள்ளது:- 1. எண்ணெய், 2. பஞ்சகவ்யம், 3. மாவு, 4. நெல்லிமுள்ளி, 5. மஞ்சள் பொடி, 6. பஞ்சாமிருதம், 7. பால், 8. தயிர், 9. நெய், 10. தேன், 11. கரும்பின் சாறு, 12. பழரசங்கள், 13, இளநீர், 14. அன்னம், 15. சந்தனம், 16. ஸ்நபனநீர்.

பலன்கள்:

நன்னீர் ஆட்டினால் நம் விருப்பங்கள் இனிதே நிறைவேறும்; வாசனைத் தைலம் சுகத்தை அளிக்கும்; பஞ்சகவ்யம் பாவத்தைப் போக்கும்; பசுவின் பால், தயிர், நெய், நீர், சாணம் இவற்றால் ஆவது பஞ்சகவ்யம்.

“ஆவினுக்கருங்கலம் அரனஞ்சாடுதல்” – பசுவிற்குப் பெருமை, அதன் ஐந்து பொருள்களை இறைவன் திருமஞ்சனத்திற்கு ஏற்றருள்கின்றான். மேலும், திருநாவுக்கரசர்,

“பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந் தாடும் அவன்கழல்
மேல ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின்
காவ லாளன் கலந்தருள் செய்யுமே”
என்று கூறுவதால் பஞ்சகவ்ய அபிஷேகத்தால் பாபம் போகுமென்பது திண்ணம்.

பஞ்சாமிருதம் உடல் திடத்தை நல்கும். யம பயத்தைப் போக்கும் என்பதை திருஞானசம்பந்தர்

“பாலினால் நறுநெய்யால் பழத்தினால் பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
காலினால் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே” – என்று திருவாய் மலருகின்றார்.

நெய் அபிஷேகம் செய்தால் மோட்சநிலை கிடைக்கும்; பால் நீடித்த ஆயுளையும்; சத்வகுணத்தையும் தரும்.

“பாலை யாடுவர் பன்மறை ஓதுவர்
சேலை யாடிய கண்ணுமை பங்கனார்
வேலை யார்விட முண்டவெண் காடர்க்கு
மாலை யாவது மாண்டவர் அங்கமே”

என்னும் திருநாவுக்கரசர் திருவாக்கில், தேவர்கள் ஆலால நஞ்சால் சாவு நேரும் என அஞ்சியபோது அதனை அமுது செய்து தேவர்களுக்கு நீண்ட வாழ்வு தந்த வரலாறு பேசப்பெறுகின்றது. அப்பெருமான் உகந்தது பாலாகும்.

தயிர்கொண்டு அபிஷேகம் செய்வதால் நன்மக்களைப் பெறலாம். குழந்தைகள் பேரில்லாதவர்கள் தயிர் அபிஷேகம் செய்து அக்குறையை நீக்கிக் கொள்ளலாம். மாப்பொடி கடன் தொல்லையை நீக்கி நல்வாழ்வு நல்கும். நெல்லிமுள்ளி அபிஷேகம் உடலிலுள்ளா நோய்களைப் போக்கி நல்லுடம்பு தரும். கரும்புச் சாறு கொண்டு திருமஞ்சனம் செய்யின் ஆரோக்கியம் அளிக்கும். தேன் சுகத்தைக் கொடுக்கும்.

“வான நாடனே வழித்துணை மருந்தே
மாசி லாமணி யேமறைப் பொருளே
ஏன மாஎயி றாமையும் எலும்பும்
ஈடுதாங்கிய மார்புடை யானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
தேவ னேதிரு வாவடு துறையுள்
ஆனை யேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே”

– சுந்தரர்.

