Information

About Maha Magham Festivals | மகாமகம் Festivals

மகாமகம் எப்போது எங்கு நடைபெறும்?

தேவகுருவாகிய பிரகஸ்பதி என்றழைக்கப்படும் வியாழன், சிம்ம ராசியுடன் பொருந்தும்போது, அவரோடு மாசி மாதத்தில் மக நட்சத்திரமும், பௌர்ணமியும் சேரும் நிலையில், கும்ப ராசியில் சூரியன் இவர்களையும், இவர்களை சூரியனையும், முழுப் பார்வையுடன் பார்க்கும் நாளே மகாமகப் புண்ணிய நாளாகும். குரு பகவான் கும்ப ராசிக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவதால் மகாமகப் புண்ணிய காலமும் 12 ஆண்டுகளுக்கொரு முறை வருகிறது. பிரம்மதேவர் கும்பேசரைப் பூசிப்பதற்குத் தகுந்த காலம் மாசித்திங்களே என மனத்துள் கொண்டு, சீலம் நிறைந்த அந்த மாதத்துப் பூர்வ பட்சத்திலே வரும் அசுவதி நட்சத்திரத்தில் புனித தீர்த்தத்தில் மூழ்கி, பூசையைத் தொடங்கி, மாசி மக மகோத்ஸவம் செய்வித்தார். ஒன்பது நாள் விழாவைச் சிறப்பாகச் செய்து, பத்தாவது என்று சொல்லப்படுகின்ற திருநாளிலே, மக நாளிலே, அக்னித் திக்கில் உள்ள தீர்த்தத்தில் கும்பேசருக்கு தீர்த்தம் ஆட்டு விழாவும் செய்தார். அதுவே மக விழா என்றழைக்கப்படுகிறது.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசி மாத மகம் கூடிய நன்னாளில் மகா மக விழாவாகக் கொண்டாடப்படுவது எத்தனையோ நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. நதி தேவதைகளும் தங்களிடம் மக்கள் நீராடுவதால் ஏற்பட்ட பாவங்கள் தீருவதற்காக இந்த நாளில் கும்பகோணத்திற்கு வந்து இறைவனருளால் புனிதம் பெற்றதாகப் தல புராணம் கூறும். மகா மகக் கரையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தில் இந்நதி தேவதைகளுக்கென்று தனி சன்னதி உள்ளது. எனவே அன்றைய தினத்தில் கங்கை, யமுனை போன்ற புனித நதிகள் இத் திருக்குளத்தில் வந்தடைவதால் அது மேலும் புனிதம் பெறுகிறது.

வானவியலின்படி சூரியன், ஆண்டின் 12 மாதங்களில் 12 இராசிகளைச் சுற்றி வருகிறது. சந்திரன் பூமியை 30 நாட்களில் சுற்றுகிறது. ஒரு இராசியிலிருந்து, இன்னொரு இராசிக்கு குரு இடம்பெயர ஓர் ஆண்டு ஆகிறது. சிம்ம இராசியில் குருவும், சந்திரனும் வரும்போது, கும்ப இராசிக்கு சூரியன் வருகிறது. அப்போது சூரியன் நேரடியாக குருவையும், சந்திரனையும் பார்க்கிறது. இந்நிகழ்ச்சி பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை நடக்கிறது. இதனை மகாமகம் என்றழைக்கிறோம்.

மகாமகத்தின் புராண வரலாறு:

ஒரு சமயம் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, கோதாவரி, சரயு, குமாரி (தாமிரபரணி?), பயோஷ்ணி ஆகிய நவநதிகளும் ஒன்றுசேர்ந்து கயிலாய மலை சென்று சிவபெருமானை வணங்கி, எங்களிடத்தில் மகாபாவிகளும், மிகப்பெரிய பாதகங்களைச் செய்தவர்களும், நீராடி எல்லா பாவங்களையும் எங்களிடம் விட்டுவிட்டு நற்கதி அடைந்து வருகிறார்கள். எங்களிடம் விட்ட பாவங்களை நாங்கள் எங்கு சென்று போக்கிக் கொள்வது என்று கேட்டார்கள். அதற்கு சிவபெருமான் “கும்பகோணத்தில் அக்னித் திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்” என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன என்பது புராணக் கதையாகும்.

