சிவார்ச்சனா சந்திரிகை – பிரதக்ஷிணஞ் செய்யும் முறை:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
பிரதக்ஷிணஞ் செய்யும் முறை
இவ்வாறு தோத்திரஞ் செய்து, புஷ்பாஞ்சலி சமர்ப்பித்து, சாஷ்டாங்க நமஸ்காரஞ் செய்து, மூன்று முறை பிரதக்ஷிணஞ் செய்து ஐந்து முறை நமஸ்கரித்து, மீண்டும் பிரதக்ஷிணஞ் செய்யவேண்டும். பூசைக்குப் பலன் சித்திப்பதன் பொருட்டுப் பிரதக்ஷிணம் இன்றியமையாதது. பிரதக்ஷிணம் நான்கு அங்கங்களுடனிருக்கும். அவை வருமாறு:-
(அ) அடிமேல் அடி வைத்துச் செல்லுதல்.
(ஆ) இருகைகளையுங் கோர்த்துக் கொள்ளுதல்.
(இ) வாயால் தோத்திரஞ் செய்தல்.
(ஈ) மனத்தால் சிவபெருமானைத் தியானித்தல் என்பனவாம்.
பூரண கருப்பத்தையுடையவளாயும் சமீபத்தில் பிரசவிக்கக் கூடியவளாயுமுள்ள ஒருபெண், எண்ணெய் நிரம்பிய குடத்தையேந்தி மெல்ல நகர்ந்து செல்லுமாறுபோலப் பிதக்ஷிணஞ்செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பிரதக்ஷிணம் மூன்று வகைப்படும். அவையாவன:- சவ்யம், அபசவ்யம், சவ்யாபசவ்யம் என்பன. அவற்றுள்,
சவ்யமாவது – வலது பக்கமுதலாகச் சுற்றுதல்.
அபசவ்யமாவது – இடது பக்கம் முதலாகச் சுற்றுதல்.
சவ்யாபசவ்யமாவது – +இருபக்கமுங் கலந்து சுற்றுதல்.
(+ இருபக்கமுங்கலந்து கூற்றுதலாவது – இடது பக்கமாகச் சென்று சண்டேசுவரர் வரைபோய் மீண்டு வலது பக்கமாகச் சென்று கோமுகை வரைபோய் மீளுதல்)
இந்த மூன்று பிரதக்ஷிணங்களும் கிழக்குத் திக்கிலிருந்து ஆரம்பித்து அந்தக் கிழக்குத் திக்கில் வந்து பூர்த்தியாக வேண்டும். சவ்யாபசவ்யமான பிரதக்ஷிணமானது சோமசூத்திரத் தானமாகிய கோமுகி முதற்கொண்டு தொடங்கி அந்தத் கோமுகி வரையாவது செய்யப்படல் வேண்டும். இந்தமூன்று பிரதக்ஷிணங்களுள் சவ்யமான பிரதக்ஷிணத்தைப் பிரமசாரிகள் செய்யவேண்டும். அபசவ்யமான பிரதக்ஷிணத்தை யதிகள் செய்ய வேண்டும். யதிகள் – சந்நியாசிகள். கிருகத்தரும் வானப்பிரத்தரும் சவ்யாபசவ்யமான பிரதக்ஷிணத்தைச் செய்ய வேண்டும். இது ஒரு பக்கம்.
இனி, சவ்யமான பிரதக்ஷிணம் அனைவருக்கும்பொது. அபசவ்யம் சந்நியாசிகளுக்கு மாத்திரம் உரித்தது. சவ்யாபசவ்யம் தீக்ஷையுடையவர்களுக்குரித் தென்பது மற்றொரு பக்கம்.