பழங்களைக் கொண்டு பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யின் செல்வப் பெருக்கு உண்டாலும். வாழைப்பழம் பயிர் வளர்ச்சியையும், மாம்பழம் மக்கட்பேறும், மாதுளை கோபத்தைப் போக்கி சாந்தத்தையும், கொளஞ்சி சோகத்தை நீக்கி இன்பத்தையும், நாரத்தம்பழம் ஒழுக்கத்தையும் நல்கும். எலுமிச்சை யம பயத்தை நீக்கும். சர்க்கரை பகையை அகற்று. இளநீர் போகங்களைத் தரும். அன்னத்தினால் அபிஷேகம் செய்வது அரச வாழ்வு தரும். சந்தனம் கலந்த நீர் இலட்சுமி கடாட்சம் நல்கும். நைவேத்யம் நிலப் பிரபுத்வத்தைத் தரும். தாம்பூலம் சுகத்தையும் சங்காபிஷேகம் புண்ணிய வாழ்வையும் அளிக்கும்.

பஞ்சாமிருதம் இரு வகைப்படும். ரசபஞ்சாமிருதம் – ஏலக்காய் முதலிய வாசனைப் பொருள்களுடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் சேர்த்துச் செய்யப்படுவது. பழபஞ்சாமிருதம் – மேற்கூறிய பொருள்களுடன் வாழை, பலா, மா முதலிய பழங்களையும் கூட்டிச் செய்யப்பெறுவது.

ஷோடச உபாசர முறை:

அபிஷேக முறைகளைப் பார்த்தோம்; பதினாறு வகையான உபசாரங்கள் வழிபாட்டில் செய்யப் பெற வேண்டும்.

1. தூபம், 2. தீபம், 3. மகாதீபம் (அடுக்குதீபம்), 4. நாகதீபம், 5. விருஷபதீபம், 6. புருஷதீபம், 7. பூர்ணகும்பம், 8. ஐந்து பஞ்சதீபம், 13. நட்சத்திர தீபம், 14. மேரு தீபம், 15. கற்பூரம், 16. மகாநீராஞ்சனம்.

மகாதீபம் 11, 9, 7, 5, 3, 1 முதலிய அடுக்குகளாக அமைந்திருக்கலாம். பதினாடு அடுக்கு – ஏகாதச ருத்திரர்கள், ஒன்பது அடுக்கு – நவசக்தி, ஏழு – சப்தமாத்ரு தேவதைகள், ஐந்து – பஞ்சபிரும்மம், மூன்று – மும்மூர்த்திகள், ஒன்று – சிவன் ஆகிய மூர்த்திகள் அதிதேவதைகள் ஆகும். தூபத்தை மூக்கிற்கு நேரிலும், தீபத்தைக் கண்களுக்கு எதிரிலும் காட்ட வேண்டும்.

உபசாரமில்லாவிடில் உண்டாகும் தீங்கு:

பூஜை இல்லாவிடின் ரோகமும், புஷ்பமில்லாவிடில் குலநாசமும், சந்தனமில்லாவிடின் குஷ்டரோகமும், ஜலமில்லாவிடில் துக்கமும், தூபமில்லாவிடில் சுகமின்மையும், தீபமில்லாவிடில் பொருள் முட்டுப்பாடும், நைவேத்யமில்லை எனில் வறட்சியும் மந்திரமில்லை எனின் வறுமையும் உண்டாலும்.

ஆடைகள்:

மிருதுவான பட்டு, பஞ்சு ஆகியவற்றால் ஆன வண்ணங்களுடன் கூடிய ஆடைகளை அணிவிக்க வேண்டும். ஆடை சாத்துவதால் சிவலோக வாழ்வு கிட்டும்.

சந்தனம்:

அகர், சந்தனம், கோஷ்டம், குங்குமப்பூ, கற்பூரம் இவைகளூடன் பன்னீர் கலந்த சந்தனம் சாத்த வேண்டும்.

ஆபரணங்கள்:

ஞாயிற்றுக்கிழமை மாணிக்க ஆபரணமும், திங்களன்று முத்துமாலையும், செவ்வாயன்று பவள வடமும், புதன் மரகத ஆபரணமும், வியாழன் புஷ்பராக அணியும், வெள்ளி வைர ஆபரணமும், சனி இந்திரநீல அணியும் அணிவிப்பது விஷேசம். எல்லா ஆபரணங்களையும் எல்லா நாட்களிலும் சாத்தலாம். ஆனால் மேலே கூறிய கிழமைகள் சிறப்பானவை.