இந்த மகாமக தீர்த்தத்தை ஒரு தடவை வணங்கினால் எல்லா தேவர்களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். இந்த மகாமகக் குளத்தை ஒருமுறை சுற்றி வந்தால் இந்த பூமியை நூறு முறை சுற்றிய புண்ணியம் கிடைக்கும். இந்த மகாமகக் குளத்தில் ஒரு தடவை நீராடினால் கங்கைக் கரையில் நூறு ஆண்டுகள் வாழ்ந்து மூன்று காலமும் நீராடிய பலன் கிடைக்கும். இந்த புண்ணிய நாளில் மகாமகக் குளத்தில் வடபுறத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு தனது கோத்திரம், மனைவியின் கோத்திரம், உள்ளிட்ட ஏழு கோத்திரங்களையும் சேர்ந்தவர்கள் (ஏழு தலைமுறைகளுக்கு) நற்கதி அடைவர். வடபுறத்தில் உள்ள கிணற்றில் மகாமகத்தன்று காசியிலிருந்து கங்கை வருகிறது. அங்கு பல குமிழிகள் இடப லக்னத்தில் ஏற்படுவதைக் காணலாம்.

இந்த மகாமக குளத்தினை நவகன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால் இந்த தீர்த்தம் மகாமக தீர்த்தம் என்றும் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன.

இந்தக் குளத்தில் 20 தீர்த்தங்கள் உள்ளன

வாயு தீர்த்தம்
கங்கா தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம்
யமுனை தீர்த்தம்
குபேரத் தீர்த்தம்
கோதாவரி தீர்த்தம்
ஈசானிய தீர்த்தம்
நர்மதை தீர்த்தம்
இந்திர தீர்த்தம்
சரஸ்வதி தீர்த்தம்
அக்னி தீர்த்தம்
காவேரி தீர்த்தம்
யம தீர்த்தம்
குமரி தீர்த்தம்
நிருதி தீர்த்தம்
கிருஷ்ணா தீர்த்தம்
தேவ தீர்த்தம்
வருண தீர்த்தம்
சரயு தீர்த்தம்
கன்னிகா தீர்த்தம்.
(கன்னிகா தீர்த்தத்தில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் உள்ளன).

மகாமகக் குளம்

கும்பகோணம் நகரிலிருக்கும் மகாமகக் குளத்தின் பரப்பளவு 6 ஏக்கர் 2813 சதுர அடியாகும். இதனைச் சுற்றியுள்ள 16 சன்னதிகள் அருள்மிகு சோடசமகாலிங்க சுவாமி என்று அழைக்கப்படுகிறது. அவற்றில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அருள்மிகு சோடசமகாலிங்க சுவமி திருக்கோயில், கும்பகோணம் நகர் அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயிலின் துணை ஆலயமாகும்.

Maha Magham

அருள்மிகு சோடசமகாலிங்க சுவாமியின் திருநாமங்கள் வருமாறு

பிரமதீர்த்தேஸ்வரர்
முகுந்தேஸ்வரர்
தனேஸ்வரர்
விருஷபேஸ்வரர்
பாணேஸ்வரர்
கோணேஸ்வரர்
பக்திகேஸ்வரர்
பைரவேஸ்வரர்
அகத்தீஸ்வரர்
வியாசேஸ்வரர்
உமா பாகேஸ்வரர்
நிருதீஸ்வரர்
பிரம்மேஸ்வரர்
கங்காதரேஸ்வரர்
முக்தி தீர்த்தேஸ்வரர்
க்ஷேத்திர பாலேஸ்வரர்

மகாமகத் தீர்த்தம்

இத்திருக்குளத்தை மகாமகக் குளம், மகாமகத் தீர்த்தம், கன்னிகா தீர்த்தம், அமுதவான தீர்த்தம் என அழைப்பர். புண்ணிய காலத்தில் புனித நீராடும் வகையில் இத்திருக்குளத்தில் படிக்கட்டுகள் அமைந்துள்ளன.

