சிவார்ச்சனா சந்திரிகை – தூபோபசாரமுறை:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
தூபோபசாரமுறை
சுவர்ணம், வெள்ளி, செம்பு, பித்தளையென்னுமிவற்றுள் யாதானுமொன்றாற் செய்யப்பெற்றதாயும், நான்கங்குலம் நீண்டதாயும், அதிற் பாதியளவு உயர்ந்ததாயும், எட்டங்குலம், விளிம்பையுடையதாயும், பின்பக்கத்தில் பத்மதளத்தால் அடையாளஞ் செய்யப்பட்ட இரண்டங்குலமுள்ள கழுத்தும், இரண்ங்குல உயரமுமுடையதாயும், நன்றாய் வட்டமாயும், குளம்பின் வடிவுபோல் வடிவையுடையதாயுமிருக்கிற பாதத்தையுடையதாயும், இரண்டங்குல அகலத்தையுடையதாயும், முன்னர்க் கூறப்பட்ட இலக்கணத்தையுடைய காலுடன் கூடியதாயுமுள்ள முகநாளத்துடன் கூடியதாயும், அநேக துவாரங்களையுடையதாகவாவது, ஒரு துவாரத்தை யுடையதாகவாவதுள்ள தாமரை மொட்டுப் போன்ற சொரூபத்தையுடைய மூடியுடன் கூடினதாயுமுள்ள தூப பாத்திரத்தைச் சுத்தமான தணலுடன் கூடிய அக்கினியால் நிரப்பி அவ்வக்கினியில் தூபப் பொருளையிட்டு தூபபாத்திரத்தை மூடி, நிரீக்ஷண முதலிய நான்கு சுத்திகள் செய்து, சந்தனம் புஷ்பங்களாலருச்சித்துத் தூப முத்திரை காட்டித் தூப பாத்திரத்தை வலது கையால் ஏந்திக்கொண்டு இடதுகையில் சுத்தமான வெண்கலத்தாற் செய்யப்பெற்றதாயும், நான்கு அல்லது, ஐந்து, ஆறு, அங்குலம் உயரமுள்ளதாயும், அவ்வளவு அகலமுள்ளதாயும், அந்த அளவுள்ள நாக்கையுடையதாயும், அதனினு மூன்று மடங்கு அகலமும், அரையங்குல அளவு உதடுமுடையதாயும், பக்கப்பட்டிகையுடன் கூடினதாயும், ஒன்று அல்லது, இரண்டு, இரண்டரையங்குலமுள்ள சிகரத்தையுடையதாயும், பாதியங்குல அளவுள்ள கழுத்தை யுடையதாயும், மூன்று அங்குல அகலத்தை யுடையதாயும், மூன்று அல்லது, நான்கு, ஐந்து, ஆறு அங்குலம் நீளமுள்ள நாளத்தையுடையதாயும், மேலே சூலம், பத்மம், ரிஷபம், சங்கம், சக்கரமென்னுமிவற்றுள் யாதானுமொரு அடையாளத்துடன் கூடிய மணியை அடித்துக்கொண்டே ஈசுவரனுடைய நாசியின் சமீபத்தில் ஓம் ஹாம் ஹெளம்சிவாய தூபம் ஸ்வாஹா என்று சொல்லிக்கொண்டு தூபத்தைச் சமர்ப்பித்துப் பின்னர் தூபபாத்திரைத்தை உயரே தூக்கிச் சுற்றிக் கிரீடத்தில் பக்கங்களில் இரண்டு விந்துக்களுடன் கூடித் தண்டாகாரமாயிருக்கிற நாதத்தையும், முகத்திலிருக்கும் விந்து தேகத்தில் ஹகாரத்தையும், கைகளில் ஒளகாரத்தையும், கால்களில் ஊகாரத்தையும் தூப பாத்திரத்தைச் சுற்றுவதால் பாவித்துக் கொள்ளளல் வேண்டுல்.