சிவார்ச்சனா சந்திரிகை – அகத்து அக்கினி காரியம்:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
அகத்து அக்கினி காரியம்
அஃதாவது நாபியில் மூன்று மேகலையையுடைய குண்டமும் அதில் இயல்பாகவே அக்கினி இருப்பதாகவும் பாவித்து அந்த அக்கினியை அஸ்திரமந்திரத்தால் சுவாலிக்கும்படி செய்து அந்த அக்கினியில் சிறிது தணலை இராக்ஷச அம்சமாகப் பாவித்து அதை நிருதி கோணத்தில் போட்டுவிட்டு, குண்டத்திலிருக்கும் அக்கினியை நிரீக்ஷணம் முதலிய நான்கு சுத்திகள் செய்து, அந்த அக்கினியை சிவாக்கினையாகப் பாவிப்பதற்கு ரேசகவாயுவால் அந்த அக்கினியைச் சைதன்னிய சொரூபமாக இருதயத்தையடையும்படி செய்து, ஆங்கிருக்கும் ஞானாக்கினியுடன் சேர்த்து, சுழுமுனாநாடி வழியாகத் துவாதசாந்தத்தை யடையும்படி செய்து, ஆங்கிருக்கும் பரமசிவனுடன் சேர்த்து அவருடைய தேஜஸ் கூட்டத்தால் பொன்வருணமாகவும், எண்ணிறந்த சூரியனுக்குச் சமமான பிரபையையுடையதாகவும் பாவித்து ஞானக்கினி ரூபமான அதைத் திருப்பி நாபிகுண்டத்தில் தாபிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் வேறு சுத்தி இல்லாமலே சிவாக்கினியாக ஆகின்றது.
அவ்விடத்தில் சிவாக்கினியை சிவந்த வர்ணமுடையதாகவும், ஐந்து முகங்களையுடையதாகவும், பத்துக் கைகளையுடையதாகவும், சதாசிவத்திற்குச் சமமான ஆயுதத்தையுடையதாகவும், தியானித்து, அந்த அக்கினியின் ஹிருதய கமலத்தில் ஆசனம், மூர்த்தி, வித்தியாதேகங்களை நியாசஞ்செய்து, சிவனை ஆவாகனஞ் செய்து, சுழுமுனையாகிய சுருவத்தால், துவாதசாந்தத்திலிருக்கும் அமிருததாரையாகிய நெய்யை, மூலமந்திரத்தால் நூற்றெட்டு அல்லது இருபத்தெட்டு அல்லது எட்டு முறையாவது ஓமஞ் செய்து, சத்திமண்டலத்தினின்றும் பெருகின அமிருதமாகிய நெய்யால், பூரணமான நாபியிலிருக்கும் தாமரைக் கிழக்கின் அம்சத்தையுடைய தண்டாலும், இருதயகமலத்தாலும், வியாபிக்கப்பட்ட சுழுமுனாநாடியை உள்ளேயிருக்கும் சுருக்காகப் பாவித்து அதனால் ஹாம் சக்தயே வெளஷட் என்னும் மத்திரத்தையுச்சரித்துக் கொண்டு பூரணாகுதி செய்து, அதன் பின்னர் ஓமத்தால் திருப்தியடைந்த சிவபெருமானை நாடிவழியாக இருதயத்திலிருக்கும் தாமரையில் பூசிக்கப்பட்ட சிவனிடத்தில் சேர்த்து எட்டுப் புட்பத்தாலருச்சித்துப் பூசையை முடிக்க வேண்டும்.
அதன்பின்னர் புருவநடுவில் எல்லா அவயவங்களாலும் பரிபூரணராயும், சுத்தமான தீபத்தின் சொரூபத்தையுடையவராயுமிருக்கும் சிவனை சகளநிட்களரூபமாகத் தியானித்து, பூசித்து, பூசிக்கப்படுபவன் பூசிப்பவனென்று இருதன்மையால் வேறுபட்ட சிவனே நானென்னும் சிவோகம்பாவனையால் மனதை சமாதியினிறுத்த வேண்டும்.