மகாமகக் குளத்தில் நீராடும் முன் காவிரியில் சங்கல்பம் செய்து நீராட வேண்டும். மகாமகத்தன்று அருள்மிகு காசிவிசுவநாதர், அருள்மிகு அபிமுகேஸ்வரர், அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர், அருள்மிகு ஆதிகம்பட்ட விசுவநாதர், அருள்மிகு கோடீஸ்வரர், அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர், அருள்மிகு பாணபுரீஸ்வரர், அருள்மிகு அமிர்தகலசநாதர் ஆகிய பன்னிரண்டு சைவத் தலங்களுக்கும், அருள்மிகு சாரங்கபாணி, அருள்மிகு இராமசாமி, அருள்மிகு ஹனுமார், அருள்மிகு சரநாராயணப் பெருமாள், அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில், அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில், அருள்மிகு சக்கரபாணி பெருமாள் ஆகிய ஏழு வைணவத் தலங்களுக்கும் சென்று வணங்குவது அதிக பலனைத் தரும். மேலே குறிப்பிட்ட பன்னிரண்டு சைவத் தலங்களிலிருந்தும் சுவாமிகள் எழுந்தருளி மகாமகக் குளம் சென்று தீர்த்தவாரி நடைபெறும். அதேபோல் ஐந்து வைணவத் தலங்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி காவிரி நதியில் தீர்த்தவாரி நடைபெறும்.

இப்புனிதத் திருநாளில், ஈரேழு உலகம் சேர்ந்த தேவர்கள் ஒன்றுகூடி மகாமகக்குளத்தில் புனித நீராடுவார்கள் என்பது ஐதீகம்.

மகாமகத் திருக்குளம் மற்றும் மகாமகத் திருக்கோயில்கள் புராண வரலாறு

கிருதயுகம் : பிரம்மன் தவம் செய்தமையால் மகாமகக் குளத்திற்கு பிரம்ம தீர்த்தம் என்று பெயர்.
திரேதயுகம் : பாபங்களைப் போக்கியதால் பாபநோதம் என்று பெயர்.
துவாபரயுகம் : முக்தி அளித்ததால் முக்தி தீர்த்தம் என்று பெயர்.
கலியுகம் : ஸ்ரீ நவகன்னியர்கள் பூஜித்தமையால் கன்யா தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.
ஆதாரம் : வீரசிங்காதனப்புராணம்

