Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :
Home / Hindu Mantras / Slokas / Vendukol Padhikangal – Win Destiny Through Thirumurai

Vendukol Padhikangal – Win Destiny Through Thirumurai

179 Views

ஆழ்க தீயதெல்லாம் சூழ்க அரன் நாமமே!

எண்ணிலா அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கும் இந்த அருட்பதிகங்களின்
தொகுப்பினை எழுதத் தூண்டுகோலாய் இருந்தது இணையத்தில் கண்ட சிங்கை நண்பர்
ஒருவரின் மடல். அதில் சிங்கை மற்றும் மலேசியாவில் தேவாரம்,
திருவாசகம் பாடல்களை பொதுவாய்
சாவு நிகழ்ச்சிகளில் பாட உகந்ததென்றே பலரும் கருதுவதாக அவர்
எழுதியிருந்தார். திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளில் பாடத்தக்க
பதிகங்கள் உள்ளனவா என்றும் கேட்டிருந்தார்.

அடியேன் அயர்ந்து போனேன். இந்த மூடத்தனத்துக்கு யார் பொறுப்பு? கடந்த
நூற்றாண்டில் தமிழ்ச்சமுதாயத்தைச் சூழ்ந்த இருள் அல்லவா இது! இனி இது
விலகும்!

திருமணம் மட்டுமா? காதல் கைகூட வேண்டிப் பாடுவதில் தொடங்கி, மக்கட்பேறு
வேண்டியும், பல்வகை நோய்கள் தீர்க்க வேண்டியும், செல்வம் கொழிக்கவும்,
அன்ன பிற உலகியல் இச்சை யாவும் தீர்த்த பின்னர் வீடுபேறு நல்கவும்
பலப்பல பாடல்களை சைவக்குரவர்மார் அருளிச் செய்துள்ளனர். தமிழ்கூறும்
நல்லுலகு இனியும் இத்தகு மூடத்தனங்களை ஒழித்து அனைத்து
நிகழ்வுகளுக்கும் ஏற்ற தமிழ்ப்பண்களைப் பாடி மீள வேண்டும் என்று ஆலவாய்
அண்ணல் ஆவலைத் தூண்ட இதை எழுதுகிறேன்.

ஒருவகையில் இது என் பிறவிக்கடனும் கூட.

அடியேன் பிறந்த ஆண்டு 1962. அவ்வமயம் கோள்களின் சேர்க்கை காரணமாய்
பல பாதிப்புகள் ஏற்படலாமென பீதி நிலவிக் கொண்டிருக்க, கருவுற்றிருந்த
என் அன்னையார் காஞ்சிப் பெரியவர் அறிவுரைப்படி விடாமல் ஓதிக்
கொண்டிருந்தது ஞானசம்பந்தப்பெருமான்
அருளிய கோளறுபதிகமே. பின்னர் என்னையும்
அறியாமல் அடியேன் திருமுறைகளில்
ஆழத்தொடங்கிய காலத்தில் அவர் அடிக்கடி
அதனை நினைவு கூர்வார்.

கோளறுபதிகத்தைப் போல் பல நிகழ்வுகளுக்கும் உள்ள
பதிகங்களைக் கீழே தொகுத்திருக்கிறேன்.

குடியேற்றம் (வ.ஆ.மாவட்டம்) சிவநெறிச்செல்வர்
ஆ.பக்தவத்சலம் அவர்கள் முன்னர் சிலவற்றைத்
தொகுத்திருக்கிறார். அடியேன்
மேலும் தேடித் தொகுத்துள்ள விரிவான பட்டியலிது.

1) தடைப்பட்டிருக்கும் திருமணம் நடைபெற ஆண் பெண் இருபாலரும் ஓதவேண்டிய
பதிகம்:
திருமருகலில் ‘சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்’ என்று தொடங்கும்
ஞானசம்பந்தர் நல்கிய பதிகம்.

2) திருமணம், மணிவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான மங்களப் பதிகம்:
ஞானசம்பந்தப் பெருமான் மதுரை வரை தேடிவந்த தம் தந்தையார்
சிவபாதஇருதயரைக் கண்டு நெகிழ்ந்து தம் பிறவிக்குக் காரணமான பெற்றோரை
வணங்கிப் பாடிய
‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என்ற திருக்கழுமலர்ப் பதிகம்.

3) மலட்டுத் தன்மை நீங்கவும், குழந்தைச்செல்வம் வேண்டியும் பாடவேண்டிய
பதிகங்கள்:
சம்பந்தப் பெருமான் ‘குறும்பை ஆண்பனை ஈனும்’ என்று பாடி
அதிசயம் நிகழ்த்திய திருவோத்தூர்ப் பதிகமும், மெய்கண்டதேவரின்
பெற்றோர் பாடிப் பேறுபெற்ற ஞானசம்பந்தரின் ‘கண்காட்டும் நுதலானும்’ என்ற
திருவெண்காட்டுப் பதிகமும்.

