சிவார்ச்சனா சந்திரிகை – பூதசுத்தி:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
பூதசுத்தி
பிருதிவி முதலிய மண்டலங்களை நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்திய தீதை என்னும் ஐந்து கலாமயமாயும், சரீரத்தில் பாதமுதற்கொண்டும், முழங்கால் முதற் கொண்டும், நாபி முதற்கொண்டும், கண்டம் முதற்கொண்டும், புருவநாடு முதற்கொண்டும் இருப்பனவாயும், இருதயம், கண்டம், அண்ணம், புருவநடு, பிரமரந்திரமென்னும்இவற்றைச் சார்ந்திருப்பனவாயும், நூறுகோடி யோஜனை அளவு முதல் மேலும் மேலும் பதின்படங்கு அளவுள்ளனவாயும், நான்கு சதும், பாதிச்சந்திரன், மூன்று கோணம், அறுகோணம், வட்டமென்னுமிவற்றை வடிவமாகவுடையனவாயும், வச்சிரம், இரண்டு தாமரைகள், சுவஸ்திகம், அறுபுள்ளி, ஒரு புள்ளி என்னுமிவற்றை அடையாளமாகவுடையனவாயும், பொன்மை, செம்மை, வெண்மை, கருமை, புகைமை என்னும் நிறங்களையுடையனவாயும், கடினம், திரவகம், சூடு, அசைவு, இடைவெளி என்னுஞ் சுபாவத்தையுடையனவாயும், கந்தம் முதலிய ஐந்து, இரதமுதலிய நான்கு, உருவமுதலிய மூன்று, பரிச முதலிய இரண்டு, சப்தம் ஒன்று ஆகிய இந்தக் குணங்களையுடையனவாயும், பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னுமிவர்களாலதிட்டிடக்கப்பட்டனவாயும், விந்துவுடன் கூடின லகார, வகார, ரகார, யகார, ஹகார ரூபமான பிருதிவி முதலியவற்றின் பீசாக்கரத்துடன் கூடினவையாயும் பாவனை செய்யவேண்டும்.
அவற்றுள், நிவிருத்தி கலையில் பிருதிவிதத்துவம் ஒன்றும், நூற்றெட்டு புவனங்களும், ககாரமான ஒரு எழுத்தும், இருபத்தெட்டுப் பதங்களும், சத்தியோசாதம் இருதயமென்னும் இரண்டு மந்திரங்களும் இருக்கின்றன.
பிதிட்டாகலையில் அப்புமுதல் பிரகிருதி ஈறான இருபத்து மூன்று தத்துவங்களும், ஐந்பத்தாறு புவனங்களும், ககரமுதல் மகரமீறாக இருபத்து நான்கு எழுத்துக்களும், முப்பத்திரண்டு பதங்களும்,வாமதேவம் சிரசு என்னும் இரண்டு மந்திரங்களுமிருக்கின்றன.
வித்தியா கலையில் புருடன் முதல் மாயையீறான ஏழு தத்துவங்களும், இருபத்தேழு புவனங்களும், யகாரமுதல் ஹகாரமீறான ஏழு அக்கரங்களும், இருபத்தொரு பதங்களும், அகோரம் சிகை என்னுமிரண்டு மந்திரங்களும் இருக்கின்றன.
சாந்திகலையில் சுத்தவித்தை, மகேசுவரமென்னும் இரண்டு தத்துவங்களும், பதினெட்டு புவனங்களும், ஹகாரம் க்ஷகாரமென்னுமிரண்டு அக்கரங்களும், பன்னிரண்டு பதங்களும், தற்புருடம் கவசமென்னும் இரண்டு இந்திரங்களுமிருக்கின்றன.
சாந்தியதீ தகலையில் சதாசிவம் சத்தி என்னும் இரண்டு தத்துவங்களும், பதினைந்து புவனங்களும், உயிரெழுத்து பதினாறும், ஒரு பதமும், மூலம் ஈசானம் அஸ்திரமென்னும் மூன்று மந்திரங்களுமிருக்கின்றன.