குடந்தைப் புராண வரலாறு
முற்காலத்தில் யுகமுடிவில் ஏற்படும் ஊழியில் (பிரளயம்) சகல ஜீவராசிகளும் அழிந்து போகக் கூடிய நிலையை எண்ணிக் கவலையுற்ற படைப்புக் கடவுளான பிரம்மதேவன் அதை தவிர்க்கக் கருதி கயிலை நாதனை (சிவபெருமான்) துதித்து நிற்க நன்கயிலைநாதனும் (சிவபெருமான்) பிரம்ம தேவனின் வேண்டுகோளுக்கு இணங்கி அவ்வழிவைத் தடுக்கும் பொருட்டு சிருஷ்டி பீஜத்தை பிரும்ம தேவனிடம் அளித்து நரை, மூப்பு, சாக்காடு இவற்றைத் தடுக்க வல்ல ஆற்றல்மிக்க அமிர்தத்துடன் கலந்து, பிசைந்து முப்பத்து முக்கோடி ஜீவராசிகளின் வித்துக்களையும், நான்கு வேதங்களையும் அவற்றிற்குட்பட்ட புராணம், இதிகாசங்களையும், 12 ராசி களையும், 27 நட்சத்திரங்களையும் கும்பத்தில் அடக்கி கும்பத்தின் வாயிலில் மாவிலை, தேங்காய், பூணூல், தர்ப்பைப்புல், வஸ்திரம், சந்தனம், குங்குமம் இவைகளால் அலங்கரித்து பூரண கும்பமாக உறியிலே கட்டி மேரு மலையின் உச்சியில் வைக்கப்பட்டது. ஊழிக்காலத்தில் ஏழு கடலும் பொங்கி மேரு மலையும் மூழ்கிற்று. அதிலிருந்த குடம் உறியோடு மிதந்து காற்றின் திசையால் தென்திசை நோக்கி மிதந்து வந்தது. வெள்ளம் வற்றி கும்பம் குடமூக்கை அடைந்தது. சிவபெருமான் வேடுவ உருவம் தாங்கி (கிராத மூர்த்தியாக) எழுந்தருளி பாணம் எய்ய, அந்த அமிர்த கும்பம் மூன்று பிரிவுகளாக சிதைவுண்டது. அக்கும்பத்தின் வாயில் விழுந்த இடம் குடுவாயில் (இன்று குடவாசல் என வழங்கப்படுகின்றது). நடுப்பகுதியில் விழுந்த இடம் திருக்கலையநல்லூர் (அதனால் சாமியின் திருநாமம் அமிர்த கலசநாதர் மற்றும் அம்பிகையின் திருநாமம் அமிர்தவள்ளி என்று அழைக்கப்படுகிறது.) கீழ்பாகம் தங்கிய இடம் திருக்குடமூக்கு. அதிலிருந்து அமிர்தம் ஐந்து குரோஸ அளவு ஓடி இரண்டு இடங்களில் தேங்கி நின்றது.

மகாமகத் திருக்குளம்
பொற்றாமரைக் குளம்

அமிர்தம் பரவிய பஞ்ச குரோஸ தலங்கள்
திருவிடைமருதூர்
திருநாகேஸ்வரம்
தாராசுரம்
சுவாமிமலை
திருப்பாடலவனம் (கொரநாட்டுக்கருப்பூர்)

சிவபெருமான் காசியிலிருந்து நவகன்னிகைகளை மகாமகத் தீர்த்தத்திற்கு அழைத்து வரும்போது மேற்படி பஞ்ச குரோஸ தலங்களை வழிபட்டு மகாமகத் தீர்த்தத்தில் நீராடி காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் (மகாமகக் குளம் வடகரையில்) எழுந்தருளினார். ஸ்ரீநவ கன்னிகைகள் மகாமகத் திருக்குளத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளி வீற்றிருக்கின்றார்கள்.

சிவபெருமான் கைலாயத்திலிருந்து நவகன்னிகைகள் ஒன்பதின்மரையும் மகாமகத் திருக்குளத்திற்கு அழைத்து வந்து பாபங்களைப் போக்கினார். அவர்கள் கும்பகோணம் காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் மேற்கு முகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
அமிர்த கலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம் அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோயிலாகும். அமிர்த கலசம் உடைந்த பொழுது அங்கிருந்த மண்ணைப் பிசைந்து சிவலிங்க வடிவமாக்கி பூஜித்து சிவபெருமான் அதனுள் உறைந்தார்.
அமிர்த கலசத்திலிருந்து வில்வம் விழுந்த இடம் அருள்மிகு நாகேஸ்வரர் (வில்வவனேஸ்வரர்) திருக்கோயிலாகும்.
அமிர்த கலசத்திலிருந்த உறி (சிக்கேசம்) விழுந்த இடம் அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயிலாகும்.
அமிர்த கலசத்திலிருந்த பூணூல் (யக்ஞோபவிதம்) விழுந்த இடம் கௌதமேஸ்வரர் (உபவீதநாதர்) திருக்கோயிலாகும்.
அமிர்த கலசத்திலிருந்த தேங்காய் (நாரிக்கேளம்) விழுந்த இடம் அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயிலாகும்.
சிவபெருமான் வேடுவ உருவம் தாங்கி அமிர்த கலசம் உடைக்க பாணம் எய்த இடம் அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோயிலாகும்.
அமிர்த கலசத்திலிருந்த புஷ்பங்கள் விழுந்த இடம் அருள்மிகு ஆதிகம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயிலாகும். (மாலதிவனம்)
அமிர்த கலசத்திலிருந்த மற்ற உதிரிப் பாகங்கள் விழுந்த இடம், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலாகும்.
அமிர்த கலசம் உடைந்தபோது அமிர்தத் துளிகள் கொட்டையூர் அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயிலின் கிணற்றில் சிதறியது.
அமிர்த கலசத்திலிருந்து சந்தனம் விழுந்த இடம் அருள்மிகு காளஹஸ்தீசுவரர் திருக்கோயிலாகும்.
அமிர்த கலசத்தின் நடுபாகம் விழுந்த இடம் அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயிலாகும்.

ஒரே நேரத்தில் 12 சைவத் திருக்கோயில்களின் சுவாமிகள், ஒரே இடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது கும்பகோணம் மகாமகத்திருக்குளத்தில் மட்டுமே. இந்நிகழ்வு வேறு எங்கும் கிடையாது.

நவநதிக் கன்னியர் சிறப்புகள்

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ஒன்பது நதிகளும் நவகன்னியராக இருந்து அருள்பாலிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயற்பெயரோடு கூடிய 12 திருநாமங்கள் உள்ளன. பூஜிக்கின்றபோது இத்திருநாமங்களைச் சொல்லி வழிபடுதல் வேண்டும். (12 X 9 = 108). இவையே மந்திரங்களாகவும் அமைகின்றன.

கங்கை:

கங்கா, திரிபதகை, தேவி சீமதி, சானவி, வீட்டு மாதா, உலோக மாதா, சுபர்த்துனி, மேருசம்பவை, திரிலோசனை, சடோற்பூதை, சத்த தாரா, சுபாவாகை என்பனவாகும். இவ்வன்னையை வழிபடுவதால் துன்பம் தொலைந்து கயிலை கிட்டும். இத்தீர்த்தத்தில் மகாமகத்தன்று நீராடினால் கங்கையில் 16,000 தடவை நீராடிய புண்ணியத்தை ஒருங்கே பெறலாம். சாயுச்சிய பதவி கிடைக்கும்.

யமுனை:

யமுனை, சூரிய சம்பூதை, காளிந்தி, யமசுவசா, சுத்தை, காமதை, சாந்தை, அனந்தை, சுபார்ங்கின, விசுப்பாதை, வசுமதி, வசுப்பீரீதை என்பனவாம். இவ்வன்மையை வணங்கினால் நிறைந்த செல்வத்தை அளிப்பாள்.

நருமதை:

நருமதை, சோமமுகி, சோமசேகரப் பிரியை, மருமபீவி, சுமாமார்த்தினி, தரிசனி, சுப்பிரபை, சுலபை, புண்ணியை, இரேவை, மேகல கன்னிகை, சருவக்கியை என்பனவாம். இவ்வன்னையை வணங்கினால் வச்சிராயுதம் போன்ற பாவத்தைத் தீர்ப்பாள்.

சரஸ்வதி:

சரஸ்வதி, சாந்தவை, சமரூபி, சமப்பிரதை, ஞானவயிராக்கியதை, ஞானரூபி, அஞ்ஞான விபேதினி, மேரு கோடரசம்பூதை, மேகநாத நுவாத்தினி, பிரதீசி, சண்டேகேஸ்வர், மாயா விச்சேதகாரிணி என்பனவாம். இவ்வன்னையை வணங்கினால் மெய்ஞானமும் வைராக்கியமும் கிடைக்கும்.