4) பிரசவம் நலமே நடைபெற வேண்டும் பதிகங்கள்:
சம்பந்தர் நல்கிய ‘நன்றுடையானைத் தீயதிலானை’ என்று தொடங்கும்
பதிகமும், அப்பர் பெருமான் நல்கிய ‘மட்டுவார் குழலாளொடு’ என்ற
பதிகமும்.
சிராப்பள்ளியில் எழுந்தருளியிருக்கும் தாயுமானவரைப் பாடியவையிவை.

5) குழந்தைகளுக்கு வரும் இனம்புரியாத நோய்கள் நீங்கவும், வாதம், வலிப்பு
போன்ற நோய்கள் தாக்கினும் பாடவேண்டிய
பதிகம்:
கொல்லிமழவனின் மகவின் முயலகன் என்னும் பிணி போக்க வேண்டி சம்பந்தர்
பாடியருளிய ‘துணிவளர் திங்கள்’ என்று தொடங்கும் திருப்பாச்சிலாசிரமப்
பதிகம்.
திருச்சி – கரூர் பாதையில் வரும் திருவாசி என்று பெயர் மருவிய
ஊரிது.

6) விடம் தீர்க்கும் பதிகம்:
அரவம் தீண்டி மாண்ட அப்பூதி அடிகளாரின் மகனை மீண்டும்
உயிர்ப்பித்தருள வேண்டி அவரில்லத்தில் எழுந்தருளியிருந்த அப்பர் பெருமான்
பாடிய பதிகம்.

7) கண்பார்வைக் குறை நீக்க வேண்டிப் பாடும் பதிகம்:
சுந்தரமூர்த்தி சுவாமிகள் கச்சியேகம்பத்தில் அழுது வேண்டிப் பார்வை மீண்ட
‘ஆலந்தான் உகந்து அமுது செய்தானை’ என்ற பதிகம்.

8) சொரி, படை, மேகம், அம்மை போன்ற வியாதிகள் நீங்க:
சுந்தரமூர்த்தியார் பாடி மீண்ட ‘மின்னுமா மேகங்கள்’ என்ற
வேள்விக்குடிப்பதிகம்.

9) ஊமை, திக்குவாய்க் குழந்தைகள் நலம் பெற:
மாணிக்கவாசகர் தில்லையில் நல்கிய ‘பூசுவதும் வெண்ணீறு’ என்று தொடங்கும்
திருச்சாழலெனும் பாடல்கள்.

10) புத்திரசோகத்திலிருந்து மீள:
சுந்தரமூர்த்தியார் திருப்புக்கொளியூரெனும் அவிநாசி அருகே மடுவொன்றில்
முதலை விழுங்கிய மதலையினை மீண்டும்
உயிர்ப்பித்து மீட்ட பதிகம். சம்பந்தப் பெருமான்
திருமயிலையில் பூம்பாவையை மீண்டுமெழுப்பிய பதிகமும்.

11) தீராத வயிற்றுவலியைப் போக்கும் பதிகம்:
அப்பர்பெருமானை மீண்டும் ஆட்கொண்டருளிய ‘கூற்றாயினவாறு
விலக்ககலீர்’ என்று தொடங்கும் திருவதிகைப் பதிகம்.

12) குளிர்காய்ச்சல் நீங்க:
கொடிமாடச் செங்குன்றூரில் தங்கியிருந்த சம்பந்தர் அங்கு அடியார்களை வாட்டிய
குளிர்காய்ச்சலைப் போக்கியருளிய ‘அவ்வினைக்கு இவ்வினையாம்’ என்ற
திருநீலகண்டப் பதிகம்.

13) வெப்ப நோய்கள் நீங்க:
சம்பந்தப் பெருமான் மதுரை மன்னன் கூன்பாண்டியனின் வெப்புநோய் தீர்த்தருளிய
திருநீற்றுப்
பதிகம். மற்றும் சுண்ணாம்புக் காளவாய்ச் சூட்டையும் குளிர்வித்த அப்பர்
பெருமானின் ‘மாசில் வீணையும்’ என்ற பதிகம்.

14) ஐயங்களும், அச்சங்களும் நீங்கித் தன்னம்பிக்கை வளர:
அப்பர் பெருமான், மகேந்திர பல்லவன் படையாட்களை
அனுப்புகையில் பாடும் ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற மறக்கவொண்ணா
பதிகம்.
பின்னர் அவர் ‘சொற்றுணை வேதியன்’ என்று கல்லைத் தெப்பமாக்கி
கரையேறிய பதிகமும்; ஆனை மிதிக்க வருகையிலும் ‘அஞ்சுவது
யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை’ என்ற பதிகமும்.

15) வழக்குகளில் வெற்றிபெற, தவற்றினை உணர்ந்து வேண்ட:
சம்பந்தர் குறைகொண்ட பொற்காசு கண்டு மனம் பொறுக்காமல் பாடிய
‘வாசிதீரவே காசு நல்குவீர்’ என்ற திருவீழிமிழலைப் பதிகம்.

