சிவார்ச்சனா சந்திரிகை – முடிவுரை:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
முடிவுரை
இவ்வாறு நாடோறும் பிராதக் காலத்தில் சிவசிந்தனை செய்து, தன்னால் இயன்றவாறு ஸ்நானம், விபூதி, உருத்திராக்கதாரணம், சந்திதேவதைகளை உபாசித்தல் என்னும் இவற்றைச் செய்து கொண்டும், மூன்று காலங்களிலாவது, இரண்டு காலங்களிலாவது, ஒரு காலத்திலாவது ++நாற்பது, அல்லது பதினாறு, பத்து, ஐந்து என்னும் உபசாரங்களாலாவது, அல்லது அஷ்டபுஷ்பங்களாலாவது சிவபெருமானைப் பூசித்துக்கொண்டும், அவகாசமிருந்தால் சிவசாத்திரங்களையும் பாராயணம் செய்துகொண்டும், சிவகதைகளையுங் கேட்டுக்கொண்டும், போஜன காலத்தில் சிவனுடைய அக்கினி காரியம் என்னும் புத்தியால் சிவனுக்கு நிவேதனஞ் செய்த பின்னர், நிவேதனம் செய்யப்படாது எஞ்சிய அன்னத்தையாவது, சிவனுக்கு அடிமை என்னும் புத்தியால் நிவேதனம் செய்யப்பட்ட அன்னத்தையாவது உட்கொண்டும், ஏனைய தாம்பூலம், பானீயம், சந்தனம், புஷ்பம் முதலிய அநுபவித்தற்குரிய பொருள்களையும் சிவனிடம் சமர்ப்பிக்கப்பட்ட வையாகப் பாவனை செய்து அநுபவித்துக்கொண்டும், எல்லாக் கிரியைகளின் பல ரூபமான சுகங்களையும் சிவனால் அநுபவிக்கப்படுபவையாகப் பாவித்துக்கொண்டும், எல்லாவற்றையும் சிவரராதனம் என்னும் புத்தியுடன் செய்து கொண்டும், தன்னுடைய முயற்சியின்றி நேரிட்ட விடயங்களையும் அந்தந்த விடயங்கள் நேரிடும் சமயங்களிலாவது, ஒரே சமயத்திலாவது சிவனுக்கு அர்ப்பணம் செய்து கொண்டும், எல்லாச் சுகங்களையும் சிவனுடைய உச்சிட்டம் என்னும் புத்தியுடன் அநுபவித்துக் கொண்டும், இலௌதிக காரியங்களை விசாரிக்கும் காலங்களிலும், அளவில்லாத சிவநாமங்களை அநுசந்தானம் செய்தலால் அவற்றைப் பலனுடையனவாகச் செய்து கொண்டும், உள்ளே போக்குவரத்துக்களால் கிரீடை செய்துகொண்டிருக்கிறதாயும், அளவற்ற சோபையை உடையதாயும், அமிர்தசொரூபமாயும், ஆனந்தமயமாயுமிருக்கும் பஞ்சாக்கர தேவைதையை உ£¤ய சமயங்களில் சிந்தித்துக்கொண்டும், எல்லா உபநிடதங்களாலும் தேடப்படுகின்ற மலரடியை உடையவராயும், எல்லாத் தேவர்களுக்கும் சக்கிரவர்த்தியாயும், கரையற்ற கருணைக்கடலாயும், தன்னை அடைந்தவரைக் காப்பவராயும், தனது இருதய கமலம் என்னும் குகையில் உமாதேவியருடன் கிரீடை செய்பவராயும், ஆனந்தக் கூட்டமே வடிவமாக உடையவராயுமுள்ள சிவபெருமானை இடைவிடாது ஞானக்கண்ணால் பார்த்துக்கொண்டும், தமக்கு விருப்பத்தைத் தரும் சுற்றத்தாருடன் சுகமாயிருத்தல் வேண்டும்.
(++ நாற்பது இவையெனத்தொகுத்துக் கூறப்பட்ட இடங்காணப்படாமையால் மேலே கூறப்பட்டவற்றைக் கொண்டு ஒருவாறு தொகுத்துக் காட்டுதும்.
1. ஆசனம், 2. ஆவாகனம், 3. அர்க்கியம், 4. ஆசமனீயம், 5. பாத்தியம், 6. அபிஷேகம், 7. ஆடை, 8. உபவீதம், 9. சந்தனம், 10. புஷ்பம், 11. தூபம், 12. தீபம், 13. நைவேத்தியம், 14. முகவாசம், 15. அலங்காரதீபம், 16. நாகதீபம், 17. சக்கர தீபம், 18. பத்மதீபம், 19. புருஷமிருகதீபம், 20. கஜாரூட தேவேந்திர தீபம், 21 – 29. ஆராத்திரீகம், 30. பஸ்மம், 31. கற்பூர நீராஜனம், 32. கண்ணாடி, 33. குடை, 34. சாமரம், 35. விசிறி, 36. பனையோலை விசிறி, 37. தோத்திரத்துடன் கூடிய பிரதக்ஷிணம், 38. சுளுகோதகம், 39. நமஸ்காரம், 40. விசர்ஜனம்.)
வேலூரை வாஸஸ்தானமாக உடைய சின்னபொம்மராஜாவின் உதாரமான இருதயத்திலும், அவருடைய இல்லத்திலும் நீண்டநாளாக விருத்தியடைந்து கொண்டிருக்கிறதாயும், தேவராலும் புகழத்தக்கதாயும் உள்ள சிவபூஜாவிதியை சிவபெருமானுடைய ஆணையால் இவ்வாறு செய்து முடித்தேன்.
இராஜயோகத்தில் உண்மையான சாமர்த்தியத்தை உடையவரும், தடையறற ஆணைமுதலியவற்றின் வலிமையால் விருத்தி அடைந்த திவ்யதேஜஸை உடையவரும், மிகவும் கம்பீர புருஷருமாகிய ஸ்ரீ சின்னபொம்ம மகாராஜாவானவர் சிவபெருமானை அர்ச்சித்துக் கொண்டு அனைவருக்கும் மேலாக விளங்குகின்றார்.
வாழ்த்து
சுரகண்டேச மூர்த்தியானவர் இந்தச் சிவார்ச்சனா சந்திரிகையை ஆகாயத்தில் சந்திரனைப்போல் கற்பகாலம் வரை நின்று நிலவும்படி செய்தல் வேண்டும்.
எவரைப் பற்றுக்கோடாகச் சார்ந்த சந்திரன் நகம் என்னும் வியாசத்தால் அவருடைய மலரடிகளில் பிரகாசிக்கின்றானோ அத்தகைய சுரகண்டேசுவரருடைய மலரடிகளைத் தினந்தோறும் வணங்குகின்றேன்.