காவேரி:

பொன்னி, விதிசம்பூதை, கலியாணி, சாமதாயினி, கலியாண தீர்த்த ரூபி, சையாசவ உற்பவை, உலோபாமுத்திரா, சுவாசாஸ்யாமா, கும்ப சம்பவ வல்லவை, விண்டு மாயை, கோளிமாதா, தக்கணபதசாவனி என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் அகம்பாவம் நீங்கும். நினைத்தவற்றைப் பெறலாம்.

கோதாவரி:

கோதாவரி, கோதை, கவுதமவநாசிநி, சத்தஸ்ரோதை, சத்தியவதி, சத்தியரூபி, சுவாசினி, கலபை, சூக்குமதே காட்டியை, வேகாவர்த்தை, மலாபிகை, பத்தவிட்டதை என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் நினைத்தவற்றைத் தந்திடும் இயல்பினள்.

துங்கபத்திரா:

கன்னியா நதி, தேவி, கனகாயை, கரூச்சை, கலாவதி, காமதை, காமப்பிரிய வரப்பிரதை, காளி, காமப்பிரதை, காலதாயினீ, கடமாகலை, துங்கபத்திரா என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் 16,000 அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறலாம்.

கிருஷ்ணவேணி:

பயோட்டனி, பாபகாரிணி, பாலகை, பரிமோதினி, பூரனை, பூர்ணாவதி, மோகை, மேகாவதி, சுபை, அந்தர்வேகதி, வேகை, சரிவேச்சித பலப்பிரதை என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் காமதேனு வாழும் உலகம் கிட்டும்.

சரயு:

சரயு, சண்டவே காட்டியை, இட்சுவாகு குல வல்லபை, ராமப் பிரியை, சுபாராம தடத்துவய விராசிதை, சரப்பிர விருத்தை, எக்யாங்கை எக்கிய பலதாயிணி, சீரங்க வல்லபை, மோகதாயினீ, பூரண காதை, பத்த விட்டதான சவுண்டீரை என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் கொடுங்கலியால் (சனி) படும் துயரைப் பறந்தோடச் செய்வாள்.

மகாமகத் திருக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் திருக்கோயில்கள்
அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு சோமேஸ்வரசுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு கோடீஸ்வரசுவாமி திருக்கோயில், கொட்டையூர், கும்பகோணம் நகர்.
அருள்மிகு காளஹஸ்தீசுவரர் திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு கௌதமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு அமிர்தகலசநாதசுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு பாணபுரீசுவரர் திருக்கோயில், பாணாதுறை, கும்பகோணம் நகர்.
அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு ஆதிகம்பட்டவிஸ்வநாத திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு ஏகாம்பரேஸ்வர சுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.
மகாமக குளத்திலுள்ள தீர்த்தங்களும் பலன்களும்
இந்திர தீர்த்தம் – வானுலக வாழ்வு அளிக்கும்
அக்கினி தீர்த்தம் – பிரமஹத்தி நீங்கும்
யம தீர்த்தம் – யம பயமில்லை
நிருதி தீர்த்தம் – பூத, பிரேத, பைசாச குற்றம் நீங்கும்
வருண தீர்த்தம் – ஆயுள் விருத்தி உண்டாகும்
வாயு தீர்த்தம் – பிணிகள் அகலும்
குபேர தீர்த்தம் – சகல செல்வங்களும் உண்டாகும்
ஈசான தீர்த்தம் – சிவனடி சேர்க்கும்
பிரம தீர்த்தம் – பிதிர்களைக் கரையேற்றும்
கங்கை தீர்த்தம் – கயிலை பதவி அளிக்கும்
யமுனை தீர்த்தம் – பொன்விருத்தி உண்டாகும்
கோதாவிரி தீர்த்தம் – இஷ்ட சித்தி உண்டாகும்
நருமதை தீர்த்தம் – திடகாத்திரம் உண்டாகும்
சரசுவதி தீர்த்தம் – ஞானம் உண்டாகும்
காவிரி தீர்த்தம் – புருஹார்த்தங்களை நல்கும்
குமரி தீர்த்தம் – அசுவமேத பலன்களைக் கொடுக்கும்
பயோடினி தீர்த்தம் – கோலாகலம் அளிக்கும்
சரயு தீர்த்தம் – மனக்கவலை தீரும்
கன்னிகா தீர்த்தம் (அறுபத்தாறு – துன்பம் நீங்கி இன்பம் கோடி தீர்த்தம்) கைகூடும்
தேவ தீர்த்தம் – சகல பாவங்களும் போக்கி தேவேந்திர பதவி கிட்டும்.