16. நாளும் மலர்தூவி வழிபட:
அப்பர் பெருமான் அருளிய ‘வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி’
என்று தொடங்கும் கயிலைக் காட்சி கண்டு பாடிய பதிகம்.

17) ‘துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்’ நாளும் ஓதவேண்டிய பஞ்சாக்கரப்
பதிகம்.
ஞானசம்பந்தப் பெருமான் தம் உபநயன நாளன்று பாடியருளியது. அப்படியே
நாளுமோத வேண்டிய பதிகம் அப்பர் பெருமான் ஸ்ரீருத்ரத்தைத் தமிழிலாக்கிய
உருத்திர
திருத்தாண்டகமும்.

18) கோள்களின் பாதிப்பகல:
திருமறைக்காட்டிலிருந்து மதுரைக்குப் புறப்படும் சம்பந்தர் கோள்களின் பாதிப்பு
நீங்கப் பாடிய கோளறு பதிகம்.

19) தொடங்கிய செயல் இனிதே முடிக்க:
மதுரையம்பதியில் சமணருடன் வாது செய்யுமுன் மாதொருபாகனின் திருவுளம்
வேண்டிப் பாடிய ஆலவாய்ப் பதிகம்.

20) சனிக்கிரகத்தின் பாதிப்பகல:
சம்பந்தப் பெருமான் திருநள்ளாற்றில் நல்கிய ‘போகமார்த்த பூண்முலையாள்’
என்று தொடங்கும் பதிகம். அனல்வாதின் போதும் எரியாமல் நின்ற
பதிகமிது.

21) வறுமை நீங்கிச் செல்வம் கொழிக்க:
பல பதிகங்கள் உள்ளன. குறிப்பாய், சம்பந்தர் பொன்வேண்டிப் பாடிய
திருவாவடுதுறைப் பதிகமும் (இடரினும் தளரினும்), சுந்தரமூர்த்தியார்
ஓணகாந்தன் தளியில் பாடிய (நெய்யும் பாலும் என்று தொடங்கும்) பதிகமும்,
திருப்பாச்சிலாசிரமத்தில் ‘அடப்போய்யா ஒன்ன விட்டா வேற ஆளாயில்ல’
என்று மிரட்டிய (இவரலாதில்லையோ பிரானார்) பதிகமும் சுவையான
கதைகளாய் விரிவன. பொன்பெற்ற பதிகங்கள் என்று ஏவிஎம் நிறுவனத்தார்
வெளியிட்ட ஒலிநாடா ஒன்றுள்ளது. அதிலும் பல பதிகங்களைத்
தொகுத்துள்ளார்கள்.

22) என்றும் உணவு கிடைத்திருக்க:
திருநாவுக்கரசர் அருளிய ‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’
என்று தொடங்கும் பதிகம்.

23) களவுப் போன பொருள்கள் மீண்டும் கிடைக்க:
தம்பிரான் தோழரை கொங்கு நாட்டில் திருமுருகன்பூண்டியருகே
களவாடி விளையாடியாண்ட கதை சொல்லும் பதிகம்.

24) மரணபயம் நீங்க:
அப்பர் பெருமான் நல்கிய ‘கண்டுகொள்ளரியானைக் கனிவித்து’ என்று
தொடங்கும் காலபாசத்திருக்குறுந்தொகை.

25) சஞ்சிதவினையெனும் தொல்வினைகள் அழிந்தொழிய:
காஞ்சி அருகே திருமாகறலில் சம்பந்தர் நல்கிய ‘விங்குவிளை
கழனிமிகு’ என்று தொடங்கும் பதிகம்.

26) பற்றிலான் தாள் பற்றிப் பற்றறுக்க:
‘காதலாகிக் கசிந்து’ என்று தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம்.
சம்பந்தரிதைப் பாடியருளிய பின் சோதியில் மீண்டதைப் பின்னர்
விரிப்போம்.

27) பிறவிப்பயன் பெற்றோங்க:
அப்பர் பெருமான் சீவன் குறுகிச் சிவமாக வேண்டும் ‘தலையே நீ வணங்காய்’
என்ற திருவங்கமாலை.

28) சிவஞானத் தெளிவடைந்து மீள:
ஞானசம்பந்தப் பெருமான் புனல்வாதின் போது பாடியருளிய திருப்பாசுரம்.
கூன்பாண்டியனை நின்றசீர் நெடுமாறனாக்கிய பதிகமிது.

விடுபட்ட பதிகங்கள் பல இருக்கலாம். சுட்டியருள வேண்டும்.
‘செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்’ (3.39.11) என்று
தமிழ்விரகன் சம்பந்தப் பெருமான் சாடும் அவச்சொல்
போக்கி மீள்வோம்.

‘பத்திமையால் பணிந்து அடியேன்தன்னைப்
பன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தானை’
வணங்கி,

அன்புடன்,
குமார்
ஜாவா

  • Facebook
  • Twitter
  • Google+
  • Pinterest
 
Note: We will give astrological reading / solution for those who are longing for children and do not give predictions for Job, etc.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *