சிவார்ச்சனா சந்திரிகை – தீபோபசாரம்:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
தீபோபசாரம்
தீபோபசார பாத்திரமானது தூபபாத்திரத்திற்குக் கூறப்பட்டவாறு பாதம் நாளம் என்னும் இவற்றுடன் கூடினதாயும், மூன்றங்குல அளவுள்ளதாயும், யானையின் அதரத்தின் சொரூபம்போல் சொரூபத்தையுடையதாயு மிருக்கவேண்டும். திரியானது கற்பூரத்தாலாவது, ஆடையின் துண்டினாலாவது, நூலினாலாவது, பஞ்சினாலாவது செய்யப்பட்டிருத்தல் வேண்டும். திரியை நான்கு அங்குல நீளமுள்ளதாயும், நான்கு மூன்று இரண்டு ஒன்று என்னும் இந்த அங்குலமுள்ள சுடருக்குரிமையான அகலத்தை யுடையதாயுஞ் செய்யவேண்டும். திரி ஆடையின் துண்டால் (கிளிவால்) செய்யப்படின் சத்திக்குத் தக்கவாறு உத்தமம், மத்திமம், அதமமென்னும், முறையில் கற்பூரம், அகில் சந்தனமென்னும் இவற்றின் பொடியால் நிரம்பப் பெற்றதாகச் செய்யப்படல் வேண்டும். தீபத்திற்குக் கபில வருணமுடைய பசுவின் நெய் உத்தமம். ஏனை பசுக்களின் நெய் மத்திமம். ஆட்டு நெய்யும் எள் நெய்யும் அதமம். ஒட்டகை எருமை என்னுமிவற்றின் நெய்யும் மரம், விரை முதலியவற்றினின்று முண்டான நெய்யும் விலக்கப்படல் வேண்டும். இது ஒரு பக்கம்.
இன்னுமொரு பக்கம் வருமாறு:- எல்லாப் பசுக்களின் நெய்யும் உத்தமம். ஆட்டு நெய்யும் எருமை நெய்யும் மத்திமம், தீநாற்றமுடைய வேம்பு, புங்கம், ஆமணக்கு என்னுமிவற்றின் நெய்யை விலக்க வேண்டும். எண்ணெயனைத்துமே அதமம்.
மேலே கூறப்பட்டவாறு இலக்கணம் வாய்ந்த பாத்திரத்தில் திரியைச் சேர்த்துத் தீபத்தையேற்றி, அந்தத் தீபத்தை நிரீக்ஷணம் முதலியவற்றால் சுத்திசெய்து, புட்பங்களால் அருச்சித்து, தீபமுத்திரை காட்டி, தீபத்தை உயரே தூக்கிப் பிடித்துக் கொண்டு மணியடித்துக் கொண்டே ஹாம் ஹெளம் சிவாய தீபம் சுவாகா என்று சொல்லிக்கொண்டு, நேத்திரங்களில் சமர்ப்பித்து, தூபத்தைப்போல் இந்தத் தீபத்தையும் கிரீட முதற்கொண்டு பாதம் முடிய அந்தந்த வர்ணங்களின் நியாஸபாவனையுடன் சுற்றவேண்டும். பின்னர் சிவபெருமான் பொருட்டு ஆசமனீயம் அருக்கியங்களைக் கொடுத்து அவர் திருப்தியடைந்ததாகப் பாவித்து, ஓ எம்பெருமானே! போகாங்களைப் பூசிக்கின்றேன் ஆணை செய்ய வேண்டுமென்று விண்ணப்பித்துக் கொண்டு ஆவரண பூஜையைச் செய்ய வேண்டும்.