நீராடுவதன் நோக்கம்

புண்ணிய தீர்த்தங்களிலும், நதிகளிலும், கடலிலும் நீராடுவது புண்ணியச் செயலாகப் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் பிறவி ஈடேறுவதற்காக தீர்த்த யாத்திரை செய்பவர்கள் அத்தியாவசியமாகக் கருதுவர். காசி- ராமேசுவர யாத்திரை போன்றவை இதில் அடங்கும். புண்ணிய நதிகள் சங்கமம் ஆவதால் கடல் நீராடுதலை விசேஷ நாட்களில் மேற்கொள்வர். மகோதய புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வதும்,பித்ருக்களை வழிபடுவதும் மிகுந்த பலன்களை அளிக்கும்.

பல நேரங்களில் புனித நீராடுவதன் நோக்கத்தை நாம் மறந்து விடுகிறோம். அது உடல் அழுக்கைக் களைவதற்காக மேற்கொள்வது அல்ல. உள்ளத்து அழுக்கு நீங்குவதே அதன் தனிச் சிறப்பு என்பதை நீராடுபவர் ஒவ்வொருவரும் உணர வேண்டும். நான் மகாமகத்திற்குச் சென்று வந்தேன் என்று சொல்லிக் கொள்வதைக் காட்டிலும் அப்படிச் சென்றதால் ஏற்பட்ட ஆன்மலாப அனுபவத்தையே ஒவ்வொருவரும் சிந்தித்து மகிழ வேண்டும். நாம் அங்கு செல்வது கூட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்கோ, கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கோ நிச்சயமாக இல்லை.

ஒவ்வொரு நாளும் பாசிக் குளம் போல மீண்டும் மீண்டும் அழுக்குப் படியும் மனம் நமக்கு உண்டு. அப்பாசியை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அகற்றினால் போதாது. அன்றாடம் மேற்கொள்ளும் சிவ பூஜை,சிவ சிந்தனை ஆகியவை அவ்வப்போது மனத்தைத் தூய்மைப் படுத்தி விடும். அப்படியானால் மகா மகம் எந்தவகையில் தூய்மை செய்யும் எனக் கேட்கலாம். அது பன்னிரண்டாண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் கும்பாபிஷேகம் போன்றது. மனமானது மேன் மேலும் தூய்மை ஆகி இறைவன் அமரும் பெருங்கோயிலாக ஆக வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

திருமுறைகளில் மகாமகம்

1. குடமூக்குப் பதிகம்

2. ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
அப்பர் தேவாரம் 6.75.10

3. பூ மருவும் கங்கை முதல் புனிதமாம் பெரும் தீர்த்தம்
மா மகம் தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில்
தூ மருவும் மலர்க் கையால் தொழுது வலம் கொண்டு அணைந்து
காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார்
திருத்தொண்டர் புராணம் 2307

Add Comment

Click here to post a comment