மலர்கள்:

Puvum IlaiyumMalarkalin PalankaPaavam Akatrum Malarkal
இறைவன் திருமுடியில் ஒருபோதும் மலர் இல்லாமல் இருக்கக்கூடாது.

காலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம், (தாழை – இம்மலர் சிவவழிபாட்டில் பயன்படுத்தலாகாதது.) ஆகிய பத்துவித மலர்களால் வழிபட வேண்டும்.

நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் ஆகியன நன்மை தரும்.

மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியன உகந்தன.

அஷ்ட புஷ்பங்கள்:

அறுகு, சண்பகம், புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, தும்பை ஆகிய எட்டுமாம்.

உபயோகிக்க நாட்கள்:

தாமரை ஐந்து நாட்களுக்குள்ளும், அரளி மூன்று நாட்களுக்குள்ளும், வில்வம் ஆறு மாதத்திற்குள்ளும், துளசி மூன்று மாதத்திற்குள்ளும், தாழம்பூ ஐந்து நாட்களுக்குள்ளும், நெய்தல் மூன்று நாட்களுக்குள்ளும், சண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணுகிரந்தி மூன்று நாட்களுக்குள்ளும், விளாமிச்சை எப்போதும் பயன்படுத்தலாம்.

கையிற்கொண்டு வந்தது, தானாக விழுந்தது, காய்ந்தது, முகர்ந்துபார்க்கப்பட்டது, அசுத்தமான இடம், பொருள்களில் வைக்கப்பட்டது ஆகியன பூஜைக்கு ஆகாதனவாம். மலர்களைக் கிள்ளிச் சாத்தக்கூடாது (முழு மலராகவே சாத்த வேண்டும்). இலைகளைக் கிள்ளிச் சாத்தலாம். வில்வம், துளசி முதலியவற்றைத் தளமாகச் சாத்தவேண்டும்.

பூஜைக்குரிய இலைகள் (பத்திரங்கள்):

துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள் பூஜைக்குரியன.

தேவர்களுக்கு ஆகாத மலர்கள்:

அட்சதை, வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதாம். செம்பரத்தை, தாழம்பூ, குந்தம், கேசரம், குடஜம், ஜபாபுஷ்பம் இவை சிவனுக்கு ஆகாதன. அறுகு, வெள்ளெருக்கு, மந்தாரம் இவை அம்மைக்கு ஆகாதன. வில்வம் சூரியனுக்கு கூடாது. துளசி விநாயகருக்குக் கூடாது.

மூன்று தளங்களை உடைய வில்வம் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்கள், சோம, சூரிய, அக்னி ஆகிய முக்கண்கள் மும்மூர்த்திகள் ஆகிய தன்மைகள் பெற்றன. மூன்று ஜன்மாக்களில் செய்த பாபத்தைப் போக்கும். மூன்று தளங்களும் இச்சை, ஞானம், கிரியை என்ற மூன்று சக்திகளின் வடிவம்.

பஞ்ச வில்வங்கள்:

முல்லை, கிளுவை, நெச்சி, வில்வம், விளா ஆகியன.

இறைவனுக்கு எல்லாவற்றையும் அர்ப்பணித்து வழிபடாமல் உண்பவன் பொருள் நாசத்தை அடையும். எனவே உகந்தனவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும்.

இத்தொகுப்பில் கண்ட செய்திகள் சிவாகமங்களில் கூறப்பெற்றவை. எனவே கூடுமானவரை விதிகளை உணர்ந்து தவறாது அபிஷேகம், அர்ச்சனை முதலிய வழிபாடுகளைச் செய்து நல்லன எல்லாம் பெருக.

“வாசநலஞ் செய்திமையோர் நாடோறு மலர்தூவ
ஈசனெம் பெருமானா ரினிதாக வுறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளு மொழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே”.

– திருஞானசம்பந்தர்.

திருச்சிற்றம்பலம்

(மதுரை பன்னிரு திருமுறை மன்றத்தின் பூவும் நீரும் என்ற வெளியீட்டைத் தழுவியது.)

Practicing Hinduism – Povum Nerum – பூவும் நீரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top