இந்த முறையில் பதினொரு மந்திரங்கள் மந்திராத்துவாவெனப்படும். வியோம வியாபிமந்திரத்திலிருக்கும் தொண்ணூற்று நான்கு பதங்கள் பதாத்துவாவெனப்படும். ஐம்பது அக்கரங்கள் வர்ணாத்துவாவெனப்படும். இருநூற்று இருபத்து நான்கு புவனங்கள் புவனாத்து£வெனப்படும். முப்பத்தாறு தத்துவங்கள் தத்துவாத்துவாவெனப்படும். நிவிருத்தி முதலிய ஐந்து கலைகள் கலாத்துவாவெனப்படும். இவ்வாறு பிருதிவி முதலிய மண்டலங்களை எல்லா அத்துவாக்களிலும் அடங்கினவையாகப் பாவனை செய்ய வேண்டும்.
அல்லது சுருக்கமான முறையில் எல்லா அத்துவாக்களிலும் அடங்கினவையாகப் பாவனை செய்யவேண்டும். எவ்வாறெனில்,
சத்தியோஜாத முதலிய ஐந்து மந்திரங்கள் மந்திராத்துவாவெனப்படும், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதமென்னும் ஐந்து அவத்தைகள் பதாத்துவாவெனப்படும். பாத முதலாக வேனும் இருதயம் முதலாக வேனும் பிருதிவி மண்டலமுதலிய ஐந்ததானங்கள் புவனாத்துவாவெனப்படும். அகார முதலிய மூன்றெழுத்துக்களும் விந்தும் நாதமும் என்னும் இவையேனும் மூலமந்திரமான ஐந்தெழுத்துக்களேனும் வர்ணாத்துவாவெனப்படும். ஐந்து கலைகள் கலாத்துவாவெனப்படும். * இவ்வாறே எல்லா அத்துவாக்களிலும் பிருதிவி முதலிய மண்டலங்களை அடங்கினவையாகப் பாவித்து மேலே கூறியபடி வடிவம், நிறம், தொழில், அடையாளம், பீசாக்கரம் என்னும் இவற்றுடன் கூடினவையாகவாவது பாவனைசெய்து சோதனை செய்ய வேண்டும். ( * இந்தச் சுருக்கமுறையில் தத்துவாத்துவா கூறப்படவில்லை.)
இவ்வாறு பூதசுத்தியானது பிருதிவி முதலியவற்றை லயிக்கச்செய்தல் ரூபமாயும், அவற்றின் குணங்களை நீக்குதலால் தேகத்தைத் தகிக்கச் செய்தல் ரூபமாயும், தேகத்தின் வெளியிலுள்ள தோஷங்களையும் உள்ளேயுள்ள தோஷங்களையும் தகிக்கச் செய்தல் ரூபமாயும், அவ்வற்றின் குணங்களை நீக்காமல் தேகத்தைமாத்திரம் தகிக்கச் செய்தல் ரூபமாயும், தேகதகனமின்றியே அவ்வவற்றின் குணங்களை லயிக்கச் செய்தல் ரூபமாயும், பந்தத் தன்மையனைத்தும் நீங்கினதாக அனுசந்தானஞ் செய்தல் ரூபமான பாசநீக்கமாத்திர ரூபமாயும் இருக்கும்.
எல்லாவிதமான இந்தச் சுத்தியும் உத்காதத்துடன் கூடினதெனவும், கூடாததெனவும் இருதிறப்படும்.
அவ்வவற்றின் குணங்களை லயிக்கச் செய்வதானது தனித்தனி சோதன ரூபமாயும், ஒன்றாலொன்று சோதன ரூபமாயும் இருதிறப்படும்.
பூதங்களைச் சிந்தித்தலும் எல்லா அத்துவாக்களிலும் அடங்கினவை ரூபமாயும், வடிவமுதலியவற்றைச் சிந்தித்தல் ரூபமாயும் இருதிறப்படும்.
எல்லா அத்துவாக்களிலும் அடங்கியிருப்பதாகச் சிந்தித்தலும் பெருக்கம் சுருக்கம் என்றிருவகைப்படும்.
இவ்வாறு கூறப்பட்ட பூதசுத்திகளுள் தன்னுடைய பூர்வாசாரத்தையும், தேசத்தையும், காலத்தையும், அனுசரித்து யாதானுமோர் பூசுத்தியை அனுட்டிக்கவேண்டும். இவ்வாறு பூகசுத்தி ரூபமான தேகசுத்தி கூறப்பட்டது